பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


தக்க வயதடைந்த பிறகு, சாகர குமாரர்கள் அறுபதினாயிரவரும், தேசத்தைச் சுற்றிப்பார்க்க விரும்பினார்கள், விரும்பியபடியே அவர்கள் சக்கரவர்த்தியிடம் போய் உத்தரவு கேட்டார்கள். அவர்கள் விருப்பத்திற்கு இணங்கிய சக்கரவர்த்தி, ஸ்திரீ ரத்தினம் ஒன்று தவிர ஏனய ஆறு ஜீவரத்தினங்களையும் ஏழு அஜீவரத்தினங்களையும் அவர்களுக்குத் துணையாகக்கொடுத்து விடை கொடுத்து அனுப்பினான். பிறகு, சகர குமாரர்கள் புறப்பட்டுச்சென்று பலநாடு நகரங்களைச் சுற்றிப்பார்த்த பிறகு கடைசியாக அஷ்டாபதமலைக்கு வந்து சேர்ந்தார்கள்: அஷ்டாபதமலை என்பது கயிலாயமலை. இதற்கு ஹரார்த்திரி என்றும் ஸ்படிகாத்திரி என்றும் வேறு பெயர்கள் உண்டு.

(இந்தக் கயிலாய மலையில், சகர குமாரர்களின் முன்னோறான ரிஷபதீர்த்தங்கரர் வீடுபேறடைந்தார். ரிஷபதீர்த்தங்கரரின் மகனான பரத சக்கரவர்த்தி, ரிஷபதீர்த்தங்கரர் வீடுபேறடைந்த இடமாகிய இந்தமலையிலே விலைமதிக்கமுடியாத செல்வங்களைக்கொண்டு சிறந்ததோர் திருக்கோயில் அமைத்திருந்தார். இத்திருக்கோயிலுக்கு எதிரில், ரிஷபதீர்த்தங்கரரின் உபதேசங்களைச் செவிசாய்த்துக்கேட்பது போன்று தன்னுடைய (பரதச் சக்கரவர்த்தியுடைய) உருவத்தையும் அவர் அமைத்திருந்தார்.)

கயிலாயமலைக்கு வந்த சாகர குமாரர்கள், பரத சக்கரவர்த்தி கட்டிய இக் கோயிலுக்குள் சென்று வணங்கினார்கள். பிறகு, மிக்க அழகுள்ளதும் விலைமதிக்கப்படாததுமான இப் பொற் கோயிலைப் பாதுகாக்கா விட்டால், வரப்போகிற துஷ்மயுகத்தில் மக்கள் இக்கோயிலிலுள்ள இரத்தினங்களயும் பொன்னையும் கொள்ளையடிப்பார்கள் என்று நினைத்து, அக் கோயிலுக்குப் பாதுகாப்பு அமைக்க முயன்றார்கள். கோயிலைச் சுற்றிலும் அகழிதோண்டி அதில் நீரை நிறப்பி விட்டால் ஒருவரும் கோயிலுக்குள் சென்று கொள்ளையிடமுடியாது என்று கருதினார்கள், கருதினபடியே, தம்மிடம் இருந்த அஜீவரத்தினங்களில் ஒன்றான, தண்ட ரத்தினத்தினால் கோயிலைச் சுற்றிலும் அகழி தோண்டினார்கள். ஆற்றல் மிக்க அந்தத் தண்ட ரத்தினம் ஆயிரம் யோசனை ஆழமாக நாகலோகம் வரையில் அகழ்ந்து விட்டது. அதைக்கண்ட நாகர்கள் அஞ்சினார்கள். ஜுவலனப்பிரபன் என்னும் நாகராசன் அவ்வகழியின் வழியாகப் பூலோகத்துக்கு வந்து கடுங்கோபத்துடன் சகர குமாரர்கணப்பார்த்து, "பவன லோகத்தை ஏன் அழிக்கிறீர்கள். அஜிதநாத சுவாமியின் தம்பியாகிய சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகளாகிய நீங்கள் இத் தகாத செயல ஏன் செய்கிறீர்கள்?" என்று வினவினான்.