பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாகராசன் கோபத்தோடு வினவியதைக் கேட்ட, சாகரரில் மூத்தவனான ஜாலு, "உமது நாகலோகத்தை அழிக்க நாங்கள் நினைக்கவில்லை. ரிஷப தீர்த்தங்கரரின் கோயிலைச்சூழ்ந்து அகழி தோண்டினோம். தண்ட ரத்தினத்தின் ஆற்றலினால், அகழி நாகலோகம் வரையில் ஆழமாக அகழப்பட்டது. இனி உங்களுக்குத் துன்பம் உண்டாகாதபடி, பார்த்துக் கொள்கிறோம்" என்று விடையளித்தான். நாகராசன் "எங்களுக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள்" என்று கூறி, மறுபடியும் நாகலோகம் போய்விட்டான்.

பிறகு சாகர குமாரர்கள், தம்மிடமிருந்த தண்டரத்தினத்தின் உதவியினால், கங்கையின் நீரைத் திருப்பிக் கொண்டுவந்து தாங்கள் தோண்டிய அகழியில் பாய்ச்சினார்கள். கடல் நீர் பெருக்கெடுத்தது போன்று கங்கை நீர் புரண்டோடி வந்து ஆயிரம் யோசனை ஆழமுள்ள அகழியை நிறப்பிற்று.

கங்கை, பாதாளம் வரையில் சென்று பாயவே, நாகலோகம் வெள்ளக்காடாயிற்று. நாகர்கள் அஞ்சி நடுங்கினார்கள். நாகராசனாகிய ஜுவலனப்பிரபன், அங்குசத்தால் குத்துண்ட மதயானை வெஞ்சினம் கொண்டதுபோல், கடுஞ்சினங் கொண்டு நாக குமாரருடன் புறப்பட்டுச் சாகரர் இடம்வந்து தீப்பொறி பறக்கும் தன் விஷக்கண்களினால், அறுபதினாயிரவரையும் விழித்துப்பார்த்தான். அப்பார்வையினால், சாகரர் அறுபதினாயிரவரும் எரிந்து சாம்பலாயினர்.

குமாரர்கள், இறந்த செய்தியைக்கேட்ட சகர சக்கரவர்த்தி ஆற்றொணாத்துயரம் அடைந்தார். இதற்குள், அரண்மனை வாயிலில் பெருங் கூட்டமாக மக்கள் கூ.டி பெருங்கூச்சலிட்டழுவதைக் கேட்டு, அவர்கள அழைத்து விசாரித்தார். "சாகர் குமாரர்கள் கங்கையை அகழியில் திருப்பி விட்டபடியால் அந்நீர் அகழியை நிறப்பியதோடு மேலும் மேலும் வெள்ளப் பெருக்கெடுத்து வந்து அங்குள்ள காடுகளையும் அவர்களையும் அழித்துவிட்டது. மேன் மேலும் வெள்ளம் பெருகிவருகின்றது. எங்களைக் காப்பாற்றவேண்டும்" என்று அவர்கள் முறையிட்டார்கள். இதைக்கேட்ட, சகர சக்கரவர்த்தி, தன்னுடைய பேரனான பகீரதனை அழைத்து, "நீ போய் கண்ட்டரத்தினத்தின் உதவியினால், ஊரை அழிக்கும் கங்கையைக் கொண்டுபோய், கடலிற் பாய்ச்சிவீட்டு வா" என்று கட்டளை யிட்டார். பாட்டன் கட்டளைப்படி, பகீரதன் கயிலாய மலைக்குச் சென்று தண்ட இரத்தினத்தின் உதவியினால் கங்கையை இழுத்துக் கொண்டு போய் கட்லில் பாயச்செய்தான்.

இதுதான். திரிசஷ்டி சலாகாபுருஷர் [அறுபத்து மூன்று பெரியார்] சரித்திரம் என்னும் ஜைன நூலிலே அஜிதநாத சுவாமி சரித்திரத்திலே கூறப்படுகிற சகர சாகரர்களின் கதை. இந்தக் கதையைத்தான், மகாபலி புரத்தில் உள்ள, சிற்ப உருவத்தில் விளக்கமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இனி, இந்தக்கதைக்கும் மகாபலிபுரத்துச் சிற்பத்துக்கும் உள்ள பொருத்தங்களை ஆராய்வோம்.