பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிற்பக் காட்சியின் விளக்கம்.

படம் 2. காண்க. இது மகாபலிபுரத்துச் சிற்பத்தை எதிர் நின்று பார்ப்பவருக்கு இடது புறத்தின் மேல்பகுதித் தோற்றம். இந்தப் பகுதியின் வலது புறத்தில், ஒடுங்கிய வயிறும் வளர்ந்த தாடியும் உள்ள ஒருவர், தனது இரண்டு கைகளையும் தலை மேல் தூக்கி ஒற்றைக்காலில் நின்று தபசு செய்கிறார். இது சகர சக்கரவர்த்தியின் உருவம்: கண்டப்பிரபாத மலையில் தபசு செய்கிறதைக் குறிக்கிறது. இவருக்கு எதிரில் தண்டாயுதத்துடனும் நான்கு கைகளோடும் ஒரு தெய்வம் நிற்கிறது. இது நாட்யமாலகன் (இந்திரன்) உடைய உருவம், இந்திரனுக்குரிய தண்டாயுதம் கையில் காணப்படுகிறது. இங்கு ஒரு ஐயம் ஏற்படக்கூடும். அதாவது, இந்திரனுக்கு நான்கு கைகள் உண்டா என்கிற கேள்வியுண்டாகும். சைவ வைணவ சிற்ப சாஸ்திரப்படி, இந்திரனுக்கு இரண்டு கைகள் தான் உண்டு. ஆனால், ஜைன சிற்ப சாஸ்திரக் கருத்துப்படி. இந்திரனுக்கு நான்கு கைகள் உண்டு, நான்கு கைகளையுடைய இந்திரனுடைய சிற்ப உருவம், வேறு ஜைனக் கோயில்களில் இன்றும் காணப்படுகிறது. ஆகையால் இந்த உருவம் - நாட்யமாலகன் (இந்திரன்) என்னும் தெய்வம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

இந்தச் சகர சக்கரவர்த்தி நாட்யமாலகன் உருவங்களுக்குப் பக்கத்தில் மிகக்குறுகிய குறள் உருவங்கள் குறுகிய கைகால்களுடன் காணப்படுகின்றன. இவ்வாறு ஆறு குறள் உருவங்கள் காணப்படுகின்றன. இந்தச் சிற்பப் பகுதியின் இடது கோடியில் இன்னும் இரண்டு குறள் உருவங்கள் காணப்படுவதை நேரில் காணலாம். படத்தில் மறைந்திருக்கின்றன. ஆக மொத்தம் 8 குறள் உருவங்கள் இதில் காணப்படுகின்றன. இவை 8 பூதங்கள் ஆகும். அன்றியும், கிரீடமகுடம் உடையனவாய் ஆகாயத்தில் பறப்பது போல -ஆண் பெண் ஆகிய எட்டு ஜதை தேவர்கள் இதில் காணப்படுகிறார்கள். இந்த எட்டு ஜதை தெய்வ உருவங்களும் எட்டு பூதங்களும் எதைக் குறிக்கின்றன என்றால், சகர சக்கரவர்த்திக்குக் கிடைத்த ஒன்பது நிதிகளில், எட்டு நிதிகளைக் குறிக்கின்றன. (ஒன்பதாவது நிதியைப் பற்றிப் பிறகு விளக்குவேன்.) எட்டு நிதிக்கும் எட்டுத் தலைவராக எட்டு தேவர்களும் காவலாக எட்டாயிரம் பூதங்களும் இருந்ததை இந்தச் சிற்பப்பகுதி குறிக்கிறது. இதில், எட்டு நிதிகளின் தலைவர்களான எட்டு தேவர்களும் மனைவியரோடு எட்டு ஜோடியாகக் காட்டப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பெயரும் எட்டு நிதிகளின் பெயரே