பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

நாகராசன், பாம்பரசன் ஆகையால், (அகழியில் நாகராசன் காட்டப்பட்டிருப்பது போல) பாம்பு உருவத்துடன் காட்டப்படாமல், யானை உருவத்துடன் ஏன் காட்டப்பட்டான் என்கிற கேள்வி உண்டாகிறது. நாகலோகத்தில், கங்கை நீர் பாய்ந்து வெள்ளக் காடாகிய போது, நாகராசனாகிய ஜுவலனப்பிரபன், "அங்குசத்தால் குத்துண்ட மதயானை வெஞ்சினம் கொண்டது போல "கடுஞ்சினம் கொண்டு சாகரரைச் சினந்து நோக்கினான் என்று இக்கதை எழுதிய காவியப்புலவர் கற்பனை செய்து எழுதியிருக்கிறார். நாகம் என்னும் சொல்லுக்கு யானை என்றும், பாம்பு என்றும் இரண்டு அர்த்தங்கள் இருக்கிறபடியால், இக்காவியப் புலவர் இரண்டு பொருளிலும், சிலேடையாக இச்சொல்லை அமைத்து எழுதியிருக்கிறார். காவியப்புலவர் இவ்வாறு சிலேடையாகக் கூறிய கருத்தை ஓவியப்புலவராகிய சிற்பிகளும், சிலேடையையும், உபமானத்தையும் தமது சிற்பக்கலையில் அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். காவியப் புலவர்களை ஓவியப்புலவர்கள் எவ்வளவு நுட்பமாகப் பின்பற்றிச் சிற்பத்தைச் செய்திருக்கிறார்கள் என்பது இதனால் நன்கு விளங்கும். அன்றியும் சிற்பிகள் யானையை அமைத்திருக்கிற இடத்தில், ' நாகராசன் உருவத்தைப் பாம்பு உருவமாக அமைத்திருந்தால் இந்தச் சிற்பம் இவ்வளவு கம்பீரமாகவும் இவ்வளவு அழகாகவும் விளங்குமா என்பதை யோசித்துப் பார்த்தால் இதன் சிறப்பு நன்கு விளங்கும்.

படம் 5 காண்க, இந்தப் பகுதியில் மனிதர் சிலர் காணப்படுகின்றனர். இவர்களில் ஒரு ஆள், தனது இடதுதோளின் மேல் குடம் ஒன்றை வைத்துக் கொண்டு வலது கையினால் எதையோ தண்ணீரில் எறிவது போன்று காணப்படுகிறது. இந்த உருவத்தைச் சிலர், சுவாமிக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகக் குடத்தில் நீர் கொண்டு போகிற அர்ச்சகன் என்று கருதுகிறார்கள். இது தவறு, குடத்தில் இருப்பது இறந்தவர் எலும்பு. அதை இந்த ஆள் நீரில் போடுகிறார். அதாவது இறந்தவர் எலும்புகளை ஆற்றில் போடுகிற வழக்கத்தை இந்தச்சிற்பம் காட்டுகிறது. பகீரதன் கங்கையைக் கடலுக்கு இழுத்துச் சென்ற போது. இறந்து போன சாகரர்களுடைய எலும்புகளைக் கங்கை அடித்துக்கொண்டு போயிற்று என்றும், அது முதல் இறந்தவர் எலும்பைக் கங்கையில் போடுகிற வழக்கம் ஏற்பட்டதென்றும் அஜிதநாகதீர்த்தங்கரர் புராணம் கூறுகிறது. ஆகவே, இந்தச் சிற்பம், இறந்தவர் எலும்பைக் கங்கையில் போடுகிறதைக் காட்டுகிறது.

இந்த உருவத்தின் பக்கத்தில் இன்னொரு ஆள் எதையோ ஒரு பொருளைக் கையில் தூக்கி வைத்திருப்பது போல் காணப்படுகிறது. இதை, கங்கையில் குளித்து துணியைப் பிழிகிறான் என்று சிலர் கூறுவர். இது தவறு. துணியைப் பிழிவது போல் இல்லை இது கனமான பொருளாகக் காணப்படுகிறது. சிலர் இப்பொருளைக் Cornicopia என்று கூறுகிறார்கள். Cornicopia என்பது கிரேக்க உரோம தேசங்களில், உணவுப் பொருள்களின் அபரிமிதமான விளைச்சலக் காட்டுவதற்காகச் சிற்பிகளும் ஓவியர்களும் காட்டுகிற ஒரு அடையாளம்.