பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

ஜாவா, சுமாத்ரா முதலிய நாடுகளில் இருந்தும் சென்னைக்கு வருகிற யாத்திரிகர்கள் மகாபலிபுரத்திற்கு வந்து இங்குள்ள குகைக் கோயில்களையும், கற்றேர்களையும், பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் கண்ணாறக்கண்டு மனமாற மகிழ்ந்து செல்கிறார்கள். இந்தியா தேசத்தில், சிற்பக்கலைப் பெருமையினால் சிறப்படைக்துள்ள பல இடங்களில் மகாபலிபுரமும் ஒன்று. சென்னை அரசாங்கத்தார் ஞாயிற்றுக்கிழமைதோறும் மகாபலிபுரத்திற்கென்று தனிபஸ் வண்டி விடுகிறார்கள் என்றால், இங்குள்ள சிற்பக்கலைகளின் சிறப்பையும் அழகையும் விளக்கிக் கூற வேண்டுமோ?

இந்தச் சிறு நூலிலே, நாம் ஆராயப்புகுவது, மகாபலிபுரத்திலே இருக்கிற அர்ச்சுனன் தபசு என்று பெயர் வழங்கப்படுகிற ஒரு சிற்பத்தைப் பற்றித்தான். இந்தச் சிற்பம் ஒரு கற்பாறைக் குன்றில் வெகு அழகாகச் செதுக்கப் பட்டிருக்கிறது. இக்கற்பாறைக் குன்றின் கிழக்குப்பக்கம், நெடுஞ்சுவர்போன்று செங்குத்தாக அமைந்திருக்கிறது. சுமார் 96 அடி நீளமும் 43 அடி உயரமும் உள்ள இந்தச் செங்குத்தான பாறையிலே, கைதேர்ந்த சிற்பிகள் பல அழகான உருவங்களை அமைத்திருக்கிறார்கள். இந்தச் சிற்பம், பார்ப்பவர் கண்களையும் மனத்தையும் கவர்ந்து மிகக் கம்பீரமாகவும் அழகாகவும் காணப்படுகிறது. கி. பி. 7- ஆம் நூற்றண்டிலே, அதாவது இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னே அமைக்கப்பட்ட இந்தச் சிற்பம், கடம் காற்றினாலும் மழை வெயிலினாலும் தாக்குண்டு சிறிது மழுங்கிவிட்ட போதிலும், இன்னும் அதன் அழகும் கம்பீரமும் குறையாமல் மக்கள் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. (படம் 1 காண்க.)

இந்தச் சிற்ப உருவம், அர்ச்சுனன் தபசு என்னும் கதையைக் குறிக்கிறது என்று சிலர் கருதுகிறார்கள். அதாவது மகாபாரதத்திலே வன பர்வத்தில் கூறப்படுகிற, அர்ச்சுனன் தபசு செய்து சிவனிடம் பாசுபதாஸ்திரம் பெற்ற கதையைக் காட்டுகிறது இந்தச்சிற்பக் காட்சி என்று சொல்லுகிறார்கள். 1914-ஆம் ஆண்டில், பிரான்ஸ் தேசத்து அறிஞரான M. Victor Goloubonw என்பவர், இந்தச் சிற்பக்காட்சி யை நேரில்வந்து பார்த்தபோது, இது அர்ச்சுனன் தபசு அல்ல என்றும், இராமாயணம் பால காண்டத்தில் கூறப்படுகிற பகீரதன் தபசு என்னும் கதையை இது காட்டுகிறது என்றும் தமது கருத்தை வெளியிட்டார். அதன் பிறகு, இவர் கூறிய கருத்து தான் உண்மை என்று பலர் அபிப்பிராயப்படுகின்றனர்.

ஆனால், இந்தச் சிற்பக் காட்சியை நேரில் போய் ஊன்றிப் பார்த்துக் கூர்ந்து பவனித்தால், இது அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற கதையும் அல்ல, பகீரதன் தபசு செய்து கங்கையைப் பூலோகத்துக்குக் கொண்டுவந்த கதையும் அல்ல என்று தெரியவருகிறது. ஏனென்றல் இதில் காணப்படும் சிற்ப உருவங்களுக்கும் இக்கதைகளுக்கும் பொருத்தம் காணப்படவில்லை இந்தச் சிற்பத்தில், ஒற்றைக் காலில் நின்று