பக்கம்:மதன கல்யாணி-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 175

நினைவுக்கு வரவில்லை. அவன் பேசியதைக் கேட்க, அது கனவோ, உண்மையில் நடந்த சம்பவமோ என்று நான் உடனே சந்தேகித்து விட்டேன். என்னுடைய காதுகளைக்கூட நான் நம்பவில்லை. மகா யோக்கியன் போல நடந்து வந்த அந்தப் பையன் இப்படியும் பேசுவானா என்ற மலைப்பு எனக்குத் தோன்றிவிட்டது. அவன் ஒருவேளை இன்றைய தினம் குடித்து விட்டு வந்திருப்பானோ என்று நினைத்து, நல்ல யோக்கியமான பையன் குடித்து விட்டதனால் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளுகிறான் என்று நினைத்து, அவன் விஷயத்தில் இரக்கங் கொண்டு நான் உடனே வேலைக்காரர்களைக் கூப்பிடாமல், நானே அதட்டி வெளியில் போகும்படி சொன்னேன்; அவன் போகாமல் என்னென்னவோ உளறுகிறான்; கொஞ்சுகிறான்; கூத்தாடுகிறான்; பல்லைக் காட்டுகிறான். அவன் சொன்னதை எல்லாம், அப்படியே எடுத்துச் சொல்ல என் வாய் கூசுகிறது. அவனுடைய ஆசை எல்லாம் என்மேல் விழுந்து விட்டதாம். நான் அவன் விஷயத்தில் இரக்கங்கொண்டு அவனுடைய ஆசையைப் பூர்த்தி செய்யாவிட்டால், அவன் இன்றிரவே விஷத்தைத் தின்று உயிரை விட்டுவிடுவானாம்; பிறகு அந்தப் பழிக்கு நானே ஆளாக வேண்டுமாம். அவன் இந்த மாதிரி பத்து நிமிஷ நேரம் பிதற்றினான். உண்மையில் அவன் குடித்திருப்பதாகவே நினைத்து, நயமாக அவனை வெளியில் அனுப்பிவிடலாம் என்ற எண்ணம் கொண்டு நான் அவனை அப்போது வீட்டுக்குப் போய்விட்டு காலையில் வரும்படி சொல்ல, அவன் மறுக்க, எனக்குச் சகிக்க முடியாத கோபம் வந்து விட்டது. வேலைக்காரர்களை அழைத்து அவனைக் கட்டி வைத்து உதைக்கச் செய்வதாகச் சொல்லிக் கொண்டு கட்டிலை விட்டிறங்கி வாசற்படியண்டை போனேன். அதைக் கண்ட பிறகு அவன் பயமடைந்து ஓட ஆரம்பித்தான்; நான் பின்னாகத் துரத்தினேன். அதற்குள் நீங்கள் வந்தீர்கள். இது வேலைக்காரர்களுக்குத் தெரிவதைவிட தெரியாமல் இருப்பதே நல்லதென்று நினைத்து பேசாமல் வந்து விட்டேன். இவ்வளவு வயதான பெண் பிள்ளையான என்னிடத்திலேயே இவ்வளவு தூரம் வாலையாட்டிய இந்தத் துஷ்டன் ஒன்றையும் அறியாத சிறிய பெண்களிடம் எப்படித் தான் நடந்து கொள்ளமாட்டான்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/193&oldid=649636" இலிருந்து மீள்விக்கப்பட்டது