பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

195


அவன் அதை வாங்கிக் கொள்ளவில்லை. அவனுக்குக் கண்கள் கலங்கின.

“இடது கையிலே மோதிரம் போடப்படாதுன்னு எங்கப்பா சொல்வாரு..."

“.....போட்டுக்காட்டி என்ன? சும்மா ஒரு ஞாபகமா வச்சுக்குங்களேன்."

“இந்த மோதிரமே ஒரு ஞாபகம்தான்! எட்டயாபுரம் பாரதி நூற்றாண்டு விழாப் பேச்சுப் போட்டிக்குப் போனப்ப அங்கே வாங்கினது இது! எனக்குப் பாரதியார் மேலே கொள்ளைப் பிரியம்."

“எனக்கும் கூடத்தான்..."

“அப்போ நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனச்சுக்காம ஏத்துப்பீங்களா மிஸ் சுலட்சணா?"

“என்ன?...சொல்லுங்க வீராசாமி!"

“எனக்குத் தான் வலது கையே போயிடிச்சு. மோதிரம் போட விரலே இல்லை. நீங்க இதை என் அன்பளிப்பா உங்க வலது கையிலே போட்டுக்குங்க.."

-அவள் ஏதோ சொல்ல வாயைத் திறந்து-அப்புறம் இரண்டாவது எண்ணமாக அதைச் சொல்லவேண்டாமென்று எண்ணினாற்போல உதட்டைக் கடித்துக்கொண் டாள். அவன் கெஞ்சினான்.

“ப்ளீஸ்! மாட்டேன்னுடாதீங்க. இது என் அன்பு வேண்டுகோள்."

“ரொம்ப நாளைக்கு முன்னே இதே பூங்காவிலே இதே இடத்திலே இதுமாதிரி ஒரு நண்பன் ப்ரஸண்ட் பண்ணின வைர மோதிரத்தையே ஏலத்துக்கு விட்டு உடல் ஊன முற்றோர் நிதிக்குப் பணம் கொடுத்து உதவினேன்."