பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

முள்வேலிகள்

--என்றெல்லாம் கண்ணனுக்குத் தோன்றியது. வீட்டுக்குத் திரும்பியதும் 'உண்மை விளம்பி'யைப் பிரித்துப் படித்தால் பாகவதரையும் அம்மிணி அம்மாளையும் இரண்டாவது முறையாக நினைத்துப் பார்க்கவே கூசும் நரகல் மொழி நடையில் பச்சை பச்சையாகவும் தாறுமாறாகவும் எழுதியிருந்தது. வேறு யாரும் அதைப் பார்த்துவிடக் கூடாதே என்ற பயத்தோடும் எச்சரிக்கையோடும் அதைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்துத் தெருக் குப்பைத்தொட்டியில் கொண்டு போய்ப் போட்டுவிட்டு வந்தான் கண்ணன். அப்படி மிகுந்த கவனத்தோடு அதை அவன் செய்திருந்தபோதும்கூட, "என்னது? எதையோ ரகசியமாய்ப் படிச்சுட்டுக் கிழிச்சுக் குப்பைத் தொட்டியிலே கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாப்ல இருக்கே?" --என்று அவன் மனைவி சுகன்யா கேட்டே விட்டாள்.

"அதெல்லாம் உனக்கு ஒண்ணுமில்லே! ஆபிஸ் விஷயம்" --என்று மழுப்பினான் கண்ணன். அவள் சிரித்துக் கொண்டே போய்விட்டாள்.

ஆனால் விஷயம் அதோடு முடிந்து போகவில்லை. இரவு ஏழு ஏழரை மணிக்குப் பாகவதரே கையிலே 'உண்மை விளம்பி'யுடன் அவனைத் தேடி வந்தார்.

"உங்க கிட்டக் கொஞ்சம் தனியாப் பேசணும்."

"இதோ வரேன்..."

கண்ணன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பாகவதரோடு சேர்ந்து வெளியே கிளம்பினான். தெருக் கோடியில் கொஞ்சம் ஒதுக்குப்புறமாயிருந்த ஒருமரத்தடிக்கு வந்ததும் பாகவதர் நின்றார்.

"உங்க சிநேகிதர் அன்னிக்கு மிரட்டிட்டுப் போனார்! இது இன்னிக்கித் தபால்லே வந்துது. கன்னாபின்னான்னு எழுதியிருக்கா..."