பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

79

புலவர் நிதி வசூல் என்று ஆரம்பித்தாலே கண்ணனுக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நடுங்கியது. பத்து ரூபாயை ஆயிரத்தொரு ரூபாயாகத் திருத்திய பழங்கதை நினைவுக்கு வந்து வதைத்தது. 'நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி'--என்பது போல் புலவர் அ. அ. க. வை வளர்த்தாலும் சரி, அழித்தாலும் சரி தன்னிடம் நிதி வசூல் என்று நோட்டுப் புத்தகத்துடன் வராமல் இருந்தாலே போதும் என்று கண்ணனுக்குத் தோன்றியது. கடித முகப்பில் தன் பெயரை அ. அ. க. வின் தலைவர் என்று அச்சிட்டிருந்தாலும் தன்னைக் கேட்காமலே அ. அ.க.சார்பில் புலவர் பல காரியங்களைச் செய்வது கண்ணனுக்குப் பிடிக்க வில்லை. லெட்டர் ஹெட்டை வைத்துக்கொண்டே புலவர் ஒரு சங்கத்தை அட்டகாசமாக நடத்தியது கண்ணனுக்கு வியப்பூட்டியது. தன் பெயர் அச்சிட்ட லெட்டர் ஹெட்டை வைத்துக் கொண்டே தனக்கு அவப் பெயர் உண்டாக்கும் சில காரியங்களைப் புலவர் செய்தபோது கண்ணனாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்படிக் காரியங்களை மறுக்கவும் முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல் கண்ணன் திணறினான்.

இப்படி எல்லாம் இருந்தாலும் ஒரே ஒரு செய்தியை மட்டும் புலவர் தன்னிடம் கோள்மூட்டி வத்தி வைத்தபடியே. நம்பினான் கண்ணன். காலனி நலன் நாடுவோர் சங்கம் தன் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவமானப்படுத்தியது முதலிய சகல காரியங்களுக்கும் பின்னணியிலிருந்து சதி செய்தவர்கள் பாகவதரும் அம்மிணியம்மாளும்தான் என்று புலவர் சொல்லி வந்ததை மட்டும் அவன் அப்படியே நூற்றுக்கு நூறு நம்பினான்.