பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

95

"யாரை வேஷம் போடருங்கன்னு சொல்றே?"

"..........................................."

"என்னைத்தானே சொன்னே?"

"பொதுவாச் சொன்னேன்! உங்களுக்கும் பொருந்தும்னா எடுத்துக்குங்களேன்."

கண்ணன் இரையெடுக்கப் பசித்திருந்த புலி போல் அவள் மீது பாய்ந்தான். சரமாரியாக அடிகள் விழுந்தன. தடுப்பதற்காகக் குறுக்கிட்ட குழந்தை கலாவுக்கும் அடிகள் விழுந்தன. ஒரே கூப்பாடு. குழந்தை அலறியது.

"அடிக்கிறதை நிறுத்துங்க மிஸ்டர் கண்ணன்! இது உங்களுக்கே நல்லா இருக்கா? படிச்சு நாகரிகமானவங்க இப்படியா நடந்துக்கறது?"

திரும்பினால் வாயிற்படியில் அம்மிணி அம்மாளும் அவள் மகள் நந்தினியும் நின்று கொண்டிருந்தார்கள். கண்ணனுக்கு எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்த்தது போல் ஆயிற்று.

"நீங்க போகலாம். உங்களை யாரும் இங்கே அட்வைஸ் பண்ணக் கூப்பிடலே...இது காலனி வெல் ஃபேர் அஸோஸியேஷன் இல்லே...என் வீடு."

"உங்க வீடாயிருக்கலாம்! ஆனால் அதுக்காக நீங்கள் ஆட்களை அடிச்சுக் கொல்றதைப் பார்த்துக்கிட்டு அக்கம் பக்கத்தாரும் சும்மா இருக்க முடியாது."

"சும்மா இருக்காமெ.டொனேஷனை அள்ளிக் கொடுத்து விலைக்கு வாங்கிடறதுக்கு இது காலனி அஸோஸியேஷன் இல்லே மேடம்! என் வீட்டிலே நான் நெனைச்சதைப் பண்ணுவேன்."

"நிங்களொட பார்யை ஒரு தப்பும் பண்ணலை, நான் தான் வீடியோப்பார்க்க அவளைக் கூப்பிட்டேன். அவளேயோ குழந்தையையோ தயவு செய்து அடிக்காதீங்க..."