பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

மொஹெஞ்சொ - தரோ


பட்ட கிணறுகள் பழையவற்றைவிட எளியனவாகவே காணப்படலால், அந்நகர மக்கள் புதுப்பிக்கும் தொழிலில் வெறுப்புற்றனர் என்றோ, அல்லது செல்வ நிலையில் பாதிக்கப்பட்டனர் என்றோ கூறலாம் என்பர் ஆராய்ச்சியாளர். அக்காலத்துத் தண்ணிர் மட்டத்திற்கும் இக்காலத்துத் தண்ணிர் மட்டத்திற்கும் 600 செ.மீ. வேறுபாடு காணப்படுகிறது. இதனால், அக்கிணறுகளை அடிமட்டம் வரை தோண்டிக் காண்பது மாட்டாமையாக இருக்கின்றது. ‘சில கிணறுகளின் - அடிமட்டத்தையேனும் சோதித்துப் பார்த்தல் வேண்டும். அவற்றின் அடியில் குழந்தைகளும் பெரியவர்களும் கை தவறிப் போட்ட பொருள்கள் சிலவேனும் கிடைத்தல் கூடும். நாம் அவற்றைக் கொண்டு பல உண்மைகள் உணர்தல் கூடும்’ என்று ஆராய்ச்சி யாளர் அறைகின்றனர். ஆராய்ச்சி உடையார்க்கு அகப்பட்ட சிறு பொருளும் அற்புதமாகக் காட்சியளிக்கும் அன்றோ!

அழகிய செய்குளம்

மொஹெஞ்சொ-தரோவில் இதுகாறும் நடந்த ஆராய்ச்சியில் வெளிப்பட்ட கட்டிடங்களுட் சிறந்தவை அரண்மனை என்று கருதத்தக்க கட்டிடம் ஒன்றும் அழகிய செய்குளம் ஒன்றுமே ஆகும். பின்னது இக்காலப் பொறிவலாளரும் திகைப்புறுமாறு அமைந்துள்ளது. இதனை. சர் ஜான் மார்ஷல் 1925-1926இல் கண்டறிந்தார். இதனில் தண்ணிர் நிற்கும் இடம் மட்டும் சுமார் 1200 செ.மீ நீளமும் 690 செ.மீ. அகலமும் 240செ.மீஆழமும் உடையது.இக்குளத்திற்கு ஒழுங்கான படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இக்குளத்தைச் சுற்றி நாற்புறமும் நடைவழி இருக்குமாறு 135.செ.மீ. அகலமுள்ள சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அச்சுவருக்கும் அப்பால் குளத்தைச் சுற்றி 210 செ.மீ அகலமுள்ள பெருஞ்சுவர் ஒன்று அமைந்துள்ளது. அதன் மீதும் நடைவழி அமைக்கப்பட்டுள்ளது.