பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேபி 109

புத்தகம் கொடுக்கப்பட்டதைச் சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவன் மறுநாள் பேராசிரியர் வீட்டுக்குப் போனான், புன் முறுவலோடு எதிர்கொண்டழைத்த பேபி 'எனக்குத் தெரியும்!' என்று வரவேற்பு கூறினிள்.

‘என்ன தெரியும்?' என்று, விளங்காதவனாய் அவன் விசாரித்தான். -

'இன்று நீங்கள் வருவீர்கள் என்று!’ என நீட்டினாள் அவள்.

‘எப்படித் தெரிந்ததோ?'

'அது எப்படியோ தெரிந்தது! என் மனசு எனக்குச் சொல்லிற்று என்று வைத்துக் கொள்ளுங்களேன்!' எனக் கூறிவிட்டுக் 'கலகல’வெனச் சிரித்தாள் ஒயிலி. 'உங்களிடம் ஒன்று கேட்பேன். நீங்கள் உள்ளதை உள்ளபடி சொல்லணும். பொய் சொல்லப்படாது. மனசில் பட்டதை மறைக்கக் கூடாது. ஊங்? என்ன நான் சொல்றது? சரியா?’ என்று நீட்டல் - குலுக்கல் - தலையசைப்பு - கை அசைப்புகளோடு பேசித் தீர்த்தாள்.

'ஐயோ, நான் ஒரு சித்திரக்காரனாக இல்லையே! அந்தத் திறமை எனக்கு இருக்குமானால், எவ்வளவோ அருமையான ஒவியங்கள் தீட்டலாமே' என்று மனசாற வருந்தினான் அவன்.

‘என்ன, ஒண்ணும் சொல்லமாட்டீர்களா?' என்று அவள் வருத்தமாகக் கேட்டாள். - -

'சொல்கிறேன். அவசியம் சொல்கிறேன்’ என அவன் உறுதி கூறினான்.

இருப்பினும் அவள் தயங்கினாள். பிறகு துணிந்துவிட்டாள். 'நேற்று நான் ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்தீர்களே? உங்களுக்கு என்ன தோணிச்சு?' என்று கேட்டாள்.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்லுவது என்று புரியாமல் குழம்பினான்.

'எனக்குத்தான் தெரியுமே! நீங்கள் சொல்லமாட்டீர்கள். தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கிற பொண்ணு இப்படிக் குதித்து ஆடுது பாரேன்னுதான் நினைச்சிருப்பீங்க. எருமை மாட்டுக்கு 'ஸ்கிப்பிங்' என்ன வாழுதுன்னு உங்க மனசு கேட்டிருக்கும்...'

புலம்பும் குரலில் பேசினாள் அவள்.

'ஐயோ ஐயோ!' எனப் பதறினான் நான் அப்படி ஒண்னும் நினைக்கலே. ஆமா' என்றான்.

'பின்னே? நினைச்சதைச் சொல்லுங்களேன். ஏன் தயங்குகிறீர்கள்?’ என்று அவள் சிணுங்கின்ாள்.