பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 வல்லிக்கண்ணன் கதைகள்

சீதைக்குத் தன் மகள் மீது அதிக அன்பும் ஆசையும் உண்டு. அவளைப் பற்றி தாய் கொண்டிருந்த பெருமைக்கும் அளவு கிடையாது. 'எங்க சொக்கம்மா அதைச் சொன்னாள். எங்க சொக்கு இதைச் செய்தாள்!' இப்படி ஒரு நாளைக்கு நூற்றெட்டுப் புகழ் பாடுவதில் அவள் மிகுந்த மகிழ்ச்சி கண்டு வந்தாள்.

சின்ன வயசிலிருந்தே அப்படி இப்போ கொஞ்ச நாட்களாக சீதையின் பெருமையும் ஆனந்தமும், பெளர்ணமி இரவின் கடல் அலைகள் போல், பொங்கிப் பொங்கிப் புரண்டு கொண்டிருந்தன. -

'தாய்க்கண்ணோ பேய்க் கண்ணோ என்பார்கள். என் கண்ணே உனக்குப் பட்டு விடுமோ என்று நான் பயப்படுகிறேன். சொக்கு, நீ ராணி மாதிரி இருக்கிறே. சிலுக்கும் சீட்டியுமா உனக்கு புதுப் புது டிரசுக கட்டிப் பார்க்கணுமின்னு எனக்கு ஆசையா இருக்கு. குரங்குகளும் கோட்டான்களும் என்னமா மினுக்கிக்கிட்டுத் திரியுதுக. ராசாத்தி மாதிரி இருக்கிற உனக்கு நல்லா உடுத்தி அழகு பார்க்கிறதுக்கு என்கிட்டே காசு பணம் இல்லேயடியம்மா!' இவ்வாறு வெளிப்படையாகவே தனது மனக்குறையை அருமை மகளிடம் சொல்லித் தீர்த்தாள் சீதை.

சொக்கம்மா சமயம் கிடைத்த உடனேயே கண்ணாடி முன் ஓடினாள். 'ஆமாம். நீ ராணியே தான். உன் அழகு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது' என்று கண்ணாடி அவளுக்கு உணர்த்தியது.

கண்ணாடி மட்டும்தானா அவ்வாறு சொல்லும்? அவள் வீதி வழியே போகையில், எதிரே தென்பட்ட ஆண்களின் கண்களும் அதே கதையைத் தானே கூறின! 'நீ அழகி. ரொம்ப ஜோராக இருக்கிறாய்' என்று அவர்களது பார்வை புகழ் ஒளி சிந்தவில்லையா என்ன? சிலர் ஒருதரம் பார்த்ததில் திருப்தி அடைய முடியாமல், மறுபடியும் மறுபடியும், திரும்பித் திரும்பி, அவளைப் பார்க்கத் தானே செய்தார்கள்?

இதை எல்லாம் எண்ண எண்ண சொக்கம்மாளுக்குப் பெருமையாகத்தான் இருந்தது. சந்தோஷத்துக்கும் குறைவு இல்லை. எண்ணிப் பார்த்தால், எல்லாம் கொஞ்ச காலமாக ஏற்பட்டு வருகிற நிகழ்ச்சிகளே.

அவளிடம் அவளை அறியாமலே ஏதோ ஒரு மாறுதல் திடீரென ஏற்பட்டிருக்க வேண்டும். அல்லது, மெது மெதுவாக உள்ளுர ஏற்பட்டு, திடுமென ஒளி வீசத் தொடங்கியதோ என்னவோ! முந்திய மாலை வரை உறங்குவது போல் அழகற்று