பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 வல்லிக்கண்ணன் கதைகள்

தள்ளினான். ஊஞ்சல் தணிந்து வரும்போது, அவள் முதுகில் கைவைத்து வேகமாக முன் தள்ளி விட்டான்.

ஊஞ்சலில் வேகம் அதிகரித்தது. காந்தியின் பயமும் வளர்ந்தது. திரும்பிப் பார்ப்பதற்குத் துணிவில்லை. அவளுக்கு. கயிற்றைக் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டு, "யாரது? யாரு இப்படித் தள்ளுவது? மெதுவாகத் தள்ளுடி. நான் கீழே விழுந்து விடுவேன்" என்று கத்தினாள். சந்திரனோ மெளனமாகச் சிரித்துக் கொண்டே மேலும் பலமாகத் தள்ளினான். "ஐயோ!.பயமாக இருக்குதே. ஏ. குரங்கே! யாரு இப்படி ஆட்டுறது? அப்புறம் நான் நல்லா ஏசுவேன். ஏ. சவத்து மூதி, ஆட்டாமல் தள்ளி நில்லுடி!" என்று கூச்சலிட்டாள்.

"அப்படியே செய்யறேண்டி! இதுதான் கடைசித் தடவைடி!" என்று கூறி, வேகமாகத் தாழ்ந்து வந்த ஊஞ்சலைப் பிடித்து, அதிகமான பலத்தோடு முன்னுக்குத் தள்ளி விட்டான். 'ஐயோ, அம்மா, அம்மா!' என்று அலறிய காந்தியின் குரலில் பயம் வீறிட்டது. அவள் கைப்பிடி தளர்ந்தது. அவளே குப்புற விழுந்தாள் தரைமீது.

அப்பொழுது தான் தனது செயலின் கொடுமை அவனுக்கு உறைத்தது. பயமும் குழப்பமும் நெஞ்சை அழுத்த, அவன் அவளருகே ஓடினான். 'காந்தி, காந்தி!' என்று தவியாய்த் தவித்து உருகினான். அவள் நெற்றியில் பலத்த காயம் என்றே தோன்றியது. அதிலிருந்து ரத்தம் பெருகி, புருவத்தை நனைத்துச் சொட்டியது. சந்திரன் பயந்து நடுங்கி விட்டான். காந்தி! தெரியாமல் இப்படிச் செய்து விட்டேன். உன்னைக் கீழே தள்ளனுமின்னு வேகமாகப் பிடிச்சுத் தள்ள வில்லை. விளையாட்டுக்குத்தான் தள்ளினேன்' என்று பரிதாபமாக, திரும்பத் திரும்பச் சொன்னான்.

காந்திமதி வாய் திறந்து பேசவில்லை. அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தாவணியால் நெற்றிக் காயத்தை அழுத்தியபடி, மெதுவாக எழுந்தாள். அவள் கண்கள் நீரைக் கொட்டிக் கொண்டிருந்தன. அடிபட்ட வேதனையும், மனத்தின் வேதனையும் அவளுக்கு மிகுதியாக இருந்தன என்பதை அவன் உணர முடிந்தது. "என்னை மன்னிச்சுடு, காந்திமதி! நான் வேணுமின்னு செய்யலே" என்று துயரத்தோடு மொழிந்தான் அவன்.

"தள்ளாதே தள்ளாதேன்னு கெஞ்சினதைக் கூடக் கேட்காமல் பிடிச்சுத் தள்ளிப்போட்டு, இப்ப மன்னிப்பாம்! மன்னிப்பு என்ன வேண்டிக்கிடக்கு மன்னிப்பு?" என்று கொதிப்போடு கூறிவிட்டு அவள் திரும்பிப் பாராமலே அங்கிருந்து நடந்தாள்.