பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 வல்லிக்கண்ணன் கதைகள்

சித்திரான்னங்களை உண்ண ரொம்ப பேர் பிரியப்படுவார்கள் சிவபுரம் வாசிகள் சித்திரா பெளர்ணமியன்று ஒரு சிறப்பு சித்திரான்ன விருந்து உண்டு மகிழட்டுமே என்று எண்ணினார் அவர்.

இந்த எண்ணம் கிளைவீசி வளர வளர மூக்கபிள்ளைக்கு இருப்புக் கொள்ளவில்லை. 'இதுதான் சரி' என்று குதித்தெழுந்தார். "சக்கைப்போடு போட்டிருவோம்! ஜமாய்ச்சுப் போடுவோம்' என்று சொல் உதிர்த்தபடி அங்குமிங்கும் நடந்தார். கைகளை தேய்த்து கொண்டார். தானாகவே சிரித்தார். "பேஷ் பேஷ்" அருமையான ஐடியா! என்று பாராட்டி மகிழ்ந்து போனார்.

முதல் வேலையாக மூக்கபிள்ளை செய்தது பஞ்சாங்கத்தைப் பார்த்து சித்திரா பெளர்ணமி என்று வருகிறது என்று கண்டுபிடித்ததுதான்.

பன்னிரண்டு நாட்கள் தான் இருந்தன.

பரவால்லே, அதுக்குள்ளே எல்லா ஏற்பாடுகளையும், முடித்து விடலாம் என்று திருப்தி அடைந்தார் அவர்.

பிறகு காரியங்கள் துரிதமாக நடந்தன. நல்ல 'தவசிப் பிள்ளை' இரண்டு பேரை வரவழைத்தார். தேவையான சாமான்களுக்குப் பட்டியல் போட்டு அனைத்தையும் வாங்கித் தீர்த்தார்.

மூக்கபிள்ளை எவருடனும் தாராளமாகக் கலத்து பழகுவதில்லை ஆதலால், யாரும் அவர் வீட்டைத் தேடி வந்து பேசிப் பழகி "என்ன ஏது" என்று விசாரிப்பது கிடையாது.

இருப்பினும் மூக்கபிள்ளை என்னவோ பண்ணப்போறார் என்று மற்றவர்கள் யூகித்தார்கள் 'அப்பாவி! என்னத்தையும் பண்ணிட்டுப்போறான்' என்று ஒன்றிருவர் கருத்து தெரிவித்தார்கள்.

மூக்கபிள்ளையும் தனது எண்ணத்துக்கு தீவிர விளம்பரம் கொடுக்கத் தயாராக இல்லை, விருந்து அன்றைக்கு எல்லோருக்கும் சொன்னால் போதுமென்று நினைத்து விட்டார்.

'சித்திரா பெளர்ணமி மத்தியானம் விரதச் சாப்பாடு வீட்டிலேதான் சாப்பிடுவாங்க ராத்திரிக்கு நம்ம சித்திரான்னச் சிறப்புச் சாப்பாடு. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சம் பழச் சாதம், வடை, பூம்பருப்புச் சுண்டல்' என்று திட்டம் தீட்டினார் அவர்.

அதன்படியே ஏற்பாடு செய்தார்.