பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 வல்லிக்கண்ணன் கதைகள்

அவளுடைய சாதுர்யத்தை வியந்து ரசித்து, மகிழ்ந்தான் அவன். 'என் பெயர் சந்திரன்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அதன் பிறகு அவர்கள் சந்திப்பதும், பேசிக் களிப்பதும், உலா போவதும் நித்திய நிகிழ்ச்சிகள் ஆகிவிட்டன. அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் ராஜம்மாவும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று தங்கம் வற்புறுத்தினாள். தோழியும் உடன் வருவதனால் தான் பொழுது பொன்னாகக் கழிகிறது; பேச்சு சுவையாகக் கணிகிறது என்றே சந்திரனும் உணர்ந்தான்.

ஒருநாள், சில செடிகளில் அழகுமயமாகப் பூத்து விளங்கிய புஷ்பங்களை அவர்கள் கண்டு ரசிக்க நேர்ந்தது.

'இந்தப் பூக்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன; இல்லையா?’ என்றாள் தங்கம்.

'செடியில் பூத்துக் குலுங்குகிற போது மலர்களின் அழகு தனிதான்' என்று சந்திரன் சொன்னான். .

'இருக்கலாம். ஆனாலும், அந்நிலையை விட அதிகமான அழகை அதே புஷ்பங்கள் பெறுவதும் உண்டு என்று ராஜம்மா கூறினாள்.

அவ்வேளையில் அவள் கண்களின் பார்வை மிகவும் வசீகரமாக இருந்தது. குவிந்த மலர் போன்ற இதழில் சிலிர்த்த சிறுநகை கவர்ச்சிகரமாகத் திகழ்ந்தது. அவளுடைய முகமே முழுதலர்ந்து இளம் வெயிலில் மினு மினுக்கும் அருமையான புஷ்பம் போல் மிளிர்ந்தது.

அம்முகத்தை வெகுவாக ரசித்த சந்திரன் கேட்டான் 'எப்போது?’ என்று.

'காதலுக்கு உரியவளின் கூந்தலிலே கொலுவிருக்கிற போதுதான். வேறு எப்போது?’ என்று கேட்டு அருவிச் சிரிப்பை அள்ளி வீசினாள் தோழி.

தங்கத்தை வெட்கம் பற்றிக் கொண்டது. சந்திரனின் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கிப் பொங்கி வழிந்தது.

அவன் கைநிறைய புஷ்பங்களைக் கொய்து தங்கத்திடம் கொடுத்தான். அவற்றை வாங்கிக் கொண்ட தங்கம் கைகளில் ஏந்தியபடியே நின்றாள்.

'ஏன்? தலையில் சூடிக் கொள்ள வில்லை?' என்று அவன் விசாரித்தான்.

"தானாக வைத்துக் கொள்வதைவிட, காதலனே புஷ்பங்களைக் காதலியின் கூந்தலில் சூட்டுகிற போது அதிக இன்பம்