பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

105

நாதபுரம் பொது மக்களும், அலுவலர்களும், கும்பெனியாருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென, நவாப்பின் தாக்கீது ஒன்று தெரிவித்தது.[1] தொடர்ந்து, கும்பெனியாருக்கு ஆதரவான ஒருவரை. இராமநாதபுரம் அரசு கட்டிலில் அமர்த்துவதற்கான முயற்சியும் நடைபெற்று வந்தது. சேதுபதி மன்னரது ஒரே வாரிசான, எட்டு வயது பெண்ணுக்கு அந்த உரிமையை வழங்குவதா? அல்லது பல மனுக்கள் மூலம் தன்னை இராமநாதபுரம் அரசியாக அங்கீகரிக்கும்படி வற்புறுத்தி வந்த மங்களேஸ்வரி நாச்சியாரை ஏற்றுக் கொள்ளுவதா? என்பதைப் பரிசீலித்து வந்தனர். இது சம்பந்தப்பட்ட நடைமுறைகள் என்ன என்பதையும், உள்ளூரிலும் வெளியூரிலும் இருந்த சில முக்கியமான குடிகளிடமும், இராமேஸ்வரம் பண்டாரம், உத்திரகோசமங்கை கோவில் குருக்கள், நயினார் கோயில் பட்டர் ஆகியோரது கருத்துக்களையும், தெரிந்து கவர்னருக்கு கலெக்டர் அறிக்கை செய்தார்.[2]

இந்தக் குழப்பத்தை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, முத்துராமலிங்க சேதுபதி மன்னரது மைனர் பெண்தாம் பொருத்தமான வாரிசு என்பதை முத்திருளப்பபிள்ளை வலியுறுத்தி வந்தார். அவரது கோரிக்கையை தளபதி மார்ட்டின்சும், மேலிடத்திற்குப் பரிந்துரைத்தார். அந்தப் பெண் தகுந்த வயது வரும் வரை சீமை நிர்வாகத்தை ரீஜெண்டாக இருந்து கவனித்து வரலாம் என்பது முத்து இருளப்பபிள்ளையின் திட்டம். அதனைப் புரிந்து கொண்ட மங்களேஸ்வரி நாச்சியார், இராமநாதபுரம் பட்டத்திற்கு தனக்கு மட்டும்தான் உரிமை உள்ளது என்றும், தமது கோரிக்கையின் நியாயத்தைப் பற்றி அண்டை நாடுகளான, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாங்கூர் மன்னர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளுமாறும் கும்பெனியாரை அவர் வற்புறுத்தி வந்தார். அத்துடன் முத்திருளப்ப பிள்ளையின் சூழ்ச்சிக்கு இணங்கிவிடக் கூடாது எனவும் கவர் னரை வலியுறுத்தி வந்தார்.[3]


  1. Military Consultation, Vol. 193 A, 4–3-1795
  2. Military Consultations, Vol. 179, 25-2-1795
  3. Revenue Consultations, Vol. 61, 18-2-1795, pp. 452-59