பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 140


நிலைபேறு கொள்ளும் வரையில் அவன் திரும்பத் திரும்ப அதை மீட்டுக் கொள்ளலாம்.

மெய்யறிவு ஒவ்வொரு கருத்தும், சொல்லும் செயலும் உலகின்கண் மிக்க பயனை விளைவிக்கின்றது. அது மேம்பாடு செறிந்ததாக விருக்கின்றது. மெய்யறிவு ஓர் அறிவுக் கிணறும், ஆற்றலின் ஊற்றுமாகும். அது ஆழ்ந்த அறிவுடையது, கவியாற்றல் மிக்கது. மிகச் சிறிய நுணுக்கங்களைக் கூட ஆர்வமாக ஏற்றுக் கொள்கின்ற அளவிற்கு அத்துணை நுட்பமானதும், அனைத்தையும் உட்கொள்வதுமாகும். அது தன்னுடைய பரந்த மேன்மையில் சிறியதைப் புறக்கணிப்பதில்லை. மெய்யறிவு செறிந்த மனம் ஞாலத்தைப் போன்றது. பொருள்கள் அனைத்தையும் அவற்றினுடைய சரியான இடத்திலும், ஒழுங்கிலும் அது கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக அது அழுத்தம் பெறுவதில்லை. உலகத்தைப் போன்றே அதுவும் தன்னுரிமையுடையதாகவும், தடைகள் எதையும் காணாததாகவும் இருந்து வருகின்றது. எனினும், அது என்றுமே நெறி தவறுவதில்லை. என்றுமே பிழைபடுவதில்லை, என்றுமே பழிசூழ்வதாகவோ, எண்ணி இரங்கத் தக்கதாகவோ இருப்பதில்லை. மடமையெனும் அழுங்குழவியாக இருந்ததால் நிலையான வளர்ச்சி பெற்ற உருவமே மெய்யறிவு அது குழந்தைப் பருவ அறியாமையின் வலுவின்மையையும், சார்பு நிலையையும், தவறுகளையும், தண்டனைகளையும் கடந்து வளர்ந்துவிட்டது. அது நிமிர்ந்து சமநிலையுடனும், வலுவுடனும் அமைதியுடனும் இருக்கின்றது.