பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எப்படித் தொகுத்தேன் ?

ஒரு நாள் நூல் நிலையத்திலே ஒரு விடுகதைப் புத்தகத்தைப் பார்த்தேன். அது ஓர் ஆங்கிலப் புத்தகம். ‘பல நாட்டு விடுகதைகள்' (Riddies of Many Lands) என்று அதற்குப் பெயர், அதை ஆவலாக எடுத்தேன் ; புரட்டிப் பார்த்தேன். சுமார் 90 நாடுகளில் வழங்கிவருகின்ற 800 விடுகதைகள் அதில் இருந்தன. உடனே எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

'நம் வீட்டுக் குழந்தைகள் அடிக்கடி நம்மிடம் விடுகதை போட்டு நம்மை விழிக்கவைக்கிறார்களே, அவர்களைச் சும்மா விடக்கூடாது. அவர்களை மடக்குவதற்கு இது சரியான புத்தகம்' என்று தீர்மானித்தேன். உடனே, நான் அந்தப் புத்தகத்தை நூல் நிலையத்திலிருந்து எடுத்துக் கொண்டு வீடு நோக்கி வந்தேன். வரும்போதே சில விடுகதைகளைத் தமிழ்ப்படுத்திப் பார்த்தேன்.

வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளைச் சுற்றி உட்கார வைத்துக்கொண்டு, ஒவ்வொரு விடுகதையாகப் போட்டேன், சில விடுகதைகளை அவர்கள் எளிதிலே விடுவித்தார்கள். சில அவ்வளவு சுலபமாயில்லை. சில விடுகதைகளைக் கேட்டதும், “ப்பூ, இதுபோல் நம் நாட்டில் கூட இருக்கிறதே!" என்றார்கள். ஆனாலும், மொத்தத்தில் அந்த விடுகதைகளை அவர்கள் மிகவும் ரசித்தார்கள்.

இப்படிச் சில நாட்கள் தினமும் மாலையில் நான் புதுப் புது விடுகதைகளை அந்தப் புத்தகத்திலிருந்து கூறிவந்தேன். ஆனாலும், அதில் இருந்த 800 விடுகதைகளில் 125 விடுகதைகளைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். அவற்றை அப்படியே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கவில்லை. கூடுமான வரையில் அந்தக் கருத்தை வைத்துக்கொண்டு நம் தமிழ் நாட்டு விடுகதையைப் போலபே கூற முயன்றேன், நாம் விடுகதைகளைப் பாட்டுப் போலல்லவா கூறிவருகிறோம்? அப்படித்தான் நானும் கூறினேன்.