உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

 "நான் குன்றக்குடியில் முருகனைத் தரிசனம் செய்துகொண்டு வெறுங்கையோடு வருகிறேன். மருத பாண்டியரிடம் போனால் ஏதாவது கிடைக்கும் என்று அவரை நோக்கிப் போகிறேன்.”

"இந்தப் பெண்பிள்ளையிடம் ஏதாவது இருக்கிறதா?" என்று திருடர்கள் புலவருடைய மனைவியைச் சுட்டிக்காட்டிக் கேட்டார்கள்.

"இவளிடம் ஒன்றும் இல்லை.”

"ஏதாவது நகை இருந்தால் கழற்றி வைக்கச் சொல்.”

"நகையா? நாங்கள் ஏழைகள். எங்களிடம் ஏது நகை?'

அதற்குள் ஒருவன், 'மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடுமா?' என்று கூறிப் புலவரை அடிக்கக் கை ஓங்கினான்.

அதுகண்ட புவவர் மனைவி, "அண்ணே, இவரை ஒன்றும் செய்யாதீர்கள். உண்மையில் எங்களிடம் ஒன்றும் இல்லை. முருகன்மேல் ஆணையாகச் சொல்கிறேன். என்னிடம் இந்தத் தாலி ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் இல்லை" என்று சொல்லித் தாலிக் கயிற்றை எடுத்துக் காட்டினள்.

அப்போது ஏதோ விலங்கு அருகிலே ஓடியதால் அரவம் கேட்டது. யாரோ வருகிறார் என்ற எண்ணத்தால் திருடர்கள் சட்டென்று அந்தத் தாலிக் கயிற்றை வெடுக்கென்று அறுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்.

"அட பாவிகளா!' என்று கதறிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள் அந்தப் பெண்மணி. புலவருக்குச் சிறிது நேரம் ஒன்றும் தோன்றவில்லை. பிறகு மெல்லத் தம் மனைவியைத் தூக்கி நிற்கச் செய்தார்.