பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

இருப்பதைக் கொடுக்க இப்போதும் ஆயத்தமாக இருக்கிறேன். இந்தாருங்கள். இந்தக் குடையை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அதை நீட்டினர் வல்லாளர். புலவர் அதை வாங்கிக்கொண்டார். "இந்தப் பாத ரட்சையைக்கூட நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்” என்று செல்வர் அதைக் கழற்றினர். புலவர் அதையும் பெற்றுக்கொண்டார்.

"மறந்துவிட்டேனே! இந்தக் கடுக்கன்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று அந்த வள்ளல் அவற்றையும் கழற்றிக் கொடுத்தார்; 'போதுமா?" என்றார்.

"வெறும் அணிகள் போதுமா? ஆடை வேண்டாமா?’ என்றார்? புலவர்.

வள்ளல் சிறிதே யோசித்தார். ஏதோ தீர்மானத்துக்கு வந்தவர்போல் மேலே அணிந்திருந்த ஆடையையும் எடுத்துப் புலவர் கையில் கொடுத்தார். 'இவரை அனுப்பிவிட்டு, நாம் நம் வீடு சென்று மறுபடியும் ஆடையணி புனைந்து காஞ்சிபுரம் போகலாம்’ என்று அவர் நினைத்துக்கொண்டார். அதனால், தம் இடையில் இருந்த ஆடை ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றையும் புலவருக்கு வழங்கிவிட்டார். "போதும் அல்லவா?’’ என்று அவர் கேட்டார்.

புலவர் தயங்கித் தயங்கி நின்றார். வள்ளல். "இன்னும் என்னிடம் யாதும் இல்லை. இருந்தால் கொடுப்பேன்" என்றார்.

"உங்களிடம் இன்னும் கொடுக்க ஒன்று இருக்கிறதே" என்று அந்தத் துணிவுமிக்க புலவர் கூறினார்.

வல்லாளர் இடுப்பைத் தடவிப் பார்த்துக் கொண்டார். செருகியிருந்த பணத்தை முன்பே கொடுத்துவிட்டார். இப்போது அங்கே ஒன்றும் இல்லை. புலவர் எதைக் குறிக்கிறார் என்று அவரால் அறிந்து