கவிஞர் சுரதா
தானவனை இழந்ததனால் விதவை யாகி
மற்றவர்கள் விரும்பியதால் அரசி யாகிப்
பொன்னிநதி நீர்நாட்டை ஆண்டு வந்த
பூவையவள். அவன்மீது மையல் கொண்டு
தன்னுடைய காமத்தைக் கண்ணில் வைத்தும்
சயனசுகச் சிந்தனையை நெஞ்சில் வைத்தும்
முன்னழகும் பின்னழகும் காட்டி அன்னோன்
முன்னிலையில் முத்துநகை காட்டி வந்தாள்.
கருவுற்ற காலத்தில் ஒர்நாள் தீய
கனாக்கண்டு கருச்சிதைவேற் பட்ட தாலே
பெருமைக்கோர் பிள்ளையின்றி மாற்றான் வீட்டுப்
பிள்ளையொன்றை வளர்த்தவளாம் அந்த மங்கை
சுரைவித்துப் போலும்தன் பல்லைக் காட்டிச்
சுந்தரனை வசப்படுத்த முயன்றா ளேனும்,
அருட்சிதன் அவளிடத்தில் மயங்க வில்லை.
அதையுணர்ந்தும் அவள்முயற்சி தளர வில்லை.
அன்றொருநாள் நள்ளிரவு நேரம் விண்ணில்
அழகுநிலா ஊர்ந்துசெல்லும் நேரம்; அந்தப்
பின்னிரவு நேரத்தில் நிலாமுற் றத்தில்
பெண்ணரசி பெருமூச்சு விட்டுக் கொண்டே
மன்னர்களின் நன்மதிப்பைப் பெற்ற தாயு
மானவனை அப்போது நினைத்தாள். பின்னர்
அன்னவனை உடனழைத்து வருக என்றே
ஆணையிட்டாள். பணியாட்கள் விரைந்து சென்றார்.