பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை




இது ஒரு காந்தீய சகாப்த நாவல்; ஆனால் ஒன்றல்ல. இரண்டு சகாப்தங்களை நீங்கள் இந்த நாவலில் சந்திக்கிறீர்கள். ஒரு தலைமுறையின் தேசபக்தர்கள் அனைவருமே இந்த நாவலின் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். உப்புச் சத்தியாக்கிரகத்திலிருந்து நேற்று வரை உள்ள நிலைமைகளினூடே இந்தக் கதை பாய்கிறது; வளர்கிறது, நிறைகிறது.

தேச சுதந்திர வரலாறும் போராட்டங்களும், பின்னணியாக அமைய உருவாக்கப்பட்ட இக்கதையை ஒரு தேசீய சமுகத்தின் புதிய வகைச் சரித்திர நாவலாக நான் கருதுகிறேன். அது எந்த அளவிற்குச் சரியான கருத்து என்பதைப் படிக்கிறவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில், இது ஒரு சத்தியாக்கிரகியின் கதை. அபிப்பி ராயங்களை வற்புறுத்தி எதிர்பார்க்க விரும்பவில்லை.

சுதந்திரமடைந்த ஒவ்வொரு மண்ணின் சுபீட்சமும் அந்த சுதந்திரத்தை அடையப் போராடியவர்களை உரமாகக் கொண்டு பெற்ற சுபீட்சம் தான் என்பதை மறந்து விடலாகாது. சுதந்திரப் போராட்டத்தின் போது இல்லாத இயக்கங்கள், சுதந்திரமே வேண்டாமென்ற இயக்கங்கள் எல்லாம் கூட இன்று நமது சுதந்திரத்தின் பயனை அநுபவிக்கின்றன. அன்று சுதந்திரத்திற்காகப் போராடிய வர்கள் யாரோ, அவர்கள் மரித்து மண்ணடியிலே மக்கி, என்றோ உரமாகி விட்டார்கள். ஆனால், சுதந்திரம் இன்னும் இருக்கிறது.

தியாகமும், தேச பக்தியும் சராசரி இந்தியனின் விரதமாக மாறிய சுதந்திர வேள்வித் தீயில் கலந்து, அதன் பின் அதையடுத்த பதவிகளின் பரபரப்பான காலத்தில் தனியே விலகி வாழ்ந்த ஒரு தேசபக்தரின் கதை இது ஒரு