பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 ஆத்மாவின் ராகங்கள். வெள்ளத்தில் மிதப்பது போல் தவிக்கிறார்கள். எங்கும் எல்லாரும் சந்தர்ப்பவாதிகளும், தேசத் துரோகிகளும், சமூக விரோதிகளும் எங்கே எந்தக் குழப்பம் நடந்தாலும் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறார்கள். பொதுக் காரியங்களில் சிரத்தை குறைந்துவிட்டது. காந்திராமன் மிகவும் மனம் நொந்து போயிருந்தார். "மை கன்டரி பாஸ்ட் அன்ட் பிரெஸென்ட்" புத்தகத்தின் மூன்றாவது பாகம் வெளியாயிற்று. 1967 பொதுத் தேர்தல் வரை உள்ள நிலைமைகளும், பிறவும், புத்தகத்தில் அடங்கியிருந்தன. பல்லாயிரம் சதுர மைல்களைச் சீனாவுக்குப் பறி கொடுத்திருக்கும் துயரத்தைப் பற்றி மனம் நெகிழ எழுதியிருந்தார் நூலில். பணத்துக்காகவும் பதவிக்காகவும் கட்சி மாறும் கயமை கண்டிக்கப் பட்டிருந்தது. படித்தவர்கள் விவரம் தெரிந்தவர்கள் கட்சி மாறுவது நாட்டின் ஜனநாயகத்துக்கு இழைக்கும் அவமானமாகும் என்று அந்த நூலில் அவர் மிகவும் வருந்தியிருந்தார்.

1967க்குப் பிறகு நாட்டின் பல மாநிலங்களில் கூட்டு அரசாங்கங்களும், மாறி மாறி மந்திரி சபை கவிழ்தலும், தினம் ஒரு கட்சி மாறுதலும், மாணவர்கள் போராட்டமும் தொழில் அமைதியின்மையும் நிலவின. பலவீனமான நாட்டுத் தலைமை எல்லாவற்றையும் தீர்க்க வழியின்றித் தவித்தது.

'இறைவா! மகத்தான ஒரு சகாப்தத்தைப் பார்த்து விட்டேன். கவலைகளைத் தரும் ஒரு காலம் எதிரே தெரிகிறது. மகாத்மாவின் கண்கள் எந்த இந்தியாவைப் பார்த்தால் ரத்தக் கண்ணிர் சிந்துமோ அந்த இந்தியாவை நான் இருந்து பார்க்க நேரிட்டு விடாமல் என்னை அழைத்துக் கொண்டுவிடு' என்று சதாகாலமும் இறைவனைப் பிரார்த்திப்பது அவர் வழக்கமாயிருந்தது. அடிக்கடி நெஞ்சு வலியாலும் ரத்தக் கொதிப்பாலும் அவஸ்தைப்பட்டார் அவர் நாடும் தலைவர்களும், இளம் தலைமுறையும் அவர்