பக்கம்:அருளாளர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 அருளாளர்கள்

நிலையாமையை வெற்றி கொள்ளும் ஒன்று இருந்தால்தான் வாழ்க்கைக்கு ஒரு பொருள் உண்டு. இன்றேல் உயிர் வாழ்க்கை அர்த்தமற்ற ஒரு விளையாட்டாகவே முடியும். புல்பூண்டில் தொடங்கி மனிதன் ஈறாக உயிர் இனம் பலவகைப்பட்ட உடம்பை மேற்கொண்டு இருக்கிறது. இவ்வேறுபட்ட உடம்புடன் வாழும் உயிர் இனத்தில் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா? இருந்தால் அது என்ன? இக்கேள்வியைக் கேட்டவர்கள் என்றும் உண்டு. ஆனால் விடை கண்டவர் சிலரே. எல்லாவற்றிற்கும் முதற் பொருளான இறைவன் யார்? அவனுடைய இயல்பு என்ன? ஆம்! எத்தனை வினாக்கள்? எவ்வளவு சுலபமாகக் கேட்கப்பட்டு விட்டன?இருந்தாலும் விடையளிப்பது அவ்வளவு எளிதன்று. மக்கள் இனத்திற்கு நல்வழி காட்டுவதற்காகப் பல சமயங்கள் தோற்றுவிக்கப்பட்டன. காலம் இடையிட்டவும் தேசம் இடையிட்டவும் ஆன பல இடங்களிலும், பல காலங்களிலும் வாழ்ந்த மக்கள் கூட்டத்தின் தேவைக்கு ஏற்ப இச்சமயங்கள் தோன்றின. ஆகலான் இவற்றிடையே மாறுபாடுகள் ஒரளவு இருக்கின்றன. இத்தமிழ் நாட்டில் மிகப் பழங்காலந்தொட்டு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆகலின் இவர்கள் நாகரிகமும் பழமையானதாகும்: இவர்கள் சமயமும் பழமையானதாகும். அதில் கண்ட பேருண்மைகள் பல. உயிர் இன ஒற்றுமை எது என்ற வினாவை இத்தமிழ் இனம் கேளாமலா இருந்திருக்கும்? கேட்டுக் கண்ட விடை திருமூலர் வாக்கால் இதோ வெளிப்படுகிறது.

‘அன்பு சிவம் இரண்டென்பர்

                        அறிவிலார் 

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்'

                     (திருமந்-270)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/15&oldid=1291377" இலிருந்து மீள்விக்கப்பட்டது