பாரதியாரின் தேசிய கீதங்கள்/8. பாரத மாதா
Appearance
8. பாரத மாதா
- தான தனந்தன தான தனந்தன
- தானனத் தானா னே.
- முன்னை இலங்கை அரக்கர் அழிய
- முடித்தவில் யாருடை வில்? - எங்கள்
- அன்னை பயங்கரி பாரத தேவி நல்
- ஆரிய ராணியின் வில்.
- இந்திர சித்தன் இரண்டு துண்டாக
- எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள்
- மந்திரத் தெய்வம் பாரத ராணி,
- வயிரவி தன்னுடைய வில்.
- ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்
- உலகின்பக் கேணி என்றே - மிக
- நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
- நாயகி தன்திருக் கை.
- சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
- சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம்
- அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
- ஆரிய ராணியின் சொல்.
- சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
- தட்டி விளையாடி - நன்று
- உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
- ஒளியுறப் பெற்ற பிள்ளை.
- காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
- கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை
- ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
- ஆரிய தேவியின் தோள்.
- சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
- தந்த தெவர் கொடைக்கை? - சுவைப்
- பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
- பாரத ராணியின் கை.
- போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
- புகன்ற தெவருடை வாய்? - பகை
- தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
- தேவிமலர் திரு வாய்.
- தந்தை இனிதுறந் தான் அர சாட்சியும்
- தையலர் தம்முறவும் - இனி
- இந்த உலகில் விரும்புகி லேன் என்றது
- எம் அனை செய்த உள்ளம்.
- அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
- அன்பினிற் போகும் என்றே - இங்கு
- முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
- மொழி எங்கள் அன்னை மொழி.
- மிதிலை எரிந்திட வேதப் பொருளை
- வினவும் சனகன் மதி - தன்
- மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
- வல்ல நம் அன்னை மதி.
- தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம்
- செய்த தெவர் கவிதை? - அயன்
- செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
- தேவி அருட் கவிதை.