கள்வனின் காதலி/நெஞ்சு பிளந்தது!
நெஞ்சு பிளந்தது
இராஜன் வாய்க்காலின் மூங்கில் பாலத்தைத் தாண்டிச் சென்ற கல்யாணி தயங்கித் தயங்கி நடந்தாள். ஏனோ அவளுக்கு வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனம் வரவில்லை. அவளுடைய கால்கள் பூங்குளம் கிராமத்தை நோக்கிச் சென்றனவாயினும் அவளுடைய இதயம் அந்தப் பாழடைந்த கோயிலிலிருந்து வரவே மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தது.
அந்த நாவல் மரத்தடியில் தான் கண்ட காட்சியை நினைக்க நினைக்க அவளுடைய இரத்தம் கொதிப்படைந்தது. அவளுடைய நெஞ்சு பிளந்து இரண்டாகி விடுவது போன்ற ஒரு வேதனை உணர்ச்சி அவளைச் சித்திரவதை செய்தது. அப்படிப் பிளந்து விடாமலிருக்கும் பொருட்டு நெஞ்சை ஒரு கையினால் அமுக்கிப் பிடித்துக் கொண்டு நடந்தாள். பல வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் அதே நாவல் மரத்தடியில் நடந்த ஒரு சம்பவம் அவள் நினைவுக்கு வந்தது. முத்தையன் அப்போது ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தான். அவன் ஊருக்கு வந்து விட்ட செய்தி தெரிந்து கல்யாணி குதூகலமடைந்திருந்தாள். வழக்கம் போல் அவனை எதிர்பார்த்து அவள் அப்பாழடைந்த கோயிலுக்குப் போனாள். முன்னாலேயே அவன் அங்கு வந்து இவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். இன்றைய தினம் அவன் உட்கார்ந்திருந்த இடத்திலேயே அன்றும் உட்கார்ந்திருந்தான். கல்யாணி அருகில் சென்றதும், இன்று அந்தத் தேவடியாளைக் கட்டித் தழுவிக் கொண்டானே, பாவி, அதே மாதிரி இவளைக் கட்டித் தழுவிக் கொண்டான்!
அன்று நடந்த பேச்சு முழுவதும் அப்படியே கல்யாணிக்கு நினைவு வந்தது. அந்தப் பாழடைந்த கோயிலுக்குள் ஸ்வாமி ஒன்றும் இல்லையல்லவா? இவர்கள் பெரியவர்களான பிறகு, அந்தக் கோவிலைப் புதுப்பித்துக் கட்டி அதற்குள்ளே ஸ்வாமி பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று இரண்டு பேரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். ஆனால் கோவிலுக்குள் என்ன ஸ்வாமி வைப்பது? முத்தையன் ஒவ்வொரு சுவாமியாகச் சொல்லிக் கொண்டு வந்தான். "கிருஷ்ண விக்கிரகம் வைப்போம்" என்றான். "கூடாவே கூடாது" என்றாள் கல்யாணி. "கிருஷ்ணன் மேல் உனக்கு என்ன கோபம்? போனால் போகட்டும், சுப்ரமண்ய சுவாமி வைப்போமா?" என்றான் முத்தையன். "அதுவும் வேண்டாம்!" என்றாள் கல்யாணி. இப்படி ஒவ்வொரு சுவாமியாகத் தள்ளிக் கொண்டு வந்து கடைசியில், முத்தையன், "எல்லா சுவாமியும் வேண்டாமென்று நீ சொல்லிவிட்டால், நாம் இரண்டு பேருமே சுவாமியும் அம்மனுமாய் உட்கார்ந்துவிட வேண்டியதுதான்" என்றான். "இராமரை நான் வேண்டாமென்று சொல்லவில்லை; இராமரையே வைக்கலாம்" என்றாள் கல்யாணி. 'மற்ற சுவாமியையெல்லாம் வேண்டாமென்று சொல்லி, இராமரை வைக்க மட்டும் சம்மதித்ததிற்கு என்ன காரணம்' என்று முத்தையன் விசாரித்தான். கல்யாணி முதலில் இதற்குச் சரியான பதில் சொல்லவில்லை. கடைசியாக வறுபுறுத்திக் கேட்டதன் பேரில், "இராமருக்குத்தான் ஒரே பெண்டாட்டி; ஆகையால்தான் அவரை எனக்குப் பிடிக்கிறது. மற்ற சுவாமிகளுக்கு எல்லாம் இரண்டு பேரும், அதற்கு மேலுங் கூட இருக்கிறார்கள். அவர்களை எனக்குப் பிடிக்கவில்லை" என்றாள் கல்யாணி. உடனே முத்தையன் கல்யாணியைத் தூக்கித் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டு, "என் கண்ணே! நான் இராமரைப் போலிருப்பேன், உன்னைத் தவிர வேறு ஸ்திரீயை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டேன்" என்றான்.
அன்று அப்படி வாக்குறுதி செய்த முத்தையன் இன்றைக்கு எப்படியாகி விட்டான்! அடபாவி! ரயில்வே ஸ்டேஷனில் உன்னைப் பற்றி ஜனங்கள் பேசிக் கொண்டதெல்லாம் நிஜந்தானா? ஐயோ! மோசமல்லவா போய் விட்டேன்? நான் இருக்கிறேனே, உன்னைத் தவிர உலகில் வேறு நினைவே இல்லாமல் - அப்படியும் நீயும் இருப்பாயென்றல்லவா எண்ணிவிட்டேன்? உனக்காகவா நான் இந்தச் சொத்து, சுதந்திரம், வீடு, வாசல் எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கப்பலேறி வர தயாராயிருந்தேன்? ஐயோ! என்ன அசடாய்ப் போனேன்? - ஆகா! இது என்ன உலகம்? சூதும் வாதும் பொய்யும் புனைசுருட்டும் நிறைந்த உலகம் - இதையெல்லாம் நினைக்கும் போது, இறந்து போனாரே, அவர் எப்பேர்ப்பட்ட உத்தமர்? அவர் புண்ணிய புருஷரான படியால் இந்தப் பாவியுடன் எத்தனை நான் வாழ்வது என்று போய்விட்டார் போலிருக்கிறது!...
இப்படி எண்ணமிட்டுக்கொண்டே போன கல்யாணிக்குக் காலிலே ஒரு கல் தடுக்கிவிட்டது. கட்டை விரலில் இரத்தம் வந்தது. தலை கிறு கிறு வென்று சுற்றுவது போலிருந்தது. பாதை ஓரத்தில் சற்று உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த இடத்தில் ஒரு தும்பைச் செடி பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. கல்யாணி ஒரு தும்பைப் பூவைப் பறித்தாள். "என்னுடைய அன்பு இந்தத் தும்பைப் பூவைப் போல் அவ்வளவு பரிசுத்தமாயிருந்தது. அதை இப்படிக் கசக்கி எறிந்து விட்டானே, பாவி!" என்று எண்ணிய வண்ணம் அந்தப் பூவைக் கசக்கினாள்.
திடீரென்று, அவளுடைய உள்ளத்தின் எந்த மூலையிலிருந்தோ ஒரு எண்ணம் உதயமாயிற்று. "ஒரு வேளை நாம் பார்த்தது பொய்யோ? வெறும் பிரமையாயிருக்குமோ?" என்ற சந்தேகம் ஏற்பட்டு வினாடிக்கு வினாடி அதிகமாயிற்று. "அந்த ஸ்திரீ யார்? அவள் எப்படி அங்கே வந்திருப்பாள்? - என்ன தப்பு பண்ணி விட்டோ ம்? மளமளவென்று அருகில் போய் உண்மையைக் கண்டு பிடிக்காமல் தூர இருந்தபடியே வந்து விட்டோ மே?" என்று எண்ணிக் கல்யாணி தவித்தாள். "மோகினிப் பிசாசு என்கிறார்களே? அது நிஜந்தானோ, என்னவோ? பிசாசு அப்படி உருவம் எடுத்து வந்தாலும் வந்திருக்குமல்லவா? அதை நான் தானாக்கும் என்றே முத்தையன் எண்ணி மோசம் போயிருக்கலாமல்லவா? இல்லாவிட்டால், அப்படித் தளுக்கும் குலுக்குமான ஒரு பெண் பிள்ளை அந்தக் காட்டில் எப்படி வந்தாள்? எங்கிருந்து வந்தாள்?..." இம்மாதிரி விபரீதமான சந்தேகங்கள் எல்லாம் கல்யாணிக்குத் தோன்றின. அப்படியிருந்தால், முத்தையனைப் பற்றித் தான் எண்ணியதெல்லாம் அநியாயமல்லவா? அநியாயத்தோடேயா? ஐயோ! அந்தப் பிராமணன்! அவன் யாரோ என்னமோ தெரியவில்லையே? பார்த்தால் போலீஸ்காரன் மாதிரி இருந்ததே? அவனிடம் முத்தையன் இருக்குமிடம் சொல்லிவிட்டோ மே? என்ன நேருமோ என்னமோ? ஸ்வாமி பகவானே!
உடனே திரும்பி முத்தையன் இருக்குமிடம் போக வேண்டும் என்ற அடங்காத தாபம் அப்போது கல்யாணிக்கு உண்டாயிற்று. அவன் தனக்குத் துரோகம் செய்திருந்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அவனை அந்த இடத்தில் இனிமேல் இருக்க வேண்டாம் என்று எச்சரிப்பது தன்னுடைய கடமை என்று கல்யாணி கருதினாள். எனவே, திரும்பிக் கொள்ளிடக்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அவள் ஐந்தாறு அடிதான் நடந்திருப்பாள். 'டுமீல்' 'டுமீல்' என்று துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது. ஒன்றன் பின் ஒன்றாகச் சுமார் மூன்று நிமிஷ நேரம் வெடிகள் தீர்ந்த வண்ணமிருந்தன. அந்தச் சத்தம் திக்குத் திகாந்தங்களில் எல்லாம் பரவி எதிரொலி செய்து முழங்கிற்று.
வெடி தீர்ந்து கொண்டிருந்தவரையில், கல்யாணி ஸ்தம்பித்துப் போய் நின்றாள். சத்தம் நின்றதும் அவளுடைய வாழ்க்கையிலேயே என்றும் அறியாத பதைபதைப்புடன் லயன்கரைச் சாலையை நோக்கி நடந்தாள்.
துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு, அங்கங்கே வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த குடியானவர்களும் குடியானவ ஸ்திரீகளும் வேலையை அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தார்கள். ஆகவே, கல்யாணி மூங்கில் பாலத்தை அடைந்தபோது, லயன்கரைச் சாலையில் ஏகக்கூட்டம் கூடியிருந்தது. எல்லாரும் அவரவர்களுக்குத் தோன்றியபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கிழக்கே நூறு கஜ தூரத்தில் படுகைக் காட்டிலிருந்து பத்துப் பன்னிரண்டு போலீஸ்காரர்கள் சாலையில் ஏறுவது தெரிந்தது. ஜனங்கள் அந்தப் பக்கம் நோக்கி ஓடினார்கள். ஆனால் போலீஸ்காரர்கள் இரண்டு பேர் கையில் பிடித்த துப்பாக்கியுடன் நடுச்சாலையில் நின்று அவர்களைச் சுட்டுவிடுவதாகப் பயமுறுத்தவே ஜனங்கள் தயங்கி நின்றுவிட்டனர். பெரும்பாலான போலீஸ்காரர்கள் விரைந்து கிழக்கு நோக்கிச் சென்றார்கள். கும்பலாகச் சென்ற அவர்களுக்கு மத்தியில் நாலு சேவகர்கள் காயம் பட்ட மனிதன் ஒருவனைத் தூக்கிக் கொண்டு போவது தெரிந்தது.
கல்யாணி இதையெல்லாம் பார்த்தாள். "செத்துப் போய்விட்டான்" என்று சிலரும்; "இல்லை, சாகவில்லை காயம் மட்டும் பலம்" என்று சிலரும் பேசியதெல்லாம் அவள் காதில் அரைகுறையாய் விழுந்தது. குடியானவ ஸ்திரீகள் சிலர் வந்து கல்யாணியைச் சூழ்ந்து கொண்டனர். "ஆச்சி! இந்தக் கொள்ளிடக் கரையிலே நீங்கள் பாட்டுக்குத் தினம் போய்க் கொண்டிருந்தீர்களே! இங்கேயே இத்தனை நாளும் திருடன் இருந்திருக்கிறானே, ஆச்சி! ஏதோ உங்க பெரியவங்க பண்ணிய புண்ணியந்தான் உங்களுக்கு ஒன்றும் நேரவில்லை" என்றார்கள்.
கல்யாணி அவர்களுக்கு பதில் ஒன்றும் சொல்லாமலும் குனிந்த தலை நிமிராமலும் வீட்டை நோக்கி நடக்கலானாள். அவளுடைய முகத்தை மட்டும் அந்தச் சமயம் மற்றவர்கள் பார்த்திருந்தால், ஐயோ! எவ்வளவு கலவரம் அடைந்திருப்பார்கள்!