உள்ளடக்கத்துக்குச் செல்

தியாக பூமி/ கோடை/தந்தியும் தபாலும்

விக்கிமூலம் இலிருந்து

ஸ்ரீதரன், "வந்துட்டாயா, அப்பா! வா!" என்று சொல்லிக் கொண்டே, படுக்கையிலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்தான்.

நாணா உள்ளே நுழைந்த போது, "ஓகோ! தூக்கம் போலே இருக்கு. தூங்குடா, அப்படி, தூங்கு! அடுத்த வருஷம் இந்த நாளிலே தலைமாட்டிலே ஒரு குழந்தை கால்மாட்டிலே ஒரு குழந்தை கிடந்து 'குவாங்' 'குவாங்' என்று கத்தும். அப்புறம் தூக்கமேது, எழவேது? எல்லாத் தூக்கத்தையும் இப்பவே தூங்கி விடு" என்று சொல்லிக் கொண்டு வந்தான்.

"நாணா அய்யர்வாள்! தங்கள் திருவாயால் என்ன திருப் பிதற்றல் பிதற்றுகிறீர்கள்?" என்று கேட்டான் ஸ்ரீதரன்.

"நானா பிதற்றுகிறேன்? இப்போ என்ன பந்தயம் கட்டறே? முதல்முதல்லே, உனக்கு ரெட்டைப் பிள்ளைதான் பிறக்கப் போகிறது என்கிறேன்..."

"சரி பிறக்கட்டும். அப்புறம்?"

"நானும் பார்த்தாலும் பார்த்தேன். உன்னைப் போலே அமுக்கனைப் பார்த்ததில்லையட்ட, ஸ்ரீதரா! கல்யாணம் நிச்சயமாச்சுன்னு சமாசாரம் வந்தால் உடனே..."

"கல்யாணமா? யாருக்கு?" என்று கேட்டான் ஸ்ரீதரன்.

"சரியாய்ப் போச்சு! 'அட எழவே! எனக்கா கல்யாணம்?' என்றானாம் ஒருவன்! அந்த மாதிரிதான் இருக்கு கதை!"

"இருந்துட்டுப் போகட்டும்; இப்பவாவது 'வாட் இஸ் தி மாட்டர்'ன்னு சொல்லித் தொலை!"

"என்ன?...நிஜமா உனக்கு ஒண்ணுந் தெரியாதுன்னா சொல்றே?"

"ஆமாம், ஆமாம்; 'நாட் கில்ட்டி'ன்னு தான் அப்பவே பிடிச்சு சொல்லிண்டிருக்கேன்."

"இதென்ன வேடிக்கையான்னா இருக்கு? இந்தத் தந்தியைப் பாரு!" என்று சொல்லி, நாணா தன் சட்டைப் பையிலிருந்து ஒரு தந்தியை எடுத்து ஸ்ரீதரனிடம் கொடுத்தான்.

"ஸ்ரீதரனுக்குக் கல்யாணம் நிச்சயமாகி யிருக்கிறது. அவனை உடனே அனுப்பி வைக்கவும் - ராஜாராமய்யர்."

இந்தத் தந்தியைப் படித்தவுடனே, ஸ்ரீதரனுக்கு ஒரு கண நேரம், ஏதோ ஒருவித இன்ப உணர்ச்சி உண்டானது போல் இருந்தது. ஆனால் அடுத்த நிமிஷத்தில் ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. "எனக்குக் கல்யாணம் நிச்சயம் - ஆனால் என்னை ஒரு வார்த்தை கேட்கவில்லை! சபாஷ்!" என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டான். "தந்தி கூட எனக்கு இல்லை!-நாணாவுக்கு!" என்று எண்ணியபோது, அவனுடைய கோபம் அசாத்தியமாயிற்று. ஆனால், உடனே, சற்று முன்னால் தான் மனோராஜ்யத்தில் ஈடுபட்டிருந்த போது தபால்காரன் வந்து, "ஸார்! தபால்!" என்றதும், தான் அலட்சியமாக, "போட்டு விட்டுப் போ!" என்று சொன்னதும் ஞாபகம் வரவே, திடுக்கிட்டு எழுந்து ஜன்னலண்டை சென்று அங்கே தரையில் கிடந்த கடிதத்தை எடுத்தான். அதில் நாலு மூலையிலும் மஞ்சள் தடவியிருந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாணா, "ஏண்டா, உலக்கை! கல்யாணக் கடுதாசைக்கூடப் பிரிச்சுப் பார்க்காமலா தூங்கிண்டிருந்தாய்!" என்றான்.

ஸ்ரீதரன் நாணாவைச் சிறிதும் பொருட்படுத்தாமல் பரபரப்புடன் உறையை உடைத்து உள்ளிருந்த கடிதத்தைப் பார்த்தான். அவனுடைய தகப்பனார் ராஜா ராமய்யரின் கடிதந்தான். கடிதம் எழுதியிருந்ததோரணையில் அவர் தம் பேரில் அதிகமாகப் பொறுப்பைச் சுமத்திக் கொள்ள இஷ்டப்படவில்லையென்பது தெளிவாயிருந்தது. "இந்த வருஷம் எப்படியும் உனக்குக் கல்யாணம் செய்துவிடவேண்டுமென்பது உன் தாயாரின் விருப்பம். இனிமேல் தாமதிப்பது உசிதமில்லை யென்பதுதான் என் அபிப்பிராயமும். ஆகவே, கூடிய வரையில் எல்லாவற்றிலும் சிலாக்கியமாகத் தோன்றிய இடத்தில் கல்யாணம் நிச்சயம் செய்திருக்கிறோம். நாலாயிரம் ரூபாய் வரதட்சிணை பேசி ஆயிரம் ரூபாய் அட்வான்ஸு வாங்கியாகிவிட்டது..."

இதைப் படித்ததும் ஸ்ரீதரனுக்குத் தலையில் போட்டுக் கொள்ளலாமென்று தோன்றியது. அப்பாவுக்குக் கூடவா புத்தி இப்படிப் போக வேண்டும்?

மேலே ராஜாராமய்யர், எவ்வளவு ரூபாய்க்குப் பித்தளைப் பாத்திரம், வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைக்கிறார்கள்; பெண்ணுக்கு நகை என்னென்ன போடுகிறார்கள்; மாப்பிள்ளைக்கு உடுப்புக்கு எவ்வளவு ரூபாய் கொடுக்கிறார்கள்; மேற்கொண்டு என்னென்ன செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் விவரமாக எழுதியிருந்தார். கடைசியில், "இந்த விவரமெல்லாம் உனக்கு அவசியம் எழுத வேண்டுமென்று உன் தாயார் சொன்னதன் பேரில் எழுதியிருக்கிறேன். அம்மா போய்ப் பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தாள். மனஸுக்கு ரொம்பவும் பிடித்திருப்பதாகச் சொல்கிறாள். நீ நாளை இரத்திரி வண்டியிலேயே புறப்பட்டு வந்து சேர வேண்டியது" என்று கடிதத்தை முடித்துக் கையெழுத்துப் போட்டிருந்தார்.

'அம்மாவுக்கு மனஸுக்குப் பிடிச்சிருக்காம்! பலே! அம்மாதான் கல்யாணம் பண்ணிக்கப் போறாளாக்கும்!' என்று ஸ்ரீதரன் மனதுக்குள் எரிந்து விழுந்தான். அந்த எரிச்சல், கடிதத்தின் பின் குறிப்பாக எழுதியிருந்ததைப் படித்ததும் பல மடங்கு அதிகமாயிற்று.

"பெண்ணின் பெயர் சாவித்திரி..."

[நல்ல கர்நாடகப் பெயர்! தன் பெயரும் சத்தியவான் என்றிருந்தால், இருண்டு பேரும் நாடகமே ஆடிவிடலாம் என்று ஸ்ரீதரன் எண்ணினான்.]

"...தகப்பனாரின் பெயர் சம்பு சாஸ்திரி. அவர்களுக்குப் புதுச்சத்திரம் ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள நெடுங்கரை கிராமம். பரம்பரையான வைதிகக் குடும்பம். குலங் கோத்திரத்தில் அப்பழுக்குக் கிடையாது. இதையும் உன் தாயார் எழுதச் சொன்னாள்."

ஸ்ரீதரனுக்கு அழுகையே வந்துவிடும்போல் இருந்தது. பேஷ்! நல்ல இடம் பார்த்தார்கள்! போயும் போயும் கடைசியில் ஒரு பட்டிக்காட்டு சாஸ்திரி பெண்தானா கிடைத்தது? இந்தத் தடியன் நாணாவுக்கு, பிராம்மணார்த்த சாஸ்திரியின் பிள்ளைக்குப் பெரிய வக்கீல் வீட்டிலே கல்யாணம்; தனக்குப் பட்டிக்காட்டு சாஸ்திரி வீட்டில் கல்யாணம். பரம்பரை வைதிகமாம்! சிவ சிவா! அப்பம் வடையிலேயே முழுகியவர்போல் இருக்கு!

கடிதத்தைக் கோபமாகத் தரையில் விட்டெறிந்தான் ஸ்ரீதரன். அவன் அதைப் படித்துக் கொண்டிருந்தபோது சார்லஸ் கார்வியின் நாவலைப் புரட்டிக் கொண்டிருந்த நாணா திடுக்கிட்டு, "என்னடா இது கோபம்?" என்று கேட்டுவிட்டு அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினான்.

நாலாயிரம் ரூபாய் வரதட்சிணை என்ற விஷயத்தைப் படித்ததும், நாணா "பலே அடிச்சேடா பிரைஸ், நாலாயிரம் ரூபாய்!" என்று ஸ்ரீதரன் முதுகில் தட்டிக் கொடுத்தான். பாவம்! நாணாவின் கல்யாணத்தில் வரதட்சணை கிடையாது. லா காலேஜில் சேர்த்துப் படிக்க வைப்பதாக அவனுடைய மாமனார் ஒப்புக் கொண்டு, பணம் கொடுக்காமலே காரியத்தை முடித்து விட்டார். இப்போது அவன் மாமனார் வீட்டிலிருந்துதான் லா காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். டிராம் சத்தத்துக்கு இரண்டணா வேணுமென்றாலும் மாமனாரைத்தான் அவன் கேட்கவேண்டியதாயிருந்தது. ஆகவே, நாலாயிரம் ரூபாய் வரதட்சணை என்றதும், அவனுக்கு ஸ்ரீதரன் மேல் பொறாமை உண்டாயிற்று. இந்தப் பொறாமை, பின்னால், "சம்பு சாஸ்திரியின் பெண்" என்று படித்ததும் குதூகலமாக மாறியது.

"சபாஷ்! நெடுங்கரை சம்பு சாஸ்திரி பெண்ணா? ஹா! ஹா! ஹா!" என்று நாணா விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.

ஸ்ரீதரன் தன்னுடைய எரிச்சலையெல்லாம் அடக்கிக் கொண்டு, "ஏன்? அவாளையெல்லாம் உனக்குத் தெரியுமா என்ன?" என்று கேட்டான். "பேஷாய்த் தெரியும். நெடுங்கரை சம்பு சாஸ்திரின்னா தஞ்சாவூர் ஜில்லா பூராத் தெரியுமே? நீ கல்கத்தாவில் இருந்தவன்; உனக்குத் தெரியாது. மடிசஞ்சின்னா, ஒண்ணாம் நம்பர் மடிசஞ்சி. போறாத்துக்கு, பஜனை வேறே; 'பாண்டுரங்க விட்டலே' என்று நாமாவளி சொல்லிக்கொண்டு குதிக்க ஆரம்பித்தாரானால் ஊர் கிடுகிடுத்துப் போயிடும். ஆத்திலே, அம்பாள் உபாசனை! நவராத்திரி ஒன்பது நாளும் பூஜை பிரமாதப்படும்; அதை ஏன் கேட்கிறே, போ!"

ஸ்ரீதரனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, "நல்லவேளை! நீ ஆத்திலே ஆம்படையாள் உபாசனை பண்றயே அந்த மாதிரி இல்லையே; நிஜமா, சக்தி உபாசனைதானே பண்றார்? இருக்கட்டும்; அவர் பெண்ணைக்கூட நீ பார்த்திருக்கயா என்ன?" என்றான்.

நாணா திடீரென்று ஆச்சரியம் அடைந்தவனைப் போல், "ஏண்டா, நிஜமா நீ பொண்ணைப் பார்க்கலை? நீ பார்க்காமலேயா கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு! சரிதான், இப்பத்தான் விஷயம் தெரிந்தது. ஸ்ரீதரா! உன் அப்பாவும் அம்மாவுமாச் சேர்ந்து உன்னை நாலாயிரம் ரூபாய்க்கு வித்துட்டா! அவ்வளவுதான்" என்றான்.

"என்னை வித்துடறது அவ்வளவு இலேசில்லை. அது இருக்கட்டும். நீ பொண்ணைப் பார்த்திருக்கிறாயா, சொல்லு!"

"நன்னாப் பார்த்திருக்கேன். ஆனால் பார்த்து இரண்டு வருஷம் ஆச்சு. நான் பார்த்தபோது ஓர் அழுக்குப் பாவாடையைக் கட்டிண்டு மூக்கைச் சிந்திண்டு நின்னுது. ஆனால், நிஜத்தைச் சொல்லணுமோல்யோ? அந்தப் பொண்ணுக்குக் கண் ஒரு மாதிரி. ஒண்ணரைக் கண்ணுன்னு யாராவது சொன்னா, நம்பாதே, ஸ்ரீதரா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை."

நாணா சொன்னதெல்லாம் ஸ்ரீதரனுக்கு வேம்பாயிருந்தது. ஆனாலும் துணிந்து கடைசிக் கேள்வியைக் கேட்டுவிட்டான். "அந்த ஊரிலே பள்ளிக்கூடம் என்கிற நாம தேயம் கிடையாதே?" என்றான்.

"ஏன் கிடையாது? பொண்ணு படிச்ச பொண்ணான்னு தானே கேக்கறே? இரண்டாங் கிளாஸ் வரையிலும் படிச்சிருக்கா. ப-ட-ம் படம், கு-ட-ம் குடம் என்றெல்லாம் எழுத்துக் கூட்டிப் படிப்பாள். ஆனால், ஸ்ரீதரா! நான் சொல்றேன், கேளு. படிப்பாவது நாகரிகமாவது! படிப்பையும் நாகரிகத்தையும் நான் கட்டிண்டு அவஸ்தைப் படறது போதும், எங்கேயாவது ஐந்து நிமிஷம் வெளியிலே போனால், வீட்டிலே உத்தரவு கேட்டுண்டு போகவேண்டியிருக்கு. இரண்டு நிமிஷம் தாமதமாய்ப் போனா, 'ஏன் லேட்' என்ற கேள்வி. இந்த வம்பெல்லாம் உனக்கு வேண்டாம். பேசாமல், உன் அப்பா அம்மா தீர்மானிச்சிருக்கிற பொண்ணையே பண்ணிக்கோ-சரி? நான் வரட்டுமா? இன்றைக்கு ஸினிமாவுக்கு அழைச்சிண்டு போறதாச் சொல்லியிருக்கேன். உடனே போகாட்டா, ஸுலோசனா என்னை உசிரோட வைக்கமாட்டாள்."

"நாணா! போகிற வழியிலே, தந்தி ஆபீஸிலே, ஸ்ரீதரன் செத்துப் போய்விட்டான்; அவனுக்குக் கல்யாணம் வேண்டாம்' என்று எங்க அப்பாவுக்குத் தந்தி கொடுத்துட்டுப் போய்விடு."

"சீச்சி! என்னடா உளறுகிறே? சம்பு சாஸ்திரியைப் பற்றி நான் என்னமோ சொன்னேனே என்று நினைச்சுக்காதே. அப்படி ஒண்ணும் ரொம்ப மட்டமில்லை. நெடுங்கரையில் அவர்தான் பெரிய மிராசுதார். பொண்ணும் அப்படி அவலட்சணமா இருக்கமாட்டா. ராத்திரியே ஊருக்குக் கிளம்பிப் போ. வேணும்னா, பொண்ணை நேரிலே பார்த்துட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லு, தெரிகிறதா?"

"பேஷாய்த் தெரிகிறது."

"ஊருக்குப் போனதும் கடுதாசி போடு! ஏண்டா! கல்யாணத்துக்கு நான் வரணுமா, வேண்டமா?"

"கல்யாணம் நடந்தால் கட்டாயம் வரணும். பருப்பில்லாமல் கல்யாணமா?"

"நடந்தால் என்ன? கட்டாயம் நடக்கத்தான் போறது, நானும் பார்க்கத்தான் போறேன். உன் அம்மா பேச்சை மீறி நீ ஒரு காரியம் செய்துட்டா, நான் ஒத்தைக் காலால் நிற்க மாட்டேனா?..."

இப்படிச் சொல்லிக்கொண்டே நாணா வெளியேறினான்.

அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த ஆத்திரம், கோபம் எல்லாம் ஸ்ரீதரனுக்கு அப்போது பொத்துக் கொண்டு வந்தது. காகிதமும் பேனாவும் எடுத்துக் கொண்டு அப்பாவுக்கு வெகு காரமாகக் கடிதம் எழுதத் தொடங்கினான்.