பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காரி

அதிகமான் வரலாற்றிலே வந்த காரியும் ஏழு வள்ளல்களில் ஒருவன். அவன் முழுப் பெயர் மலையமான் திருமுடிக் காரி என்பது. மலையமான் என்பது அவன் குடிப் பெயர். திருக்கோவலூரே அவனுடைய தலைநகர். அதை நடுவிலே பெற்ற நாட்டைப் பல காலமாக ஆண்டு வந்தவர்கள் மலையமான்கள் என்னும் வீரக் குடியினர். அவர்கள் ஆண்ட நாடாதலின் அதற்கு மலையமான் நாடு என்ற பெயர் வந்தது. அது நாளடைவில் மாறி மலாடு என்று வழங்கலாயிற்று.

காரி ஈகையிற் சிறந்தவன்; வீரத்தில் இணையற்றவன். அவனிடத்தில் ஒரு பெரிய படை இருந்தது. தெரிந்தெடுத்த அடலேறு போன்ற வீரர்கள் அடங்கிய படை அது. அந்தப் படைப் பலத்தினால் அவனைக் கண்டால் யாரும் அஞ்சி நடுங்குவார்கள். இரு பெரு மன்னர்களுக்குள் போர் மூண்டால் அவரில் ஒரு மன்னன் மலையமான் திருமுடிக் காரியை அணுகுவான். தனக்குத் துணையாக வரவேண்டுமென்று சொல்வான். காரி தன் படையுடன் சென்று போரிலே ஈடுபடுவான். பிறகு வெற்றி யாருக்கு என்பதைப் பற்றி ஐயமே இல்லை. அவன் எந்தக் கட்சியில் சேர்ந்தானே அதற்குத்தான் வெற்றி.

அவனிடம் கரிய நிறம் பொருந்திய குதிரை ஒன்று இருந்தது; காரியென்பதே அதற்கும் பெயர். அது மலையமானுடைய உள்ளம் போலப் பாயும் இயல்புடையது.