ஆய்
59
தான். மலைமேல் உள்ள கோயிலில் எழுந்தருளியிருந்த சிவபெருமானுக்கே ஆகுக என்று அளித்துவிட்டான். தவம் செய்து கிடைப்பதாகிய அந்த நீல ஆடையை வழங்கி இறைவனையும் தன்னிடம் கொடை பெற்றவகை ஆக்கிவிட்டான் ஆய்.
இவ்வாறு விளங்கிய ஆய் அண்டிரன் பல காலம் புவவர் பாராட்டவும் மக்கள் மதிக்கவும் வாழ்ந்து இறைவன் திருவடிநிழலை அடைந்தான். அவனுடைய மனைவியரும் அவனுடன் தீப்பாய்ந்து உலக வாழ்வை நீத்தனரென்று தெரியவருகிறது.
அவனது பிரிவைத் தாங்காமல் புலவர்கள் துயரத்தால் வாடினார்கள். “பாடும் புலவர்களுக்குக் குதிரையும் களிறும் தேரும் நாடும் ஊரும் வழங்குவதில் சிறிதும் சளையாத ஆய் இன்று தன் மனைவியரோடு, காலனென்னும் கண்ணில்லாத கொடியவன் செலுத்த, மேலோருலகத்தை அடைந்தான். அவன் உடல் மறைந்தது. அவனால் நலம் பெற்ற புலவர்கள் தம் சுற்றத்தோடு பசியினால் வாடிப் பிறருடைய நாடுகளை நோக்கிப் புறப்பட்டுவிட்டார்கள்" என்று குட்டுவன் கீரனார் என்ற புலவர் பாடினார்.
முடமோசியார் இப்போது அழவில்லை. துயரம் எல்லைக்கு மிஞ்சிப் போய்விட்டது அவருக்கு. ஆதலின் பித்துப் பிடித்தவர்போல் ஆனார்; "அதோ கேளுங்கள். உங்கள் காதில் அந்த ஒலி விழவில்லையா? இந்திரனுடைய அரண்மனையில் முரசு முழங்குகிறதே! ஆய் அண்டிரன் வருகிறான் என்று வச்சிரப் படையையுடைய இந்திரன் வாழும் நகரத்தில் அவனை வரவேற்க ஏற்பாடு நடைபெறுகிறது. வானத்திலே அந்த ஒலிதான் கேட்கிறது" என்று பாடினார்.