பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

திருப்புகழ்

ருணகிரிநாத சுவாமிகள் பதினாயிரம் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடினார். இன்றைக்கு 1330 திருப்புகழ்ப் பாட்டுக்களே கிடைத்திருக்கின்றன. திரு.வ.த. சுப்பிரமணிய பிள்ளை என்பவர் மிகவும் முயன்று ஆங்காங்குச் சென்று சுவடிகளைத் தேடித் தொகுத்து 1330 திருப்புகழை வெளியிட்டார். அதற்கப்புறம் அவர் குமாரராகிய தணிகைமணி திரு.வ.சு. செங்கல்வராயப் பிள்ளை அவர்கள், புதியதாகக் கிடைத்த பாட்டுகளையும், முந்தினவற்றோடு சேர்த்து நன்கு சீர்திருத்தி மூன்று புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார். திருப்புகழ் படிக்கின்ற எல்லோரும் அந்தக் குடும்பத்தை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

திருப்புகழ்ப் பாடில்கள் மிக அற்புதமானவை. உலகம் எல்லாம் அற்புதம் என்று ஒதப் பாடும்படி இறைவன் அருளினானென்று அவரே சொல்கிறார்.
   "பூர்வ பச்சிம தட்சிண உத்தர
      திக்குள பக்தர்கள் அற்புதம் எனஒதும்
   சித்ர கவித்துவ சத்தமி குத்ததி
      ருப்புகழைச்சிறி தடியேனும்
   செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
      சித்தஅ நுக்ரகம் மறவேனே"
என்கிறார்.

திருப்புகழ் பாடல்களில் ஓசை நயமும் சந்த நயமும் அதிகம். சந்தப் பாடல்கள் பாடுவது அருமை. எந்தப் பாடலைப் பாட முடிந்தாலும் சந்தப் பாடலைப் பாடுவது எளிதன்று. தத்த, தந்த, தைய, தான, தனன முதலிய சந்தங்கள் வரும். வல்லினத்துக்கு வல்லினம், மெல்லினத்துக்கு மெல்லினம், நெடிலுக்கு நெடில், குறிலுக்குக் குறில், இப்படியாக மாறாமல் அமையும்படி பாட வேண்டும். அத்தகைய பாடல்களை முருகன் திருவருளால் அருணகிரிநாதர் வெள்ளம் போலப் பாடினார். பெரும்பான்மையான பாடல்கள் எளிதில் பொருள் விளங்கும் நிலையில் இருக்கின்றன.

அவற்றில் ராமாயணக் கதை வரும்; பாரதம் வரும். விநாயகர் புகழ் வரும்; அம்பிகையின் பெருமை வரும். சிவ பிரான் திருவிளையாடல்களையும் பாடியிருப்பார்; கண்ணன்

20