பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

நாம் எதையேனும் வாயில் போட்டுக் கொண்டு அதைத் திரும்ப வெளியில் துப்பினால் அதனை எச்சில் என்று சொல்லுகிறோம். உடம்புக்குள் போன எந்தப் பொருளாகட்டும், எந்த வழியாக வெளியே வந்தாலும் அதனை எச்சில் என்றோ, மலம் என்றோதான் சொல்கிறோம். நம்மிடமிருந்து வெளிவரும் அழுக்கை நாமே அருவருத்து ஒதுக்குகிறோம். ஆனால் உடம்புக்குள் இருந்து வெளியே வருவனவற்றுள் சிறந்த ஒன்று, எச்சில் படாத ஒன்று, மலமாகாத ஒன்று பேச்சுத் தான். அந்தப் பேச்சை சரியானபடி சொன்னால் எல்லோரும் கேட்பார்கள். உடம்புக்குள் இருந்து வெளி வருகின்ற எல்லாவற்றையும் எச்சில் என்றும், மலம் என்றும் சொல்லி வெறுக்கும் மனிதர்கள் விரும்பிக் கேட்டு அநுபவிக்கக் கூடியது பேச்சு.

அவ்வளவு அருமையாக நமக்குக் கிடைத்திருக்கும் பேச்சைப் பிறருடைய மனம் புண்படும்படியாகப் பலர் பயன்படுத்துகிறார்கள். குழந்தை தங்கக் கிண்ணத்தை எடுத்து வீதியில் போகிற நாயை அடிக்கிறமாதிரிதான் இருக்கிறது அது.

இறைவனுடைய அருளினால் பெற்ற வாக்கை அவனுடைய திருவருளை நினைந்து பாடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே மிகச் சிறந்த பயன்.

வாய் பெற்ற பயன்

றைவன் நமக்கு வாய் தந்திருப்பது சாப்பிடுவற்காக மாத்திரமா? அப்படியானால் எல்லா உயிர்களுக்கும் வாய் இருக்கிறது. நம்மைக் காட்டிலும் யானைக்கு மிகப் பெரிய வாய் இருக்கிறது. ஆனால் அதை வாயில்லாப் பிராணி என்றுதான் சொல்கிறோம். நாம் ஒரு கவளம் சாப்பிட்டால் யானை நூறு கவளத்தை ஒரே வாயில் சாப்பிட்டுவிடும். பெரிய பிராணி அல்லவா யானை? ஆனாலும், அதனை நாம் வாயில்லாப் பிராணி என்றே சொல்கிறோம். சாப்பிடுகின்ற வாய் வாயாகாது. பேசும் வாய்தான் வாய். யானைக்குப் பேசத் தெரியாது. ஆகையால் அது வாயில்லாப் பிராணி ஆயிற்று. நாம் பேசும் வாய் படைத்ததன் பயன் என்ன?


   "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
   தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை"

88.