உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

41

சிதம்பரம் பிள்ளை மேடை ஏறிவிட்டால், ஏன் நாம் சுதேசித் தொழில்களை ஆதரிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு கிராமத்தான் கூடப் புரிந்து கொள்ளுமளவிற்குப் பேசுவார்! அந்தப் பேச்சு மக்கள் இடையே அத்தகைய பெருமையைத் தேடித் தரும்.

‘சுதேசிப் பொருள்களை வாங்குவதானால் விலைகள் அதிகமாகிறதே’ என்று மக்கள் சிதம்பரனாரைத் திருப்பிக் கேட்ட போது. ‘நீங்கள் கொடுப்பது உங்களுடைய சகோதரர்களுக்குத் தானே’ என்பார்.

தூத்துக்குடியில், சுதேசிக் கிளர்ச்சி அரசியல் புரட்சியாக மாறியது. அதை அறிந்த அதிகாரிகள், எவரும் ஆயுதங்களையோ, தடி, கம்பு, கொம்புகளையோ எடுத்துச் செல்லக் கூடாது என்று தடை விதித்தார்கள்.

சிதம்பரனார் இதைக் கேள்விப்பட்டு, பெருங் கோபமடைந்து, ‘வேல் பிடித்த வீரத் தமிழர்கள்.இப்போது கோல்கள் கூட பிடிக்க உரிமை இல்லையா?’ என்று ஆத்திரப்பட்ட அவர் ஆட்சி ஆணையை மீறுமாறு கட்டளையிட்டார். அடிமைத் தனத்தால் மக்கள் படும் அவதிகளைக் கண்டு வருந்தினார். “ஆளப் பிறந்த நம்மை ஆறாயிரம் மைலுக்கப்பாலிருந்து வந்த ஆங்கிலேயன் ஆள்வதா?” என்று கேட்டார். இதுவே, பின்னாளில் திருநெல்வேலிப் புரட்சிக்குக் காரணமானது. சிதம்பரனார் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் படை திரட்டினார். மக்களும் அவரைப் பின்பற்றினார்கள்.