30
கப்பலோட்டிய தமிழன்
பணியிலே இருந்து தாமாகவே ஒய்வு பெற்றார்கள். பலர் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல்களைப் பெற்றுச் சென்றார்கள்.
இந்த நேரத்தில், பிரிட்டிஷ் கப்பல் மீது வேண்டுமென்றே சுதேசிக் கப்பல் மோதியதாக, துறைமுக அதிகாரிகளிடம் ஆங்கிலேய நிர்வாகத்தினர் புகார் செய்தார்கள். இந்தப் புகாருக்குப் பிறகு வெள்ளையர் நிர்வாகக் கப்பல் புறப்பட்ட பின்புதான் சுதேசிக் கப்பல் துறைமுகத்தை விட்டுப் புறப்பட வேண்டும் என்று சப் மாஜிஸ்திரேட் வாலர் உத்தரவிட்டார். ஏன், இந்த சூழ்ச்சியான உத்தரவை அவர் பிறப்பித்தார்?
பிரிட்டிஷ் கப்பலுக்குரிய பிரயாணிகளை முதலில் நிரப்பிக் கொண்டால், அடுத்துப் புறப்பட இருக்கும் சுதேசிக் கப்பலுக்குத் தேவையான பிரயாணிகள் இருக்க மாட்டார்கள் அல்லவா? அதனால், சிதம்பரனார் நிர்வாகத்துக்கு நஷ்டம் மேல் நஷ்டம் ஏற்பட்டு நிர்வாகச் சீர்கேடுகள் உருவாகி, கம்பெனியை மூடி விடும் நிலையும் ஏற்பட்டு விடும் என்று எண்ணியே அந்த மாஜிஸ்திரேட் இப்படிப்பட்ட சூழ்ச்சியான உத்தரவைப் பிறப்பித்தார் என்று துத்துக்குடிப் பொதுமக்களும், பிரயாணிகளும் பரவலாகப் பேசலானார்கள்.
இந்த சூது நிறைந்த உத்தரவை எதிர்த்து சுதேசிக் கம்பெனியார் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் மேல் முறையீடு வழக்குப் போட்டார்கள். அதே நேரத்தில், ‘சுதேசிக் கப்பல் - பிரிட்டிஷார் கப்பல் மீது மோதவில்லை, அது பொய் புகார்’ என்பதையும் சுதேசி நிறுவனம் நீதி முன்பு நிரூபித்துக் காட்டியது.