பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை.

உவமைகளும், உதாரணங்களும் மேற்கொள்ளும் கருத்துக்களை விளக்க உதவி புரிகின்றன. வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து எடுத்துக் காட்டும் உவமைகளால் பொருள் விளங்குவதைப் போல, மற்ற எதனாலும் அவ்வளவு தெளிவாக விளங்குவதிலை. அதனால் பல பல உவமைகளைப் பேச்சினிடையே பயன்படுத்துவது என் வழக்கமாகிவிட்டது.

எழுதும் கட்டுரையில் உள்ள செறிவு இதில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் விளங்காத பகுதி ஒன்றும் இதில் இராதென்றே எண்ணுகிறேன். பேச்சைக் கேட்கும்போது உண்டாகும் அநுபவம் வேறு. பேச்சில் தொனி வேறுபாடுகளும், பேசுபவனுக்கு நேரே கேட்பவர்கள் இருந்து ஒரு முகமாகக் கவனிக்கும் வாய்ப்பும் உண்டு. அதனால் பேச்சில் ஓரளவு சுவை பிறக்கிறது. அந்த வாய்ப்புக் கட்டுரைகளுக்கு இல்லை. ஆனாலும் பன்முறை படித்துப் படித்து இன்புற இயலும்.

இதற்கு முன் வெளியிட்ட "அலங்காரம்" என்னும் புத்தகத்தில் உள்ள சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்துத்தந்த என் அன்பர் திரு. அனந்தன் அவர்களே இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றையும் எடுத்தார். அவருடைய அன்பை அளவிட்டுச் சொல்வது இயலாத காரியம். ஒன்றரை மணி நேரம் விடாமல் சுருக்கெழுத்து எழுதிப் பிறகு அதைத் தட்டெழுத்தில் வார்த்துத் தர வெறும் ஆற்றல் மாத்திரம் இருந்தால் போதாது; தனியான அன்பு இருப்பதனால்தான் இது அவருக்குச் சாத்தியமாகிறது. அந்த அன்பும் அவர் ஆற்றலும் அவர் நலங்களும் முருகன் திருவருளால் மேன்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று இரவு ஏழு மணி முதல் எட்டரை மணி வரையில் இந்தச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறேன். ஒன்றரை மணி நேரம் பொறுமையோடு இருந்து கேட்கும் அன்பர்கள் என் உள்ளத்தே ஊக்கம் உண்டாகும்படி செய்கிறார்கள். அவ்வப்போது அவர்கள் காட்டும் களிப்புக் குறிப்பு அவ்வூக்கத்துக்கு உரமூட்டுகிறது.

127