தியாக பூமி/பனி/நல்ல சேதி

விக்கிமூலம் இலிருந்து

நல்ல சேதி

தலை தீபாவளிக்குப் பிறகு இன்னும் இரண்டு தீபாவளிகள் வந்துவிட்டுப் போயின. கார்த்திகை முடிந்து, மார்கழி மாதம் பிறந்தது.

பருவ காலங்கள் எந்தப் பஞ்சாங்கம் அல்லது காலெண்டரை வைத்துக் கொண்டு தேதி பார்க்கின்றனவோ, தெரியவில்லை. அதிலும் மற்றப் பருவங்கள் கொஞ்சம் முன் பின்னாக வந்தாலும் வரும். பனிக்காலம் மட்டும் தேதி தவறி வருவது கிடையாது. கார்த்திகை எப்போது முடியப் போகிறது, மார்கழி எப்போது பிறக்கப் போகிறது என்று பார்த்துக் கொண்டேயிருந்து மார்கழி பிறந்ததும், பனியும் தொடங்கிவிடுகிறது. ஜனங்களும், கம்பளிச் சொக்காய், பனிக் குல்லாய் காஷ்மீர்ச் சால்வை, கோரைப் பாய் ஆகியவற்றைத் தேடத் தொடங்குகிறார்கள்.

அந்த மாதங்களில் அதிகாலையில் எழுந்திருப்பதற்குச் சாதாரணமாய் யாருக்கும் மனம் வருவதில்லை. பட்சிகளின் உதய கீதத்தைக் கேட்டதும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ளத்தான் தோன்றும். ஆனால், மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் என்பதை நினைத்து அதிகாலையில் பஜனை செய்ய விரும்பும் பக்தர்களும், குடுகுடுப்பாண்டிகளும் மட்டும் பனியையும் குளிரையும் இலட்சியம் செய்யாமல் எழுந்து விடுவார்கள்.

ஒரு நாள் அதிகாலையில் சம்பு சாஸ்திரி வழக்கம் போல் விழித்துக் கொண்டார். ஆனால், உடனே படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. அவசரமாய் எழுந்து என்ன ஆகவேண்டுமென்று தோன்றியது. மூன்று வருஷத்துக்கு முன்பு வரையில் மார்கழி மாதம் என்றால், நெடுங்கரை கிராமத்தில் பிரமாதமாயிருக்கும். அதிகாலையில் வீதி பஜனை நடக்கும். பிறகு சம்பு சாஸ்திரியின் வீட்டில் பூஜை, ஹாரத்தி, பொங்கல் பிரஸாத விநியோகம் எல்லாம் உண்டு. அதெல்லாம் இப்போது பழைய ஞாபகமாகி விட்டது. சாஸ்திரியைச் சாதிப் பிரஷ்டம் செய்த வருஷத்தில், வீதி பஜனை நின்று போயிற்று. காலை வேளையில் பொங்கல் பிரஸாதத்துக்காகவும் அவர் வீட்டுக்கு யாரும் போகவில்லை. 'ஊரார் சாதிப்பிரஷ்டம் பண்ணியது இந்த ஒரு காரியத்துக்கு நல்லதாய்ப் போயிற்று' என்று மங்களம் மனத்திற்குள் எண்ணிக் கொண்டாள்.

அடுத்த வருஷத்தில் சாதிக் கட்டுப்பாடு தளர்ந்து விட்டது. ஊரில் தீக்ஷிதருடைய கிருத்திரிமங்களைப் பொறுக்க முடியாத சிலர் பகிரங்கமாகவே சம்பு சாஸ்திரியின் கட்சி பேசத் தொடங்கினார்கள். பிறகு, பெயருக்கு ஏதோ பிராயச்சித்தம் என்று நடந்தது. இப்போது அக்கிரகாரத்தில் அநேகர் சாஸ்திரி வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

ஆனால், முன்னைப் போல் சம்பு சாஸ்திரிக்கு வாழ்க்கையில் உற்சாகம் இல்லை; முன் மாதிரி பணச் செலவு செய்வதற்கு வேண்டிய வசதிகளும் இல்லை. சாவித்திரி, புருஷன் வீட்டுக்குப் போகாமலிருந்தது அவருடைய உள்ளத்தில் ஒரு பெரிய பாரமாய் இருந்து கொண்டிருந்தது. ஆகவே, ஏகாதசி பஜனை, மார்கழி பஜனை எல்லாம் நின்று போயின.

ஆனால் சாஸ்திரி அதிகாலையில் எழுந்திருப்பது மட்டும் நிற்கவில்லை. தாம் எழுந்திருக்கும்போது சாவித்திரியையும் எழுப்பி விட்டு விட்டுத் தடாகத்துக்குப் போவார். பனிக் காலத்தில், அதிகாலையில் வெத வெத என்று சூடாயிருக்கும் குளத்து ஜலத்தில் ஸ்நானம் செய்வது ஓர் ஆனந்தமாயிருக்கும். பிறகு, சூரியோதயம் வரை காத்திருந்து சூரிய நமஸ்காரம் செய்வார். பனிக் காலத்தில், சூரியன் கிளம்பிக் கொஞ்ச நேரம் வரையில் பனிப் படலம் சூரியனை மறைத்துக் கொண்டிருக்கும். 'இப்படித்தானே மாயையாகிற பனி ஆத்ம சூரியனை ஜீவனுடைய கண்ணுக்குப் புலப்படாமல் மறைத்துக் கொண்டிருக்கிறது?' என்று வேதாந்த விசாரணை செய்வார்.

அவர் வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள், சாவித்திரி எழுந்திருந்து, படங்களுக்கு அலங்காரம் செய்து, விளக்கேற்றி வைத்து, பூஜைக்கு எல்லாம் எடுத்து வைத்திருப்பாள். சாஸ்திரி வந்ததும் பூஜை செய்துவிட்டு வேறு காரியங்களைப் பார்ப்பார். இன்று, வழக்கம் போல், அதிகாலையில் விழித்துக் கொண்டவர், பழைய நாளில், மார்கழிப் பஜனை எவ்வளவு விமரிசையாய் நடந்தது என்பதைப் பற்றிச் சிறிது நேரம் சிந்தனை செய்து கொண்டிருந்தார். பிறகு, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, "அம்மா! சாவித்திரி! எழுந்திரு, அம்மா!" என்றார். அதே சமயத்தில் மனத்திற்குள், 'ஐயோ! இந்தக் குழந்தையின் கஷ்டம் எப்போது தீரப்போகிறதோ, தெரியவில்லையே!' என்று ஏங்கினார்.

அப்போது வாசலில், குடுகுடுப்பாண்டி, "நல்ல சேதி வருகுது, நல்ல சேதி வருகுது! குடுகுடுக் குடுகுடுக்! ஐயா வீட்டுக்கு நல்ல சேதி வருகுது!! குடுகுடுக் குடுகுடுக்!" என்று சொல்லிக் கொண்டு போனான்.

சாஸ்திரியின் குரலைக் கேட்டு சாவித்திரி மட்டும் விழித்துக் கொள்ளவில்லை; மங்களமும் விழித்துக் கொண்டாள். அவள் எழுந்து போகையில், "நல்ல சேதி வரும், நல்ல சேதி வரும்னு இரண்டு வருஷமாய்த்தான் காத்திண்டிருக்கு. வந்த பாட்டைக் காணோம். இந்தத் துக்கிரியின் தலையிலே பகவான் என்ன எழுதியிருக்காரோ?" என்று சொல்லிக் கொண்டே போனாள்.

"ஹே ராமச்சந்திரா!" என்றார் சாஸ்திரியார். பிறகு, "அவள் கிடக்கா, குழந்தை! நீ போய்ப் பூஜைக்கு ஆக வேண்டியதைப் பார்!" என்றார்.

சாவித்திரி புருஷன் வீட்டுக்குப் போகாமலிருப்பது பற்றி மங்களம் இடித்துக் காட்டியது இது முதல் தடவையல்ல; எத்தனையோ தடவை அவள் இந்த மாதிரி சொல்லிச் சொல்லிச் சாவித்திரிக்குக் காய்த்துப் போயிருந்தது. எனவே, சாதாரணமாக அவள் அதை இலட்சியம் செய்வதில்லை. ஆனால், இன்றைய தினம் அவளுடைய மனம் ரொம்பவும் புண்பட்டுப் போயிற்று. ஏனெனில், வாசலில் குடுகுடுப்பாண்டி, "நல்ல சேதி வருகுது; நல்ல சேதி வருகுது!" என்று கூவியபோது, மங்களத்துக்குத் தோன்றிய அதே எண்ணம் சாவித்திரிக்கும் தோன்றியது. 'ஒரு வேளை இன்றைக்கு நல்ல சேதி வரக்கூடாதா? என்னை அனுப்பி வைக்கும்படி அவாளிடமிருந்து கடிதம் வரக்கூடாதா?' என்று அவள் மனம் ஏங்கிற்று. அந்தச் சமயத்தில் மங்களம் அம்மாதிரி இடித்துக் காட்டிய படியால் சாவித்திரிக்குத் துக்கம் அடைத்துக் கொண்டு வந்தது.

முடிந்த வரையில் துக்கத்தை அடக்கிக் கொண்டு சாவித்திரி தந்தையின் பூஜைக்கு ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்தாள். பிறகு வீட்டு வேலைகளையும் செய்தாள். எல்லாம் ஆன பிறகு, காமரா உள்ளுக்குப் போய்க் காகிதம், பேனா, மைக்கூடு எடுத்து வைத்துக் கொண்டு கடிதம் எழுதத் தொடங்கினாள்.

யாருக்குக் கடிதம் எழுதினாள் என்று சொல்லவும் வேண்டுமா? காரியம் செய்யும்போதும், கதை கேட்கும் போதும், கடவுளைத் தியானிக்கும் போதும், உண்ணும் போதும், உறங்கும் போதும் யாருடைய நினைவாகவே இருந்தாளோ, அந்த மகா-௱-௱-ஸ்ரீ ஸ்ரீதரன் பி.ஏக்குத் தான்.

"என் உயிருக்குயிரான பிராணநாதருக்குத் தங்கம் அடியாள் சாவித்திரி அனந்த கோடி நமஸ்காரம்..."

இப்படி எழுதிச் சாவித்திரி நிறுத்தினாள். இதுவரையில் இம்மாதிரி எத்தனை கடிதம் எழுதியிருக்கிறோம் என்பது ஞாபகம் வந்தது. குறைந்தது, பத்துப் பன்னிரண்டு கடிதங்கள் இருக்கும். அவையெல்லாம் என்ன ஆயின?

மங்களம் அதிகாலையில் சொன்னது ஞாபகம் வந்தது; "இந்தத் துக்கிரியின் தலையெழுத்து எப்படி இருக்கிறதோ?" ஆமாம்; இந்தத் துக்கிரியின் ஜன்மத்தில் தலையெழுத்துச் சரியாயில்லாத போது எத்தனை கடுதாசி எழுதித்தான் என்ன பிரயோஜனம்?

பாவம்! சாவித்திரி, தன்னைப் புக்ககத்துக்கு அழைத்துப் போகாததன் காரணம், ஊரிலே தங்களைச் சாதிப் பிரஷ்டம் பண்ணி வைத்திருந்ததுதான் என்று நம்பியிருந்தாள். தலை தீபாவளிக்கு நாலு நாளைக்குப் பிறகு கல்கத்தாவிலிருந்து கடிதம் வந்தது. அதில், அந்த மாதிரிதான் எழுதியிருந்தது. ஊரார் அவர்களைச் சாதிப் பிரஷ்டம் செய்து வைத்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறதென்றும், சாஸ்திரியின் காரியங்கள் தங்களுக்கும் கட்டோ டே பிடிக்கவில்லையென்றும், வீட்டிலே ஒரு பெண் இருக்கிறாளே என்பதை உத்தேசித்தாவது ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டாமா என்றும், இத்தகைய நிலைமையில் தலை தீபாவளிக்கு வரப்பிடிக்காதபடியால் வரவில்லையென்றும் கடிதம் சொல்லிற்று. இந்தக் கடிதம் வந்த பிறகு, சாவித்திரியின் ஏமாற்றமெல்லாம் ஊராரின் மேல் கோபமாக மாறிற்று. அவர்கள் ஏதோ இல்லாததும் பொல்லாததும் எழுதியிருக்க வேண்டுமென்றும், அதனால் தான் வரவில்லையென்றும், உண்மை விவரங்கள் தெரியும்போது மாப்பிள்ளையும் சம்பந்திகளும் தீபாவளிக்கு வராதது பற்றி வருத்தப்படுவார்களென்றும் அவள் எண்ணினாள். ஆகவே, அப்பாவை விவரமாகக் கடிதம் எழுதும்படி அடிக்கடி தூண்டினாள். அவரும் எழுதினார். ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை எழுதினார். ஒன்றுக்காவது பதில் கிடையாது. பிராயச்சித்தம் செய்து கொண்டு ஊர்க் கட்டுப்பாடு நிவர்த்தியான பிறகு மறுபடியும் கடிதம் எழுதினார். அப்போதும் பதில் இல்லை.

சில நாளைக்குப் பிறகு, சாந்திக் கல்யாணம் எப்போது வைத்துக் கொள்வதாக உத்தேசம் என்று கேட்டு எழுதியதற்கும் அதே கதிதான்.

ஒரு நாளைக்குச் சம்பு சாஸ்திரி, "அம்மா, சாவித்திரி நான் எத்தனையோ கடிதம் எழுதியாச்சு, ஒன்றும் பிரயோஜனம் இல்லை. நீயாவது உன் அகத்துக்காரருக்கு ஒரு கடிதம் எழுதிப் பாரம்மா!" என்றார்.

சாவித்திரியின் உள்ளத்தில் இந்த எண்ணம் வெகு நாளாக இருந்து கொண்டிருந்தது. தகப்பனாரே சொன்னதும், உடனே கடிதம் எழுதத் தொடங்கினாள். ஸ்ரீதரனிடம் தனக்குள்ள அன்பையும், இத்தனை காலமாக அவரைப் பாராததால் தான் அநுபவிக்கும் துக்கத்தையும், உடனே அவரை வந்து அடையத் தன் உள்ளம் துடித்துக் கொண்டிருப்பதையும், அவளால் முடிந்த வரையில் உருக்கமாக எழுதினாள்.

இந்தக் கடிதத்துக்கு உடனே பதில் வருமென்று சாவித்திரி நம்பினாள். தினந்தோறும் தபால்காரன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தாள். இரண்டு வாரம் வரையில் பதில் வராமல் போகவே, ஒரு வேளை போய்ச் சேரவில்லையோ என்னவோ என்று மறுபடியும் எழுதினாள்.

இந்த மாதிரி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி மனத்தைத் தேற்றிக் கொண்டு, சென்ற ஏழெட்டு மாதத்தில் பத்துக் கடிதங்கள் எழுதிவிட்டாள்.

ஆனால், பாவம், இந்தக் கடிதங்கள் எல்லாம் அவள் எதிர்பார்த்ததற்கு நேர் மாறான பலனை அளித்து வந்தன என்பது அவளுக்கு எப்படித் தெரியும்?

ஆம்; அவளுடைய கடிதம் ஒவ்வொன்றும் ஸ்ரீதரனுக்கு அவள்மேல் இருந்த வெறுப்பை அதிகப்படுத்தியே வந்தன. மேல் விலாசத்தில் அவளுடைய குழந்தைக் கையெழுத்தைப் பார்த்ததுமே அவனுக்குக் கோபம் கோபமாய் வரும். 'ஐயோ! இந்தப் பிராப்தத்தைக் கொண்டு வந்து என் கழுத்திலா கட்ட வேண்டும்?' என்று எண்ணுவான். யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயத்துடன், கடிதத்தை அவசர அவசரமாகப் பார்த்து விட்டு, சில சமயம் படிக்காமலேயே, சுக்கு நூறாய்க் கிழித்துப் போட்டு விடுவான். சாவித்திரியின் கடிதங்களில் அவள் காட்டியிருந்த விநயம், பயபக்தி, உருக்கம் எல்லாம் அவன் மனத்தில் அருவருப்பையே உண்டாக்கின.

இதையறியாத சாவித்திரி மேலும் மேலும் மேலும் கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டேயிருந்தாள். சம்பு சாஸ்திரியும் சலிக்காமல், அம்பாளை வேண்டிக் கொண்டு, அவளுடைய கடிதங்களைத் தபாலில் சேர்த்து வந்தார்.

கடைசியாக சாவித்திரி இன்றைய தினம் கடிதம் எழுத ஆரம்பித்தபோது. இதுதான் அவருக்கு நாம் எழுதும் கடைசிக் கடிதம் என்று தீர்மானித்துக் கொண்டாள். மேஜையின் மீதிருந்த 'ஸெல்லூலாயிட்' பொம்மையைப் பார்த்தவண்ணம், "பாப்பா! இந்தக் கடிதத்துக்காவது அவாளிடமிருந்து பதில் வந்தால் போச்சு இல்லாமற் போனால், நான் "கிணற்றிலோ குளத்திலோ விழுந்து செத்துப் போயிடுவேன். அப்புறம் உன்னோடு யார் விளையாடுவார்கள்?" என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டாள். அப்போது, தான் மூன்று வயதிலே கிணற்றில் விழுந்ததாக அப்பா சொன்னது ஞாபகம் வந்தது. 'ஐயோ! அப்போதே நான் செத்துப் போயிருக்கக் கூடாது? பாவி நல்லான் எதற்காக என்னை எடுத்தான்?' என்று நினைத்துப் பெருமூச்சு விட்டாள். பிறகு, மனத்தை திடப்படுத்திக் கொண்டு, ஒருவாறு கடிதத்தை எழுதி முடித்தாள்.

அந்தச் சமயத்தில், சம்பு சாஸ்திரி, "அம்மா, சாவித்திரி! உன் கலி தீர்ந்துவிட்டது அம்மா!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தியாக_பூமி/பனி/நல்ல_சேதி&oldid=6307" இலிருந்து மீள்விக்கப்பட்டது