அந்திம காலம்/அந்திம காலம் - 19

விக்கிமூலம் இலிருந்து

அப்புறம்...?

பரமாவின் பதினாறாம் நாள் சடங்கை ஒரு பண்டாரத்தை வைத்துச் செய்தார்கள். சுந்தரம் கூட இரவு கொஞ்ச நேரம் தூங்கி விடியற் காலையில் எழுந்து அவர்களோடு கடற்கரை வரை சென்று வந்தார்.

சடங்குகள் முடிந்ததும் ராதாவும் சிவமணியும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு கோலாலம்பூர் திரும்பினார்கள். ராதா சுந்தரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் அழுதாள். இழந்த மகனை நினைத்து அழுகிறாளா, திடீரென்று கைவிட நேர்ந்த இங்கிலாந்துக் காதலனை நினைத்து அழுகிறாளா, அல்லது சிவமணியோடு சேர்ந்து அனுபவிக்கக் காத்திருக்கும் எதிர்காலத் துன்பங்களை நினைத்து அழுகிறாளா என்று அவருக்கு விளங்கவில்லை. அவள் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்து விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

சுந்தரம் மூன்றாம் மாதப் பரிசோதனைக்கும் ஆறாம் மாதப் பரிசோதனைக்கும் மௌன்ட் மிரியம் சென்று வந்தார். பினாங்கு பொது மருத்துவ மனையிலும் சோதனைகள் நடந்தன. புற்று நோய் திரும்பவில்லை. ஆனால் முற்றாக இல்லை என்று நிச்சயப் படுத்திக் கொள்வதற்கு ஓராண்டு செல்ல வேண்டும் என எச்சரித்து வைத்தார்கள். "கடவுள் உங்களுக்கு வைத்த சோதனையில் நீங்கள் தேர்ந்துவிட்டதாகத்தான் தெரிகிறது" என மதர் மேகி தன் சிரிப்பு மாறாத முகத்துடன் அவரிடம் கூறியிருந்தார்.

அன்னம் அக்காளும் அத்தையும் தைப்பிங்கிற்குத் திரும்பியிருந்தார்கள். அன்னம் டியூஷன் வகுப்புக்களை மீண்டும் தொடங்கியிருந்தாள். ஆனால் அவள் வாழ்க்கை முன்பு போல் அமைதியாக இல்லை. அத்தை அடிக்கடி நோய்வாய்ப் பட்டுக் கொண்டிருந்தாள். அத்தைக்கும் 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அத்தையை கிளினிக், தைப்பிங் பொது மருத்துவ மனை என்று கொண்டு ஓராண்டுகள் திரிந்தாள். கடைசி முறையாக அத்தை மூச்சிறைக்க வீட்டில் கிடந்த போது உதவிக்கு ஆள் இல்லாமல் ஆம்புலன்சைக் கூப்பிட்டு ஏற்றிக் கொண்டு செல்லும் வழியிலேயே அத்தையின் மூச்சு பிரிந்து விட்டது. சாகும் போதும் அவள் "ஐயோ தண்ணி! தண்ணி!" என்று முனங்கிக் கொண்டுதான் கிடந்தாள் என அன்னம் கூறினாள்.

அத்தையின் ஈமச் சடங்குகளை தைப்பிங்கிலேயே அடக்கமாக நடத்தினாள் அன்னம். சுந்தரமும் ஜானகியும் சென்று உதவிகள் செய்து வந்தார்கள். "தனியாக இருக்க வேண்டாம் பினாங்கில் வந்து எங்களோடு இரு" என்று எவ்வளவோ வற்புறுத்தியும் அன்னம் "பார்க்கலாம், பார்க்கலாம்" எனத் தட்டிக் கழித்துவிட்டாள்.

தைப்பிங்கில் ஈமச் சடங்கை முடித்துக் கொண்டு அவர்கள் பினாங்கு திரும்பிய நாளில் ஜிம்மி சோர்ந்து படுத்திருந்ததைக் கண்டார். அன்றும் அடுத்த நாளும் அது சாப்பாட்டைத் தொடவில்லை. காலையில் சுந்தரம் எழுந்து வௌியே வரும் வேளைகளில் படுத்த இடத்தை விட்டு நகராமல் முகத்தைத் தரையில் பதித்து வாலை மட்டும் தரையில் தட்டி அவரை விழித்து விழித்துப் பார்த்தது.

ராமாவை வரச் சொல்லி இருவருமாக ஜிம்மியைத் தூக்கிக் காரில் போட்டு விலங்கு வைத்தியரிடம் கொண்டு சென்றார்கள். அவர் பரிசோதித்து விட்டு வயிற்றில் கடுமையான புண் இருக்கிறதென்றார். ஏதோ நச்சுள்ள பொருள் சாப்பிட்டிருக்கிறதென்றார். இரண்டு நாள் வைத்துப் பார்க்கிறேன் என்றார். ஆனால் மறுநாள் மாலையில் போன் செய்து ஜிம்மி உயிரை விட்டு விட்டதென்றார். அதன் உடலைப் போய் பார்த்து விட்டு, தடவிக் கொடுத்துவிட்டு அந்த விலங்கு மருத்துவர் மூலமாகவே உடலை எரிக்க ஏற்பாடு செய்து விட்டு வந்தார்கள்.

சுந்தரம் பகலெல்லாம் கவலையாக, ஆனால் தைரியமாக இருந்துவிட்டு அன்று இரவில் அழுதார். ஜிம்மி இல்லாத காலைப் பொழுதுகள் வெறிச்சோடிப் போய்விட்டன.

ஜானகி இரவில் தூங்கவும் மூச்சுவிடவும் சிரமப் பட்டாள். அவளுக்கு ஆஸ்த்துமா கண்டிருக்கிறது என டாக்டர்கள் கூறினார்கள். முதிய வயதில் ஆஸ்த்மா வந்தால் கடுமையாக இருக்கும் என்றும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அவளுக்குத் திரவ மருந்துகளும் வாயில் வைத்து இழுத்து நுரையீரலுக்குள் நேராக மருந்து செலுத்தும் பம்ப்பும் கொடுத்தார்கள்.

ஜானகியின் சுகமின்மையைக் கேள்விப்பட்டு அவளைப் பார்க்க ராதா தனியாகத்தான் வந்திருந்தாள். சிவமணி வேலையாக இருப்பதாகக் கூறினாள். ராதா கொஞ்சம் தடித்திருப்பது போல் தோன்றியது. ஜானகியின் சந்தேகம் சரியாக இருந்தது. "ராதா மறுபடியும் கர்ப்பமா இருக்குங்க!" என்று சுந்தரத்திடம் மகிழ்ச்சியுடன் அன்று இரவு கூறினாள் ஜானகி. ஆனால் ராதாவின் முகத்தில் அது பற்றிப் பெரிய மகிழ்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை.

பிறக்கும் குழந்தை ஆணாக இல்லாமல் பெண்ணாக இருந்தால் நல்லது என நினைத்தார். தனது புற்றுநோய் ஜீன் ஆண்களைத்தான் பாதிக்கிறது, ஆண்கள் வழியாகத்தான் பரவுகிறது என்ற நினைப்பு இருந்து கொண்டே இருந்தது. வசந்தனைப் பற்றிய கவலையும் தோன்றியிருந்தது.

சுந்தரத்தின் நோய் குணமானது என்று உறுதிப் பட்டவுடன் இனியும் மகனுக்குத் தெரிவிக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக அவனுக்கு நடந்தவற்றை விரிவாக எழுதினார் சுந்தரம். அவன் டாக்டரிடம் இதைச் சொல்லி தனது உடலையும் அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறியிருந்தார்.

கடிதம் கிடைத்த அன்று அவன் உடனே போன் செய்து பேசினான். இவ்வளவு நடந்திருந்தும் தனக்குச் சொல்லவில்லையே எனக் கோபித்துக் கொண்டான். அடுத்த ஆண்டு இறுதியில் படிப்பை முடித்துக் கொண்டு திரும்பிவிடுவேன் எனச் சொன்னான்.

தைப்பிங்கில் இருந்து தனியாக ஆக்கிச் சாப்பிட்டு டியூஷன் நடத்தி அன்னத்துக்கு அலுத்து விட்டது. ஜானகியின் உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி சுந்தரம் மீண்டும் ஒருமுறை பினாங்குக்குத் திரும்பும்படி வற்புறுத்தியவுடன் அவள் அதை ஏற்றுக் கொண்டாள். தைப்பிங் தாமான் இளையதம்பி வீட்டையும் வாடகைக்குக் கொடுத்துவிட்டு அவள் ஒரு நல்ல நாளில் பினாங்கில் சுந்தரத்துடன் நிரந்தரமாகக் குடியேறிவிட்டாள்.

ராதாவின் பிரசவம் கோலாலம்பூரிலேயே அவள் மாமியாரின் மேற்பார்வையில் நடந்தது. அவளைப் பினாங்குக்கு அனுப்புவதில் அவர்கள் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை.

தனது அழகிய பேத்தியை எடுத்து உச்சி முகர்ந்து திருப்பிக் கொடுத்து வந்தார்கள். பேரக் குழந்தை பேத்தியாக இருந்ததில் சுந்தரத்துக்குக் கொஞ்சம் நிம்மதி இருந்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் வசந்தன் திரும்பி வந்து பெற்றோர்களுடன் கொஞ்ச நாள் இருந்து அப்புறம் கோலாலம்பூரில் வேலை தேடிப் போய்விட்டான்.

அவனுக்குப் பெண் பார்க்கப் பல இடங்களுக்கு அலைந்ததில் சோர்வுற்ற ஜானகி படுக்கையில் விழுந்தவள் ஒருநாள் படுக்கையை விட்டு எழவில்லை. பக்கத்திலேயே படுத்திருந்த சுந்தரத்துக்கும் தெரியாமல் அவள் உயிர் பிரிந்திருந்தது.

அந்த இழப்பை எப்படி ஈடு செய்வது என சுந்தரத்துக்குத் தெரியவில்லை. யாரிடம் என்ன சொல்லி எப்படி நடந்து கொள்வது என்றெல்லாம் அவருக்குப் புரியவில்லை. யாரிடமும் பேசாமல் கண்ணீரும் விடாமல் நடக்கின்ற எந்த சடங்கிலும் அக்கறை காட்டாமல் அவர் இருந்தார். ஆனால் அன்றிலிருந்து அவருடைய பேச்சும் நடமாட்டங்களும் குறைந்துவிட்டன.

நண்பர் ராமா தன் பிள்ளைகளுடன் போயிருக்க கோலாலம்பூர் போய்விட்டார். எப்பவாவது ஒரு முறை சுந்தரத்தைப் பார்க்க வந்து ஓரிரு நாள் அவர்கள் வீட்டில் தங்கிப் போவார்.

அன்னமும் சுந்தரமும் அந்த வீட்டில் இன்னமும் இருக்கிறார்கள். அவருடைய வாழ்க்கைப் பெண்டுலம் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அது மேலே போகும் போது உற்சாகப் படுவதையும் கீழே இறங்கும் போது கவலைப் படுவதையும் அவர் குறைத்துக் கொண்டார்.

சுந்தரத்துக்குப் புற்று நோய் அறிகுறிகள் ஏதும் பின்னர் வரவே இல்லை.

(முற்றும்)