உள்ளடக்கத்துக்குச் செல்

தியாக பூமி/பனி/அநாதைக் கடிதம்

விக்கிமூலம் இலிருந்து

அநாதைக் கடிதம்

இந்த இரண்டு வருஷ காலத்தில் சாவித்திரியின் விஷயமாக ஸ்ரீதரனுடைய மனோபாவம் இரண்டு மூன்று தடவை மாறுதல் அடைந்துவிட்டது.

ஆரம்பத்தில் கொஞ்ச நாள், தன்னைக் கேட்காமல் தங்கம்மாள் அவளை அழைத்துக் கொண்டு வந்த காரணத்தினால் அவனுக்கு வெறுப்பும் கோபமுமாயிருந்தது. போகப் போக, "சரிதான்; இந்தப் பிராரப்தத்தைக் கட்டிக் கொண்டுதான் மாரடித்தாக வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் நமக்கென்ன கஷ்டம் வந்தது? அவள் பாட்டுக்கு வீட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாயிருந்து விட்டுப் போகிறாள்" என்று ஒரு மாதிரி முடிவுக்கு வந்திருந்தான்.

சில நாளைக்கெல்லாம் சாவித்திரியிடம் அவனுக்கு கொஞ்சம் சிரத்தை உண்டாகத் தொடங்கிற்று. சிரத்தை உண்டானதும், அவளைத் தன் தாயார் படுத்துகிற கஷ்டத்தைப் பார்த்து இரக்கமும் ஏற்பட்டது. ஸ்ரீதரனுடைய இரக்கம் சாவித்திரிக்கு ஆபத்தாய் முடிந்தது.

ஒரு தடவை சாவித்திரி கஷ்டமான காரியம் செய்வதைப் பார்த்து, ஸ்ரீதரன் அம்மாவிடம், "ஏனம்மா இந்த வேலையெல்லாம் அவளைச் செய்யச் சொல்கிறாய்?" என்றான். தங்கம்மாளுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. "ஆமாண்டாப்பா, உன் ஆம்படையாள் காரியம் செய்யலாமோ? தேஞ்சுன்னா போயிடுவள்? நீ வேணா பூட்டி வைச்சுட்டுப்போ! இல்லாட்டா, பின்னோட அழைச்சுண்டு போயிடு" என்று கத்தினாள். அவன் வெளியே போன பிறகு, சாவித்திரியிடம், "ஏண்டி பொண்ணே! ஆம்படையானிடம் கோழி சொல்ல ஆரம்பிச்சுட்டயோல்லியோ? நீ காரியம் செய்யலாமோடி? மிராசுதார் பொண்ணாச்சே! போய் மெத்தையை விரிச்சுப் போட்டுண்டு படுத்துக்கோ! நான் தான் ஒத்தி இருக்கேனே இந்த வீட்டிலே காரியம் செய்யறதற்கு!..." என்று சரமாரியாய்ப் பொழியத் தொடங்கினாள்.

இம்மாதிரி சாவித்திரிக்கு ஸ்ரீதரன் பரிந்து பேசிய ஒவ்வொரு தடவையும் அவளுக்கு அதனால் கஷ்டமே நேர்ந்தது. ஒரு நாள் சாவித்திரி மாவு இடித்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீதரன் பார்த்துவிட்டான். "உன்னை யார் மாவு இடிக்கச் சொன்னது? வீட்டிலே வேலைக்காரியில்லையா?" என்று ஸ்ரீதரன் கோபமாய்க் கேட்டான். சாவித்திரி, அவனுடைய கோபத்தைத் தணிக்கும் நோக்கத்துடன், "அம்மாதான் இடிக்கச் சொன்னார்" என்று சொல்லி விட்டாள். ஸ்ரீதரன் அம்மாவிடம் போய், "இதென்ன அம்மா நான்ஸென்ஸ்? இவளை என்னத்துக்காக மாவு இடிக்கச் சொன்னாய்?" என்று கேட்டான். "அப்படிச் சொல்லு தகடிகை!" என்றாள் தங்கம்மாள். "நான் என்னடா அப்பா சொன்னேன்! கொஞ்ச நாள் போனா, ஆம்படையானும் பொண்டாட்டியும் ஒண்ணாப் போயிடுவயள்; நான் தான் நான்ஸென்ஸாப் போயிடுவேன்னு சொன்னேனோ இல்லையோ? என் வாக்குப் பலிச்சுதா?" என்று கூச்சலிட்டாள். பிறகு, சாவித்திரியைக் கூப்பிட்டு, "ஏண்டி பொண்ணே! நானாடி உன்னை மாவு இடிக்கச் சொன்னேன்; என் மூஞ்சியைப் பார்த்துச் சொல்லடி!" என்று கேட்டாள். சாவித்திரி பயந்துபோய்ப் பேசாமல் இருந்தாள். பார்த்தயோல்லியோடா கள்ள முழி முழிக்கிறதை!" என்றாள் தங்கம்மாள். ஸ்ரீதரனுக்கு ரொம்பக் கோபம் வந்து விட்டது. "ஏண்டி! பொய்யா சொன்னே?" என்று சாவித்திரியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்துவிட்டுப் போய்விட்டான்.

சாவித்திரி அழுதுகொண்டே மாவு இடிக்கத் தொடங்கினாள். தங்கம்மாள், "என் பிள்ளைக்கும் எனக்கும் ஆகாமலடிக்க வந்துட்டயாடி அம்மா, மகராஜி! என்ன சொக்குப் பொடி போட்டிருக்கயோ, என்ன மருந்து இட்டிருக்கயோ, நான் என்னத்தைக் கண்டேன்!" என்று புலம்பத் தொடங்கினாள்.

இந்த நாளில் சாவித்திரி சரியான வழியில் முயற்சி செய்திருந்தால் ஒருவேளை ஸ்ரீதரனுடைய அன்பைக் கூடப் பெற்றிருக்கலாம். ஆனால், அந்தச் சரியான வழி அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. மாமியாரைத் திருப்தி செய்வது தான் கணவனைத் திருப்தி செய்யும் வழி என்று அவள் நினைத்தாள். அவன் பகலில் எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவள் அடுப்பங்கரையில் ஏதாவது காரியம் செய்து கொண்டிருப்பாள். இரவில் அவன் வரும் போது அவள் ஒன்று, பகலெல்லாம் உழைத்த அலுப்பினால் படுத்துத் தூங்கிப் போய் விடுவாள்; அல்லது மாமியார் சொன்னது எதையாவது நினைத்து அழுது கொண்டிருப்பாள். "சனியன்! சனியன்! எப்ப பார்த்தாலும் ஒரே அழுகைதானா? மூதேவி! பீடை!" என்று ஸ்ரீதரன் எரிந்து விழுவான். இதனால் அவளுடைய அழுகை அதிகமாகும். ஸ்ரீதரனுடைய வெறுப்பும் வளரும். சாவித்திரி ரொம்பவும் அழுது விசிக்கும் சமயங்களில் ஸ்ரீதரன் அது சகிக்காமல், "ஏண்டி அம்மா! இந்தப் பீடையை உன்னை யார் அழைச்சுண்டு வரச் சொன்னா? நான் தான் வேண்டாம் வேண்டாம்னு முட்டிண்டேனே! ஊருக்கு அனுப்பிச்சுத் தொலைச்சுட்டு மறு காரியம் பாரு!" என்பான். அவன் தாயார், "ஆமாண்டாப்பா! என் பேரில் தப்புத்தான்! என் புத்தியை விளக்குமாத்தாலே அடிச்சுக்கணும். ஆனா, இப்ப என்ன முழுகிப் போச்சு? இவளுக்கு என்ன, கடுதாசி எழுதத் தெரியாதா? உனக்கு அந்தக் காலத்திலே எட்டு நாளைக்கு ஒரு கடுதாசி எழுதிண்டிருந்தாளே? அப்பாவுக்குக் கடுதாசி எழுதி அழைச்சுண்டு போகச் சொல்லட்டுமே?" என்று பதில் சொல்வாள்.

இத்தகைய நிலைமையில்தான், சாவித்திரி கர்ப்பமானாள். இதனால் அவளுடைய மனத்தில் ஒரு புதிய உற்சாகத்துடன் குதூகலம் உண்டாயிற்று. இனிமேல், தனக்கு இந்த வீட்டில் அதிக கௌரவம் ஏற்படும், புருஷனும் மாமியாரும் முன்னைவிடப் பிரியமாயிருப்பார்கள் என்ற ஆசையும் எழுந்தது. கூடிய சீக்கிரத்தில் இந்த ஆசை நிராசையாயிற்று.

ஸ்ரீதரனுக்குச் சில புதிய கஷ்டங்கள் அப்போது ஏற்பட்டிருந்தன. சில காலமாகவே ஸ்ரீதரனை அலட்சியம் செய்யத் தொடங்கியிருந்த ஸுஸி அப்போது பகிரங்கமாய் அவனை நிராகரிக்கத் தொடங்கினாள். அதுமட்டுமல்ல, ஐயாயிரம் ரூபாய் பணம் கொடுக்காவிட்டால் அவன்மேல் கேஸ் போடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தாள். பாங்கில் அவனுடைய வேலை திருப்திகரமாயில்லையென்று மேலதிகாரிகள் கருதி, அவனுடைய சம்பளத்தைக் குறைத்து விட்டார்கள். இந்தக் கோபத்தையெல்லாம் ஸ்ரீதரன் பேதை சாவித்திரியின் மேல் காட்டினான்.

தங்கம்மாளுக்கோ ஏற்கெனவே இருந்த குறைகள் எல்லாம் போதாதென்று, வளைகாப்பு, சீமந்தம் பண்ணவில்லை, சம்பு சாஸ்திரி கடுதாசி கூடப் போடாமல் இருக்கிறார் என்ற குறையும் சேர்ந்து கொண்டது. ஆகவே நாளுக்கு நாள் சாவித்திரியின் கஷ்டங்கள் அதிகமாகிக் கொண்டு வந்தன.

இவ்வளவு கஷ்டங்களுக்கும், வேதனைகளுக்குமிடையில் சாவித்திரி தன்னுடைய மாமனார் ஒருவரைத்தான் நம்பியிருந்தாள். அந்த வீட்டில் தன்னிடம் பச்சாதாபப்படுகிறவர் அவர் ஒருவர் தான் என்றும், ஏதாவது ஆபத்து என்றால் அவர் தான் தன்னைக் காப்பாற்றக்கூடியவர் என்றும் எண்ணியிருந்தாள். அவர் இந்த மாதிரித் தன்னை தனியாக ரயிலேற்றி அனுப்பிவிடச் சொன்னார் என்றதும், அவளுக்கு 'இனிமேல் என்ன இருக்கிறது?' என்று தோன்றிவிட்டது. குழந்தைப் பருவத்திலிருந்து அவளுக்குப் பகவானிடம் இருந்த அசையாத நம்பிக்கையும் தளர்ந்துவிட்டது. "ஸ்வாமியாவது? பூதமாவது? எல்லாம் பொய் போல் இருக்கிறதே!" என்று எண்ணலானாள்.

ஒரு மனம் இப்படி நினைத்தது; ஆனால் அதே சமயத்தில் சாவித்திரியின் இன்னொரு மனம், 'நிஜமாகவே நாம் நெடுங்கரைக்குக் கிளம்பப் போகிறோமா?' என்று குதூகலத்தினால் துள்ளிக் குதித்தது!

"அப்பா! எனக்கும் நெடுங்கரைக்கு வந்து உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது" என்று சாவித்திரி எழுதிய போது அவளுடைய இருதயத்தில் உண்மையாகவே பொங்கிக் கொண்டிருந்த ஆசையையே வெளியிட்டிருந்தாள்.

கர்ப்ப ஸ்திரீகளுக்கு 'மசக்கை' வரும் என்றும், சில சில பொருள்களின்மேல் பிரத்தியேகமான ஆசை உண்டாகுமென்றும் சொல்கிறார்கள் அல்லவா? சாவித்திரியின் மசக்கை, அவளுக்கு நெடுங்கரைக்குப் போக வேண்டுமென்று அளவிலாத ஆசை கொள்ளச் செய்தது.

நெடுங்கரையில் தன்னுடைய வாழ்க்கையை நினைத்தாலே அவளுக்கு இப்போது சந்தோஷமாயிருந்தது. அந்தக் காலத்தில் அவள் அங்கே பட்ட கஷ்டங்களையும், அநுபவித்த துயரங்களையும் அடியோடு மறந்துவிட்டாள். நெடுங்கரையைப் பற்றிய சந்தோஷமான ஞாபகங்கள் மட்டுமே அவள் மனத்தில் இப்போது இருந்தன.

நெடுங்கரை வீதிதான் எவ்வளவு அழகாயிருக்கும்? வாசலில் தென்னை மரங்களின் நிழல் எவ்வளவு குளிர்ச்சியாயிருக்கும்? அந்த வீதியில் வில் வண்டி பூட்டி வரும் போது, மாடுகளின் சதங்கை ஜில் ஜில் என்று சப்திப்பது எவ்வளவு இனிமையாயிருக்கும்?

ஆகா! நெடுங்கரை வீட்டை எப்போது பார்ப்போம்? முன்போல் மறுபடியும் எப்போதாவது அப்பாவின் பஜனைக்குப் புஷ்பம் எடுத்துக்கொண்டு வருவோமோ? மாலை தொடுத்துப் படங்களுக்குப் போடுவோமோ? அப்பா! அப்பா! நீங்கள் பஜனை பண்ணி நான் மறுபடியும் கேட்பேனே? சித்தி! உன் கையால் சாதம் பிசைந்து போட்டு நான் சாப்பிடுவேனா?

ஐயோ! சித்தி! உன்னை என்னவெல்லாம் பாடுபடுத்தி வைத்தேன்? உன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட பாவந்தான் இப்படி என்னைப்படுத்தி வைக்கிறதோ?... சாவித்திரி இவ்வாறெல்லாம் எண்ணமிடுவாள். தங்கம்மாளுடன் ஒப்பிட்டபோது, மங்களம் தன்னிடம் அபாரமான பிரியம் வைத்திருந்ததாகச் சாவித்திரிக்குத் தோன்றிற்று.

ஆகவே, அவள் அப்பாவுக்குத் தன்னை வந்து அழைத்துப் போகும்படி கடிதம் எழுதியபோது, அடங்காத ஆர்வத்துடன் தான் எழுதினாள். தன்னுடைய கடிதங்களுக்குப் பதில் வராததனால் அவள் அடைந்த ஏமாற்றத்துக்கு அளவில்லை. ஒரு வேளை கடுதாசி போய்ச் சேர்ந்திராதோ, அப்பா ஒரு வேளை ஊரில் இல்லையோ, அல்லது அவர் சரியாய் விலாசம் எழுதாதபடியால் அவருடைய பதில்தான் இங்கே வந்து சேரவில்லையோ என்று எண்ணாததெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு சமயம் சப்பட்டை கட்டிக்கொண்டு நெடுங்கரைக்குப் பறந்து போய்விடலாமா என்று அவளுக்குத் தோன்றும்.

இத்தகைய மனோ நிலையில் அவளை ரயிலேற்றி ஊருக்கு அனுப்பி விடுவதாகச் சொன்னபோது, 'என்ன இரக்கமற்றவர்கள் இவர்கள்!' என்ற வெறுப்பும், தனியாகப் போக வேண்டுமே என்ற துணுக்கமும் அவள் அடைந்தாலும், மனத்தின் ஒரு பக்கத்தில் சந்தோஷமும் இருந்தது. ஊருக்குக் கிளம்பும் நேரம் ஆக ஆக அவள் உற்சாகம் அதிகரித்தது.

சாவித்திரி, மாமனார் விஷயத்திலும் தான் ஏமாற்றமடைந்ததாக எண்ணியது மட்டும் சரியல்ல. உண்மையில், ராஜாராமய்யர் சாவித்திரியின் மேல் இரக்கங்கொண்டே, "அவள் ஊருக்குப் போவதாயிருந்தால் போகட்டும்" என்று சொன்னார். தங்கம்மாளின்மேல் வந்த கோபத்தைத் தம் கையில் இருந்த பத்திரிகையின் மேல் காட்டி விட்டு அவர் வெளியே போனதுகூடச் சாவித்திரியின்மேல் இருந்த கருணையினால்தான். கல்கத்தாவிலிருந்து வேறொரு குடும்பத்தார் மறுநாள் சென்னைக்குப் புறப்படுவதாக அவர் கேள்விப்பட்டிருந்தார். அதைப்பற்றி விசாரித்துத் தகவல் தெரிந்து கொள்வதற்குத்தான் அவர் வெளியேறினார். விசாரித்ததில் அவர் கேள்விப்பட்டது உண்மைதானென்று தெரிந்தது. மறுநாள் புறப்படுவதற்கு இருந்தவர்கள் திருநெல்வேலி ஜில்லாக்காரர்கள், ரொம்பவும் நல்ல மனுஷர்கள். "ஆகா! சாவித்திரியை பேஷாய் அழைத்துக் கொண்டு போகிறோம்" என்று சொன்னார்கள்.

இந்தச் செய்தியைக் கேட்டுக் கொண்டு ராஜாராமய்யர் திரும்பி வீட்டுக்கு வந்ததும் நெடுங்கரைச் சம்பு சாஸ்திரிக்கு ஒரு கடிதம் எழுதினார். தம்முடைய சம்பந்திக்கு அவர் இதுவரையில் தம் கையினால் கடிதம் எழுதினது கிடையாது. அவர் சாஸ்திரிக்கு எழுதிய முதல் கடிதம் இதுதான். பாவம், அவர் எழுதிய கடைசிக் கடிதமும் இதுவாகவே ஆயிற்று!

சில முக்கியமான காரணங்களினால் சாவித்திரியைக் கல்கத்தாவில் பிரசவத்துக்கு வைத்துக்கொள்ள முடியவில்லையென்றும், இங்கிருந்து திருநெல்வேலிக்கு வரும் தகுந்த மனுஷ்யாளுடன் கூட்டி அனுப்பியிருப்பதாகவும், சென்னைப் பட்டணத்துக்கே சாஸ்திரி வந்திருந்து குழந்தையை அழைத்துப் போகவேண்டுமென்றும், சென்னைப் பட்டணத்துக்கு ஒருவேளை வர முடியாவிட்டால், குறிப்பிட்ட வண்டிக்குப் புதுச்சத்திரம் ஸ்டேஷனுக்கு வந்திருந்து அழைத்துப் போகவேண்டுமென்றும் கடிதத்தில் எழுதினார். பிறகு, தாமே அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு போய்த் தம் கையாலேயே தபால் பெட்டியில் போட்டார். தபால் பெட்டியின் விளிம்பில் எழுதியிருந்த மணிக்கணக்கைப் பார்த்துவிட்டு, "சரி, இன்று தபாலில் கட்டாயம் போய்விடும்" என்று நிச்சயம் செய்துகொண்டு திரும்பினார்.

ராஜாராமய்யர் நம்பியபடியே, கடிதம் அன்று தபாலிலேயே சேர்ந்து வழியில் எங்கும் விழுந்து விடாமல் பிரயாணம் செய்து, போட்ட மூன்றாம் நாள் மேலமங்கலம் தபாலாபீஸுக்குப் போய்ச் சேர்ந்தது. நெடுங்கரைக்குக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்த தபால்காரன், சம்பு சாஸ்திரியின் வீடு பூட்டியிருப்பதைப் பார்த்தான். ஒரு நிமிஷம் யோசனை செய்தான். பிறகு "சரிதான், எங்கேயாவது போயிருப்பார்கள்; வந்து எடுத்துக் கொள்வார்கள்" என்று முடிவு செய்து, காமரா அறையில் ஜன்னல் வழியாகக் கடிதத்தை உள்ளே எறிந்து விட்டுப் போய்ச் சேர்ந்தான்.

அவன் எறிந்த இடத்திலேயே ராஜாராமய்யரின் கடிதம் அநாதையாய்க் கிடந்தது!