தியாக பூமி/பனி/மீனாக்ஷி ஆஸ்பத்திரி
மீனாக்ஷி ஆஸ்பத்திரி
சாவித்திரி நெடுங்கரைக்கு வந்து வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்பி இருபது நாளைக்கு மேலாயிற்று. இப்போது அவள் சென்னையில் மீனாக்ஷி ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த சிறு தொட்டிலில் கையால் இலேசாக ஆட்டக்கூடிய தொட்டிலில் ஒரு பெண் குழந்தை கிடந்தது. கனவில் அல்ல; உண்மையாகவேதான். மூக்கும் முழியுமாய்க் குழந்தை நன்றாயிருந்தது. பிறந்து பத்து நாள்தான் ஆகியிருந்தாலும் ஒரு மாதத்துக் குழந்தை போல் தோன்றியது.
குழந்தை அப்போது தன்னுடைய வலது கையின் விரல்களை ருசி பார்த்து அநுபவித்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உண்டான 'த்ஸு' 'த்ஸு' என்ற சப்தம் சாவித்திரியின் காதில் விழுந்தபோது அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது. உடனே, திரும்பிக் குழந்தையைப் பார்த்தாள். மலர்ந்த முகம் சுருங்கிற்று. இந்தக் குழந்தையின் காரணமாக என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அநுபவிக்க நேர்ந்தது? அவையெல்லாம் ஒரு மகா பயங்கரமான சொப்பனத்தைப் போல் சாவித்திரியின் நினைவில் வந்தன. அந்தச் சம்பவங்களை மறந்து விடுவதற்கு அவள் எவ்வளவோ முயன்று பார்த்தாள். அவற்றை நினைத்துப் பார்ப்பதில்லையென்று பல்லைக் கடித்துக்கொண்டு மனத்தை உறுதி செய்து கொண்டாள். அது ஒன்றும் பயன்படவில்லை. திரும்பத் திரும்ப அந்த நினைவுகள் வந்து கொண்டுதான் இருந்தன.
நெடுங்கரையிலிருந்து சாவித்திரி உடனே திரும்பிச் சென்னைக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு ரயில் ஏறியபோது அவளுடைய மனத்தில் கவலையும் பயமும் இல்லாமலில்லை. 'அந்தப் பெரிய பட்டணத்தில் போய் அப்பாவை எப்படித் தேடுவோம்? அதுவும் இந்தப் பலஹீனமான ஸ்திதியில்?' என்று அவளுடைய நெஞ்சு பதைபதைத்துக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் இவ்வளவு பயங்கரமான கஷ்டங்களை எல்லாம் அநுபவிக்க நேரிடுமென்று லவலேசமும் அவள் எதிர்பார்க்கவில்லை.
"பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரி வீடு தெரியுமா?" என்று எத்தனை இடங்களில் எத்தனை பேரைக் கேட்டிருப்பாள்? அவர்களில் சிலர், "பாட்டு வாத்தியாரையும் தெரியாது; சம்பு சாஸ்திரியையும் தெரியாது; போ! போ!" என்று கடுமையாகப் பதில் சொன்னார்கள். இம்மாதிரி பதில்களைக் கேட்கும்போதெல்லாம், 'ஜனங்கள் ஏன் இவ்வளவு இரக்கமற்றவர்களாயிருக்கிறார்கள்?' என்று சாவித்திரி ஆச்சரியப்படுவாள். பட்டணங்களிலே வசிக்கும் ஜனங்களின் இடைவிடாத வேலைத் தொந்தரவும், அதனால் சின்னஞ் சிறு விஷயங் கூட அவர்களுக்கு எரிச்சல் உண்டு பண்ணிவிடுவதும் சாவித்திரிக்கு எவ்வாறு தெரியும்? மேலும், பூரண கர்ப்பவதியான ஓர் இளம் பெண் இந்த மாதிரி தன்னந்தனியாக அலைவதைக் கண்டவுடனேயே, ஜனங்களுக்கு அவள் பேரில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் ஏற்பட்டு அருவருப்பு உண்டாவது சகஜம் என்பதைத்தான் சாவித்திரி எப்படி அறிவாள்?
ஆனால், எல்லாருமே இப்படி நடந்து கொள்ளவில்லை, சிலர் அவளிடம் இரக்கமும் காட்டினார்கள். "நீ யாரம்மா? எந்த ஊர்? இந்த நிலைமையிலே ஏன் இப்படி அலையறே?" என்றெல்லாம் விசாரித்தார்கள். ஜனங்களுடைய கோபத்தையும் கடுமையையுமாவது சகித்துக்கொள்ளலாம் போல் இருந்தது; ஆனால், இந்த இரக்கத்தைச் சாவித்திரியினால் சகிக்கமுடியவில்லை. அவர்களுடைய விசாரணைக்குப் பதில் சொல்லவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.
'அப்பா இருக்கிற இடந்தெரிந்தால் சொல்லட்டும்; இல்லாமற்போனால் பேசாமலிருக்கட்டும். இவர்களை இதையெல்லாம் யார் விசாரிக்கச் சொன்னது?' என்று எண்ணினாள்.
கடைசியில், அவளை அந்த மாதிரி விசாரித்த இடம் ஒரு போலீஸ் ஸ்டேஷன், இங்கே அவள் எப்படி வர நேர்ந்தது என்பதும், ஸ்டேஷனில் நடந்தவையும் அவளுக்கு ஏதோ பூர்வ ஜன்மத்து ஞாபகம் போல் தெளிவின்றித் தோன்றின.
பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரியைத் தேடித் தேடி அலைந்து, கால் கை சோர்ந்து, கண்ணும் இருளடைந்து வந்த சமயத்தில், சாவித்திரி மேலே நடக்க முடியாமல் ஒரு வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்தாள். அந்த வீட்டிற்குள்ளே குழந்தைகளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் சத்தம் கேட்டது. ஒரு க்ஷணநேரம், 'ஒரு வேளை அப்பா தானோ?' என்று நினைத்தாள். பாட்டு வாத்தியாரின் குரல் அப்பா இல்லையென்பதைத் தெரிவித்தது. ஆனாலும், சாவித்திரி எழுந்து உள்ளே சென்றாள். அங்கே இரண்டு குழந்தைகளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து, "ஸ்வாமி! உங்களுக்குப் பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரிகள் விலாசம் தெரியுமா?" என்று கேட்டாள்.
"சம்பு சாஸ்திரிகளா?" என்று ஒரு கணம் யோசித்தார் பாட்டு வாத்தியார்.
சாவித்திரிக்கு கொஞ்சம் உயிர் வந்தது; "நெடுங்கரை சம்பு சாஸ்திரிகள்" என்றாள்.
"நெடுங்கரை சம்பு சாஸ்திரிகளா? தெரியாதே அம்மா! தபால்காரனைக் கேட்டுப் பாருங்கள்; ஒருவேளை தெரிஞ்சிருக்கும்" என்று சொல்லி விட்டு, பாட்டு வாத்தியார், மறுபடியும், "ஸா நீ பா...." என்று ஆரம்பித்தார். அவருக்கு, பாவம், பாட்டுச் சொல்லிக் கொடுக்க இன்னும் மூன்று வீடுகள் பாக்கியிருந்தன. வழிப்போக்கர்களோடு பேசிக் கொண்டிருந்தால் காரியம் எப்படி ஆகும்?
சாவித்திரி அங்கிருந்து தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருக்கையில் ஒரு வீட்டிலிருந்து தபால்காரன் ஒருவன் வெளியில் வந்து கொண்டிருந்தான். "போஸ்ட்மான்! பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரி வீடு எங்கே இருக்கு, தெரியுமா?" என்று கேட்டாள். தபால்காரன் கொஞ்சம் வயதானவன். பிள்ளை குட்டிக்காரன். சாவித்திரியைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாயிருந்தது. ஆனால், ஒரு நிமிஷம் நிற்பதற்குக் கூட அவனுக்கு அவகாசமில்லை. "அப்படி ஒத்தரும் இந்த டிவிஷன்லே இருக்கிறதாத் தெரியலே, அம்மா! போலீஸ் ஸ்டேஷனிலே போய்ச் சொல்லு, கண்டுபிடிச்சுக் கொடுப்பாங்க" என்று கூறிவிட்டு, மேலே நடந்தான்.
சாவித்திரி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றாள். போகும்போதே அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய நிலைமையையும் தோற்றத்தையும் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் கூடச் சிறிது மருண்டு போனார். அவளை உட்காரச் சொல்லி, "என்ன அம்மா விஷயம்?" என்று கேட்டார். சாவித்திரி "எங்க அப்பா சம்பு சாஸ்திரியைத் தேடிண்டு வந்தேன். ஊரெல்லாம் அலைஞ்சு பார்த்தாச்சு. அகப்படலை. போலீஸிலே சொன்னா கண்டு பிடிச்சுக் கொடுப்பான்னு கேள்விப்பட்டேன்..." என்றாள். இப்படிச் சொன்ன போதே அவளுக்கு மூச்சு வாங்கிற்று; கண் சுழன்றது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அவசர அவசரமாய், "ஆகட்டும், அம்மா! கண்டுபிடிக்கப் பார்க்கிறேன். அது வரையிலே நீ யாராவது தெரிஞ்சவா வீட்டிலே இருந்துக்கோ!..." என்றார்.
"தெரிஞ்சவாளா? எனக்குத் தெரிஞ்சவாளா?" என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள் சாவித்திரி.
இன்ஸ்பெக்டருடைய பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவர் பரபரப்புடன், "இந்த ஸ்திதியிலே நீ இப்படி அலையக் கூடாது அம்மா! உன் ஹஸ்பெண்டு அட்ரெஸ் என்ன?" என்று கேட்டார்.
அப்போது, சாவித்திரிக்கு, திடீரென்று என்ன வந்துவிட்டது? அது அவளுக்கே தெரியவில்லை. ஜன்னி கின்னி பிறந்து விட்டதோ? அல்லது பைத்தியமே பிடித்துவிட்டதோ? சொப்பனத்தில் எழுந்திருப்பது போல் எழுந்து நின்றாள். தன்னையறியாமல் சிரிப்பு வந்தது. அவளுடைய பற்கள் நறநறவென்று கடிபட்டன.
"இன்ஸ்பெக்டர்!..." என்றாள் அவளுடைய குரலின் தொனி பயங்கரத்தையளித்தது. "ஹஸ்பெண்டு, ஹஸ்பெண்டு!" என்று கூச்சலிட்டாள். "ஹஸ்பெண்டினால்தான் எனக்கு இந்தக் கதி!" என்று இன்னும் உரத்த குரலில் கூவினாள். நாலு அடி எடுத்து வைத்தாள். ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர், மேஜை, ஸ்டேஷன், தான் - எல்லாரும் ஒரே சுழலாகச் சுழலுவது போல் தோன்றியது. அடுத்த நிமிஷம் சாவித்திரி ஸ்மரணை இழந்து கட்டையைப் போல் தரையில் விழுந்தாள்.
சாவித்திரி பயங்கரமாய்க் கூச்சலிட ஆரம்பித்ததிலிருந்து, இன்ஸ்பெக்டர் அவளைப் பார்த்தது பார்த்தபடி ஸ்தம்பமாய் உட்கார்ந்திருந்தார். தான் ஏதாவது சொன்னாலும் செய்தாலும், அவளுடைய ஹிஸ்டீரியா அதிகமாகி விடலாமென்றும், எப்படியாவது அவள் வெளியே போனால் போதுமென்றும் அவர் எண்ணினார். அவள் கீழே விழுந்த அப்புறந்தான் அவருக்குச் சுறுசுறுப்பு வந்தது. டெலிபோனை மேலுங் கீழுமாய்த் திருப்பி மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்கு அவசரமாய் டெலிபோன் பண்ணினார்.
சாவித்திரிக்கு மறுபடி பிரக்ஞை வந்தபோது, தான் முன்பின் பார்த்திராத இடத்தில் கட்டிலில் கிடப்பது தெரிந்தது. அவளுடைய தலைமாட்டில் நின்று யாரோ இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளைப் பற்றித்தான் பேசினார்கள்.
"கடுமையான ஹிஸ்டீரியா கேஸ்; பிழைத்தது புனர் ஜன்மம்" என்று ஒரு பெண் குரல் சொல்லிற்று.
"யார், என்னவென்று ஒரு தகவலும் இல்லையா?"
"ஒன்றும் தெரியலை. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து யாரோ சாஸ்திரின்னு பேர் சொல்லி விலாசம் விசாரிச்சாளாம். ஹஸ்பெண்டு யாருன்னு கேட்டதும் கூச்சல் போட்டுட்டு விழுந்துட்டாளாம். உடனே ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணனும் என்று அந்த இன்ஸ்பெக்டருக்குத் தோணித்தே. அதுவே பெரிய காரியம்."
"இந்த நிலைமையிலே - பிரசவம் வேறே ஆகணும்; கஷ்டமான கேஸா இருக்கும் போலிருக்கு; ரொம்ப ஜாக்கிரதையாய்க் கவனிக்கணும்."
இந்தச் சம்பாஷணையிலிருந்து சாவித்திரிக்குத் தான் ஆஸ்பத்திரியில் இருக்கிறோம் என்பதும், எவ்வாறு அங்கு வந்தோம் என்பதும் ஒருவாறு தெரிந்தன.
இன்னும் அறிவு நன்றாகத் தெரிந்தபோது, 'ஆகா! அநாதையாகிய எனக்கு அடைக்கலம் அளிக்கும் இடமும் ஒன்று இருக்கிறதா?' என்று சாவித்திரி எண்ணி எண்ணி உருகினாள்.
அவளுடைய பிறந்த வீட்டிலாவது, புகுந்த வீட்டிலாவது அவளை அவ்வளவு ஆதரவுடன் யாரும் கவனித்தது கிடையாது. 'கடைசியில் பகவான் மனம் இரங்கி நம்மை இந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்தாரே?' என்று நினைத்து நினைத்துச் சந்தோஷப்பட்டாள்.
ஆனால் அவளுடைய கஷ்டம் அத்துடன் தீர்ந்து போய் விடவில்லை. நாலு ஐந்து நாளைக்கெல்லாம் அவள் அது வரையில் அநுபவித்து அறிந்திராத வேதனையும் வலியும் உண்டாயின. நிமிஷத்துக்கு நிமிஷம் வேதனை அதிகமாகி வந்தது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வலி பொறுக்க முடியாமல் போயிற்று. இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம், 'ஐயோ! என்னத்துக்காக இந்தப் பெண் ஜன்மம் எடுத்தோம்?' என்று நோகவும், தன்னைப் படைத்த கடவுளையே சபிக்கவும் ஆரம்பித்தாள். இத்தகைய நிலைமையில், டாக்டர்களும், நர்ஸுகளும் கும்பலாக வந்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். என்னத்தையோ மூக்கினருகில் கொண்டு வந்து பிடித்தார்கள். மூச்சுத் திணறத் தொடங்கியது. 'நாம் படுகிற துன்பத்தைக் கண்டு சகிக்காமல் நம்மைக் கொன்று விடுகிறார்கள் போல் இருக்கிறது. ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. பராசக்தி! என்னை உன் பாதத்தில் சேர்த்துக் கொள்!' என்று வேண்டினாள்.
ஆனால், உண்மையில் அது சாவில்லை என்பது சாவித்திரிக்கு மறுபடியும் நினைவு வந்தபோது தெரியவந்தது. தான் சாகாததோடு மட்டுமில்லை, தன்னை இவ்வளவு கொடுமையான கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளாக்கிய ஜீவன், பக்கத்தில் தொட்டிலில் கிடந்து அழுது கொண்டிருந்தது. 'அழு, அம்மா! அழு! இந்த உலகத்தில் அழுவதற்குத்தான் நான் பிறந்தேன்; அழுவதற்குத்தான் நீயும் பிறந்திருக்கிறாய்! அழு!'
குழந்தையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டுமென்றும் சாவித்திரிக்கு அளவிலாத தாபம் பொங்கி எழுந்தது. அடிக்கடி அதனுடைய முகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. ஆனால் அந்தத் தாபத்தையும் ஆசையையும் அவள் சிரமப்பட்டு அடக்கிக் கொள்ள முயன்றாள். 'நாம் அடைந்த இவ்வளவு கஷ்டங்களுக்கும் காரணம் இந்தக் குழந்தைதானல்லவா?' என்று நினைத்து அதனிடம் கோபங் கொண்டாள். குழந்தையின் முகச்சாயல் அவளுடைய கோபம் வளர்வதற்கு ஒத்தாசை செய்தது! ஏனெனில், அது அவளுக்கு ஸ்ரீதரனை ஞாபகம் படுத்திற்று.
இதற்கு முன்பெல்லாம் ஸ்ரீதரனிடம் அவளுக்குக் கோபம் வந்தாலும், வெறுப்பு உண்டானது கிடையாது. கல்யாணத்தின்போது அவனிடம் அவள் கொண்ட அளவிலாத அன்பைக் கல்கத்தாவில் அவள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாற்றிவிடவில்லை. நெடுங்கரைக்கு அவள் தனியாக ரயில் ஏறி வந்தபோது கூட அவளுடைய உள்ளத்தில் அவனிடம் அன்பு வைத்திருந்தாள். என்றைக்கோ ஒரு நாள் அவனுடைய மனம் மாறும், தன்னுடைய அன்பும் சாபல்யமாகும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால் இப்போது அவளுடைய மனோநிலை அடியோடு மாறிவிட்டது. தன்னை இவ்வளவு சகிக்க முடியாத கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளக்கிவிட்டு அந்தப் பாவி கவலையின்றியிருக்கிறான்! 'அவனும் மனுஷ ஜன்மமா! அப்படிப்பட்ட மனுஷனிடமா நாம் அவ்வளவு அன்பும் பக்தியும் வைத்திருந்தோம்? சீச்சீ! என்ன பேதைமை!
'பதியாம்! பக்தியாம்! புருஷனைத் தெய்வமாகப் பாவிக்க வேண்டுமாம்!' - கல்கத்தாவுக்குப் புறப்படும் போது தகப்பனார் செய்த உபதேசம் சாவித்திரிக்கு ஞாபகம் வந்தது. 'நல்ல தகப்பனார்! நல்ல உபதேசம்! இங்கே வந்து பாருங்கள், அப்பா! நீங்கள் தேடிக் கொடுத்த தெய்வம் என்னை என்ன செய்கிறது வந்து பாருங்கள்!
'ஆனால், நீங்கள் ஏன் வரப்போகிறீர்கள்? நீங்கள் ஏன் பார்க்கப் போகிறீர்கள்? இந்த உபத்திரவம் எல்லாம் வேண்டாம் என்று தான், கடுதாசும் போடாமல், கதவையும் பூட்டிக்கொண்டு போய்விட்டீர்களே! நான் எக்கேடு கெட்டால் உங்களுக்கென்ன? இந்தக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு நான் தெருத் தெருவாய்ப் பிச்சை வாங்கினால் தான் நீங்கள் எங்கே பார்க்கப் போகிறீர்கள்!...'
இவ்வாறு சாவித்திரி தன்னுடைய மனம் யார் யாரிடம் அன்பு கொண்டிருந்ததோ அவர்கள் எல்லாரையும் வெறுத்து, துவேஷம் கொள்ளும் நிலைமையை அடைந்திருந்தாள்.
அவளுடைய வெறுப்பும் துவேஷமும் நூறு மடங்கு அதிகமாகும்படியான சந்தர்ப்பம் சீக்கிரத்திலேயே நேரிட்டது.