பக்கம்:கதாநாயகி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*103



மண்டையிலே அடிச்சாத்தான் நல்ல புத்தி வரும்!...தமிழிலே நாடக இலக்கியம் தொன்று தொட்டு வளர்ந்து, வாழ்ந்து வருகிற உண்மையைப்பத்தி நீங்க எடுத்துச் சொன்னதாகவும், இந்நாளிலே நடத்தப்படும் அமெச்சூர் நாடகங்கள் எத்தனையோ நாடக வளர்ச்சிக்கு உதவுகிற நடப்பை நீங்க சுட்டிச் சொன்னதாகவும் பூமிநாதன் நேற்றுக் காலம்பற எங்கிட்ட ஞாபகப்படுத்தினார்."

"அப்படியா? பேஷ், பேஷ்!"

பூமிநாதனின் பெயரைக் கேட்டதும், அவன் தன்னைச் சந்திக்க இரவு வருவதாகத் தெரிவித்து வராமல் போன விவரத்தை அம்பலத்தரசன் எண்ண வேண்டியவன் ஆனான்.

"கூடிய சீக்கிரம் உங்க இஷ்டப்படியே ஒரு விமர்சனக்கட்டுரை எழுதிடுறேன். எனக்கும் அந்தத் தூண்டுதல் ரொம்ப நாளாய் இருந்துகிட்டுத்தான் வருது."

"பேஷ்! செய்யுங்க..."

அன்றையக் கணக்கைக் குறித்துக் கொள்ளச் சொல்லி விட்டு நகர்ந்தான் அம்பலத்தரசன்.

தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

ஆகாயத்தில் விமானம் பறந்தது.

"அந்தாப் பாருடா மணி, அந்த விளையாட்டு ஏரோப்ளேனைத் தாண்டா நாளைக்கு எங்கப்பா எனக்கு வாங்கித் தந்தார்டா" என்றது ஒரு குழந்தை.

"போடா, அது எங்க வீட்டு ஏரோப்ளேனுடா. எங்கம்மா சொல்லிச்சுடா, பாலு!" என்றது இன்னொரு குழந்தை.

குழந்தைகளின் இலக்கணம் கடந்த அந்தச் சின்னஞ்சிறு உலகத்தினின்றும் தப்பிப் பிழைத்த விமானத்தை அண்ணாந்து பார்த்து நகைத்தவனாக, அவன் நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/113&oldid=1319069" இலிருந்து மீள்விக்கப்பட்டது