தியாக பூமி/இளவேனில்/உமாராணி விஜயம்
உமாராணி விஜயம்
சென்னைப் பட்டணம் சில நாளாக அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பம்பாயிலிருந்து ஸ்ரீமதி உமாராணி என்னும் சீமாட்டி சென்னைக்கு விஜயம் செய்யப் போகிறாள் என்னும் செய்தி தான் அதற்குக் காரணம். டிராம் வண்டிகளிலும், மோட்டார் பஸ்களிலும், கிளப்புகளிலும், காப்பி ஹோட்டல்களிலும், பீச் மணற் கரையிலும், பார்க் புல் தரையிலும் இன்னும் ஜனங்கள் எங்கெங்கே கூடுகிறார்களோ, அங்கெல்லாம், உமாராணியின் வரவைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.
"ஏன், ஸார்! என்னிக்கு வர்றாளாம்?"
"அடுத்த புதன்கிழமை வர்றதாகப் பத்திரிகையிலே போட்டிருக்கு."
"எந்த ரயில்லே-பம்பாய் எக்ஸ்பிரஸிலேதானே?"
"நான் சொல்றேன், கேளுங்கோ! அவள் சென்ட்ரல் ஸ்டேஷனிலே வந்து இறங்கமாட்டா. சென்ட்ரல்லே இறங்கினா, கூட்டம் தாங்காது. பேஸின் பிரிட்ஜிலேயே இறங்கிக் காரிலே போயிடுவா."
"கார்ப்பரேஷனிலே உபசாராம் நடக்கிறதோ இல்லையோ?"
"ஆகா! மீட்டிங் நடந்து தீர்மானங்கூடப் பாஸாயிடுத்தே!"
இந்தச் சமயத்தில், அந்த டிராமிலோ பஸ்ஸிலோ உலக விஷயங்களை அதிகமாய்க் காதிலே போட்டுக் கொள்ளாத மனுஷர் யாராவது இருந்தால், "ஏன், ஸார்! யாரோ வர்றா, வர்றா என்கிறயளே? அது யாரு?" என்று கேட்டு வைப்பார்.
"யாரு, உமாராணிதான்" என்று பதில் வரும்.
"உமாராணியா! அவள் யார், ஐயா, அப்படி ஒருத்தி கிளம்பியிருக்காள்? ஸினிமா ஸ்டாரோ?"
உடனே கலகலவென்று சிரிப்பு.
"என்ன, சிரிக்கறயளே? அவள் யாருதான் பின்னே? காங்கிரஸிலே சேர்ந்தவளோ?"
"என்ன, ஐயா, நிஜமா உமாராணி யாருன்னு தெரியாமயா கேட்கிறீர்?"
"தெரியாமல் தான் கேட்கிறேன். பின்னே, தெரிஞ்சால் கேட்பாளோ?"
"உமாராணிங்கறவள் பம்பாயிலே ஒரு பெரிய பணக்காரி. அவள் நம் ஊர் மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்கு அஞ்சு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறாள்."
"என்ன? என்ன?"
"அவரைக் கொஞ்சம் பிடிச்சுக்குங்கோ, ஐயா! மூர்ச்சை போட்டு விழுந்துடப் போறார்."
"என்ன பரிகாசம் பண்றயளா? அஞ்சு லட்சம் ரூபாயாவது, கொடுக்கவாவது?"
"கொடுக்கவாவதுன்னா? - கொடுத்திருக்காளே!"
"ஐம்பதினாயிரமாயிருக்கும்; பத்திரிகைக்காரன் ஒரு பூஜ்யத்தைச் சேர்த்துப் போட்டிருப்பன்."
"அஞ்சு லட்சம்னு இலக்கத்திலும் போட்டு, எழுத்திலும் எழுதியிருக்கு. அப்புறம்?"
"நம்பறதுக்கு முடியாமேன்னா இருக்கு? அஞ்சு லட்சம்! அடேயப்பா!"
"அஞ்சு லட்சமான்னு வாயைப் பிளந்துடறீரே, ஐயா! நமக்குன்னா அஞ்சு லட்சம் பெரிது! பம்பாயிலே அஞ்சு லட்சம் என்கிறது அஞ்சு ரூபாய் மாதிரி."
"ஆமாமாம்; நம் ஊரிலே பெரிய ரூபாய்ன்னா ஓர் ஆயிரம்; அங்கே, ஒரு லட்சம்." "பம்பாய்ன்னா, குபேர பட்டணந்தான்; சந்தேகம் என்ன? அங்கே இருக்கிற ஒரு ஸேட் மனஸு வச்சான்னா இந்த மெட்ராஸ் பூராவையும் விலைக்கு வாங்கிடுவான்?"
"நம் ஊர்க்காரன்கிட்டப் பணந்தான் இருக்குன்னு வச்சுக்குங்கோ. இந்த மாதிரி ஒரு நல்ல காரியத்துக்கு அஞ்சு லட்சம் கொடுக்க மனஸு வருமா? எவனாவது கொடுத்திருக்கானான்னு கேக்கறேன்!"
"அல்லது எவளாவது தான் கொடுத்திருக்காளா?"
இந்த மாதிரி எங்கே பார்த்தாலும் பலவிதமான பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்தன.
கடைசியாக, உமாராணியின் விஜய தினம் வந்தது. அவளை வரவேற்பதற்கு ஸ்டேஷனில் ஏராளமான ஜனக்கூட்டம் சேர்ந்திருந்தது. சென்னைப் பிரமுகர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் வந்திருந்தார்கள். வண்டி வந்து பிளாட்பாரத்தில் நின்று, உமாராணியின் முகம் தெரிந்ததும், காமராக்கள் 'கிளிக்' 'கிளிக்' என்று சப்தித்தன. நாளைக்குப் பத்திரிகைகளில் படம் வரும்போது, உமா ராணிக்குப் பக்கத்தில் தாங்களும் தெரியவேண்டுமென்று அநேகம்பேர் தலையைத் தலையை நீட்டினார்கள்.
உமாராணி ரயிலிலிருந்து இறங்கி அங்கே தன்னை வரவேற்பதற்காகக் கூடியிருந்தவர்களைப் பார்த்துப் புன்னகையுடன் ஒரு கும்பிடு போட்டுவிட்டுக் காரில் போய் ஏறிக் கொண்டாள். அந்த ஒரு செய்கையினால் சென்னைவாசிகளின் உள்ளத்தை அவள் கொள்ளை கொண்டு விட்டாள் என்றே சொல்ல வேண்டும்.
அடுத்த வாரத்தில் ஸ்ரீமதி உமாராணிக்குச் சென்னைக் கார்ப்பரேஷனின் சார்பாக உபசாரப் பத்திரம் அளிக்கப்பட்டது. அன்று சாயங்காலம், சென்னையிலுள்ள அவ்வளவு மோட்டார் வண்டிகளும் ரிப்பன் கட்டிடத்தை நோக்கிச் சென்றது போல் தோன்றிற்று. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை கட்டிடத்தின் காம்பவுண்டுக்குள் பிரவேசிக்க முடியாமல் திரும்பிப் போக வேண்டியிருந்தது. ஏற்கெனவே, அந்தக் காம்பவுண்டில் அவ்வளவு ஜனங்கள் கூடியிருந்தார்கள். இவர்கள் எல்லாரும் கட்டிடத்தின் மண்டபத்துக்குள் போக முயன்று, அங்கே ஏற்கெனவே கூட்டம் நிறைந்து விட்டபடியால் ஏமாற்றம் அடைந்து, உமாராணி வரும்போது அவளைப் பார்த்து விட்டாவது போகலாமென்று நின்றார்கள்.
உமாராணியின் வரவேற்புக்காக ரூ.500 வரையில் செலவு செய்யலாமென்று நகரசபையில் தீர்மானம் ஆகியிருந்தபடியால் நகரசபை மண்டபம் அன்று பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கார்ப்பரேஷன் மேயரும் உமாராணியும் அமருவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை ஹாலிவுட் தியேட்டர்களில் உள்ள அரங்க மேடைகளைப் போல் அவ்வளவு அழகாக விளங்கிற்று.
மேயரும் உமாராணியும் மேடையில் வந்து உட்கார்ந்த போது சபையில் எழுந்த கரகோஷம் அடங்குவதற்கு ஐந்து நிமிஷம் ஆயிற்று. பிறகு, மேயர் உபசாரப் பத்திரம் படிப்பதற்காக எழுந்தார். உபசாரப் பத்திரம் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் எழுதி அச்சிடப்பட்டிருந்தது. மேயர் ஆங்கிலத்தில் எழுதிய உபசாரப் பத்திரத்தைப் படிக்கத் தொடங்கினார். சபையில் இருந்த தமிழபிமானி ஒருவர், "தமிழ்! தமிழ்!" என்றார்.
"சபையோர்களே! உபசாரப் பத்திரம் தமிழிலும் இருக்கிறது. ஆனால், நாம் இன்றைக்கு யாரை உபசரிக்கக் கூடியிருக்கிறோமோ அவருக்குத் தமிழ் தெரியாதாகையால், முதலில் இங்கிலீஷில் படிந்துவிட்டு, அப்புறம் வேண்டுமானால் தமிழிலும் படிக்கிறேன்" என்றார் மேயர். இச்சமயத்தில், ஸ்ரீமதி உமாராணி, "please read in your mother-tongue (தயவு செய்து உங்கள் தாய் பாஷையிலேயே படியுங்கள்)" என்று மேயரைப் பார்த்துக் கூறினாள். சபையில் முன் வரிசையிருந்தவர்களுக்கு இது காதில் விழவே, அவர்கள் கரகோஷம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.
மேயர் பிறகு தமிழிலேயே பத்திரத்தை வாசித்தார்:
"தாங்கள் பம்பாயைச் சேர்ந்தவராயிருந்தும், இந்தச் சென்னையிலுள்ள மாதர் வைத்தியசாலைக்கு இவ்வளவு பெரிய நன்கொடையை அளித்திருக்கிறீர்கள். தங்களுடைய தர்ம சிந்தனையானது சாதி, மதம், பாஷை, மாகாணம் முதலிய வரம்புகளைக் கடந்தது என்பது இதிலிருந்து வெளியாகிறது. தாங்கள் செய்திருக்கும் இந்தச் சிறந்த தர்மத்தைத் தமிழ் மக்கள் - முக்கியமாகத் தமிழ்நாட்டுப் பெண்மணிகள் - நன்றியுடன் எப்போதும் நினைவு கூர்வார்கள். தங்களுடைய இந்த அரிய உதாரணத்தைத் தமிழ் நாட்டிலுள்ள செல்வந்தர்கள் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
இந்த அரிய நன்கொடையின் மூலம் தங்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள உறவு என்றைக்கும் நீடித்திருக்க வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இங்ஙனம், "கார்ப்பரேஷன் மேயரும் அங்கத்தினர்களும்."
மேற்கண்டவாறு வாசித்துவிட்டு, மேயர் உபசாரப் பத்திரம் அடங்கிய அழகிய வெள்ளிப் பேழையை உமாராணியிடம் அளித்தார். உமாராணி அதை வாங்கி வைத்துவிட்டு உபசாரப் பத்திரத்துக்குப் பதில் சொல்வதற்காக மேடையின் முன்னால் வந்து நின்றாள். அவள் வந்து நின்றவுடனேயே சபையில் பலமான கரகோஷம் உண்டாயிற்று. ஆனால், அவள், "சகோதரிகளே! சகோதரர்களே!" என்று தமிழில் பேச ஆரம்பித்ததும், சபையோரின் உற்சாகத்துக்கும் குதூகலத்துக்கும் அளவில்லாமல் போயிற்று. காது செவிடுபடும்படியான கரகோஷம் அடங்கியதும் உமாராணி தொடர்ந்து பின்வருமாறு பேசினாள்:
"சகோதரிகளே! சகோதரர்களே! நான் தமிழில் பேச முன் வந்தது உங்களுக்குச் சிறிது ஆச்சரியத்தை அளித்தது என்று நினைக்கிறேன். ஆனால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பல வருஷ காலமாக நான் பம்பாயிலேயே வாசம் செய்தபடியால், என்னுடைய நடை உடை பாவனைகளால் வடக்கத்தியாரைப் போல் நான் தோன்றக்கூடும். ஆனால், உண்மையில் நான் இந்தத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவள் தான். உலகத்தில் பல தேசங்களுக்கும் நான் சென்று பார்த்திருக்கிறேன். மற்றத் தேசங்களைப் பார்க்கப் பார்க்கத்தான் நமது தமிழ் நாட்டின் சிறப்பு எனக்கு நன்றாய்த் தெரிய வந்தது. நமது செந்தமிழ் நாட்டைப் போன்ற அழகான நாட்டை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. தமிழைப் போன்ற இனிமையான பாஷையையும் கேட்டதில்லை. உங்களுடைய உபசாரப் பத்திரத்தில் 'நீங்கள், எனக்கும் தமிழ் நாட்டுக்கும் ஏற்பட்டிருக்கும் உறவு நீடித்திருக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறீர்கள். உண்மையில், நான் இனிமேல் சென்னை நகரில் வசிப்பதென்று தீர்மானத்துடனேயே வந்திருக்கிறேன்."
உமாராணி பேசிக்கொண்டு வந்தபோது இடையிடையே சபையில் கைதட்டலும், "கேளுங்கள், கேளுங்கள்" என்ற கோஷமும் ஏற்பட்டு வந்தன. அவள் இனிமேல் சென்னையிலேயே வாசம் செய்யப் போவதாகச் சொன்னதும் சபையோரின் உற்சாகம் மறுபடியும் ஒரு தடவை உச்ச நிலையை அடைந்தது. கரகோஷ ஆரவாரங்களுக்கிடையில், "உமாராணிக்கு ஜே!" என்ற கோஷமும் எழுந்து வானை அளாவிற்று.