உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

சாயங்கால மேகங்கள்

இருக்கச் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் அவன் அலைந்து கொண்டிருந்தான்.

ஆனால் பூமி புறப்பட்டுச் சென்ற, சிறிது நேரத்தில் வெளியே எங்கோ சென்று விட்டுத் திரும்பி வந்த முத்தக்காள், மெஸ்ஸில் பின்புக்கத்து அறையில் உட்கார வைக்கப்பட்டிருந்த காணாமல்போன பையனின் தாயைப் பார்த்ததும் கூட்பாடு போட்டு இரைய ஆரம்பித்து விட்டாள்.

“வர வர இங்கே கேள்வி முறையே இல்லாமல் போச்சு? இதென்ன ஹோட்டலா சத்திரம் சாவடியான்னே தெரியலே? யாரப்பா இந்தப் பொம்பிளை” என்று முத்தக்காள் அங்கே இருந்தவளைச் சுட்டிக் காட்டி ஹோட்டல் சரக்கு மாஸ்டரை விசாரித்தாள். அவள் குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.

“எனக்குத் தெரியாது! பூமி அண்ணனும் சித்ராவும் கூட்டிக் கொண்டாந்து இங்கே உட்காரச் சொல்லியிருக்காங்க” என்று சரக்கு மாஸ்டர் சகஜமாக முத்தக்காளுக்குப் பதில் சொன்னான்.

உள்ளே நுழைகிற போதே காலை வேளையில் வழக்கத்துக்கு மாறாகக் கேஷ்டேபிளில் சித்ரா அமர்ந்திருப்பதைப் பார்த்துப் பூமி இல்லை என்பதைப் புரிந்து கொண்டிருந்த முத்தக்காள் இப்போது இன்னும் எரிச்சலடைந்தாள்.

பெண் என்பவள் முள்ளோடு கூடிய மலர். ஆனால் சில வேளைகளிலே மலரே அரும்பாது அந்தச் செடியில். முள் மட்டுமே தெரிகிற மாதிரி நேரும்.

முத்தக்காள் அப்போது முழு முட்செடியாகத் தெரிந்தாள். அவளால் பூமியைப் பொறுத்துக் கொள்ள முடிந்தது. சித்ராவைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூமியிடம் இருந்த பரிவு சித்ராவிடம் முத்தக்காளுக்கு அறவே இல்லை. பூமியைத் தேடி வருகிற, பூமியோடு பழகுகிற யாரையுமே அவளுக்கு அதிகம் பிடிக்காது.