உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

சாயங்கால மேகங்கள்

கடற்கரை நன்றாக இருட்டியிருந்தது. அலைகளின் ஒளி அந்த இருளுக்குச் சுருதி கூட்டிக் கொண்டிருந்தது. புறப்படலாமா சித்ரா?

“புறப்படலாமா சித்ரா?”

அவள் எழுந்தாள். அவன் கையும் அவள் கையும் சுபாவமாக இணைந்தன அவர்கள் கை கோர்த்து நடந்தனர். முன்பு ஒரு முறை நிகழ்ந்தது போல் கைப்பற்றியதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்கச் சொல்லிப் பரஸ்பரம் கேட்டுக் கொள்ளவில்லை இப்போது.

மணற்பரப்புக்கு அப்பால் மேற்கே நகரம் ஒளிமயமாக இயங்கிக்கொண்டிருந்தது. பூமியும் சித்ராவும் இருளிலிருந்து ஒளியை நோக்கிக் கை கோர்த்தபடி இணைந்து நடந்தார்கள்.

அப்போது கடற்கரை எவ்வளவிற்கு இருண்டிருந்ததோ அவ்வளவிற்கு அவர்கள் இருவர் மனமும் பிரகாசமாயிருந்தது. தெளிவாயிருந்தது.

இருளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒளியை நோக்கி முன்னேறினார்கள் அவர்கள். சென்ற வழியின் இருட்டுக்களை கடந்து இனிமேல் செல்ல வேண்டிய வழியின் வெளிச்சத்தை எதிர்நோக்கி விரைவது ஓர் இனிய அனுபவமாக இருந்தது. பூமி அப்போது அவளைக் கேட்டான்:

“வீடு வரை நடக்கலாமா? அல்லது... ஏதாவது டாக்ஸி, ஆட்டோ ... பார்க்கணுமா?”

“நீங்கள் கூட வரும்போது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் துணிந்து நடக்கலாம்...”

இந்த அர்த்த நிறைவுள்ள வாக்கியத்தை ஒரு புன்முறுவலால் வரவேற்றான் பூமி. அவனது புன்னகை அவளது பதில் புன்னகையைச் சந்தித்தது.

(முற்றும்)