உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

9

யான நல்லவர்களுக்கும்-பாமரர்களுக்கும் சந்தேகத்தின் பேரில் தொந்தரவு கொடுப்பதும், சந்தேகத்துக்குரியவர்களையும் திருடர்களையும் அயோக்கியர்களையும் நல்லவர்களாக நினைத்து விட்டுவிடுவதும் நமது போலீஸின் அபூர்வ குணாதிசயங்களில் ஒன்று என்று நினைக்குமளவு போலீஸ் இலாகாவை அரசியல்வாதிகள் கெடுத்து வைத்திருந்தார்கள், சீரழியப் பண்ணியிருந்தார்கள்.

பூமிநாதனுக்கே சொந்த முறையில் போலீஸைப் பற்றி நினறய அநுபவங்கள் இருந்தன. அதிகாலையில் விடிந்ததும் விடியாததுமாகச் சவாரியை எதிர்பார்த்து எழும்பூரிலோ சென்ட்ரலிலோ வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினால் “மாமூல் என்றும், ‘நாஷ்டாவுக்கு எதினாச்சும் குடுப்பா’ என்றும் வந்து நிற்கும் போலீஸ்காரர்களைப் பார்த்து அவன் அருவருப்பு அடைந்திருக்கிறான்.

வெறும் நாலணா எட்டணா, லஞ்சத்துக்கே சலாம் போடும் இந்தப் போலீஸ்காரர்கள்தான் லஞ்சம் வாங்கியவர்களையும் ஊழல் செய்தவர்களையும் திருடுபவர்களையும் கைது செய்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு முறையும் பூமிநாதனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வரும். நியாயங்கள் என்னவென்றே புரியாதவர்கள் எப்படி அவற்றைக் காக்க முடியும்? தர்மங்கள் எவை என்றே புரியாதவர்கள் எப்படி அதர்மங்களைத் தடுக்க முடியும்?

பையை போலீஸ் ஸ்டேஷனில் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தான் அவன். அதே சமயம் அந்தப் பெண் ஏறிய இடம், இறங்கிய இடத்தை வைத்து எந்த விலாசம் என்று கண்டு பிடிக்க முடியாமலுமிருந்தது. மைலாப்பூர்க் குளக்கரையிலோ, பாண்டி பஜாரிலோ அவளை எந்த விலாசத்தில் தேடுவது?

வள்ளுவர் கோட்டத்தின் அருகே ஆட்டோவை ஓரங்கட்டி ஸ்டாண்டில் நிறுத்தி விட்டுப் பையைப் பிரித்தான்