பாரதியாரின் தேசிய கீதங்கள்/27. சுதந்திரப் பயிர்
Appearance
27. சுதந்திரப் பயிர்
- தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
- கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
- எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
- வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?
- ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
- வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
- தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
- கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?
- மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
- நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?
- எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
- கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?
- மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
- காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?
- எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
- நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?
- இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
- அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?
- வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?எந்தை சுயா
- தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?
- நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
- வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?
- பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
- பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?
- நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,
- என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?
- இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர்
- அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?
- நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்
- ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே.