அதியன் விண்ணத்தனார்
Appearance
அதியன் விண்ணத்தனார்
[தொகு]அகநானூறு- 301. பாலைத்திணை
[தொகு]- (பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது)
- வறனுறு செய்தியின் வாடுபு வருந்திப்
- படர்மிகப் பிரிந்தோ ருள்ளுபு நினைதல்
- சிறுநனி யான்றிக வென்றி தோழி
- நல்குந ரொழித்த கூலிச் சில்பதம்
- ஒடிவை யின்றி யோம்பா துண்டு (5)
- நீர்வாழ் முதலை யாவித் தன்ன
- ஆரை வேய்ந்த வறைவாய்ச் சகடத்
- தூரிஃ தென்னாஅர் தீதிலா வாழ்க்கைச்
- சுரமுதல் வருத்த மரமுதல் வீட்டிப்
- பாடின் றென்கிணை கறங்கக் காண்வரக் (10)
- குவியிண ரெருக்கின் றதர்பூங் கண்ணி
- ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
- முளரித் தீயின் முழங்கழல் விளக்கத்துக்
- களரி யாவிரைக் கிளர்பூங் கோதை
- வண்ண மார்பின் வனமுலைத் துயல்வரச் (15)
- செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
- குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந் திசைப்பக்
- கார்வான் முழக்கி னீர்மிசைத் தெவுட்டுந்
- தேரை யொலியின் மாணச் சீரமைத்துச்
- சில்லரி கறங்குஞ் சிறுபல் லியத்தொடு (20)
- பல்லூர் பெயர்வன ராடி யொல்லெனத்
- தலைப்புணர்த் தசைத்த பஃறொகைக் கலப்பையர்
- இரும்பே ரொக்கற் கோடிய ரிறந்த
- புன்றலை மன்றங் காணின் வழிநாள்
- அழுங்கன் மூதூர்க் கின்னா தாகும் (25)
- அதுவே மருவின மாலை யதனாற்
- காதலர் செய்த காதல்
- நீடின்று மறத்தல் கூடுமோ மற்றே.