உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பராமாயணம்/பால காண்டம்/கையடைப் படலம்

விக்கிமூலம் இலிருந்து
6. கையடைப் படலம்

மகிழ்வுடன் வாழ்ந்த தயரதன்

அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும்
விரசுறு தனிக் குடை விளங்க, வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட, முனிவர் ஏத்துற,
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள், 1

நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால்
நினையவும் அரியது, விசும்பின் நீண்டது, ஓர்
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான். 2

தயரதன் அரியணையில் வீற்றிருக்க, விசுவாமித்திர முனிவனின் வருகை

தூய மெல் அரியணைப் பொலிந்து தோன்றினான்;
சேய் இரு விசும்பிடைத் திரியும் சாரணர்,
'நாயகன் இவன்கொல்?' என்று அயிர்த்து, நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார். 3

மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர், 'மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறு அமைத்து, தேவரோடு
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு' எனாத்
தொடங்கிய, துனி உறு, முனிவன் தோன்றினான். 4

தயரதன் முனிவனை வணங்கி உபசரித்து மொழிதல்

வந்து முனி எய்துதலும், மார்பில் அணி ஆரம்,
அந்தரதலத்து இரவி அஞ்ச, ஒளி விஞ்ச,
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் என, கடிது எழுந்து அடி பணிந்தான். 5

பணிந்து, மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன்
அணிந்த தவிசு இட்டு, இனிது அருத்தியொடு இருத்தி,
இணைந்த கமலச் சரண் அருச்சனை செய்து, 'இன்றே
துணிந்தது, என் வினைத் தொடர்' எனத் தொழுது சொல்லும்: 6

'நிலம் செய் தவம் என்று உணரின், அன்று; நெடியோய்! என்
நலம் செய் வினை உண்டு எனினும், அன்று; நகர், நீ, யான்
வலம் செய்து வணங்க, எளிவந்த இது முந்து என்
குலம் செய் தவம்' என்று இனிது கூற, முனி கூறும்: 7

தயரதனை விசுவாமித்திரன் புகழ்தல்
 
'என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால்,
பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும், பாற்கடலும், பதும பீடத்து
அந் நகரும், கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும், அல்லாது, புகல் உண்டோ ? இகல் கடந்த புலவு வேலோய்!8

'இன் தளிர்க் கற்பக நறுந் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து,
நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கி, குறை இரந்து நிற்ப, நோக்கி,
குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ, புரந்தரன் இன்று ஆள்கின்றது?-அரச!' என்றான். 9

தயரதன் கை கூப்பித் தொழுது, 'யான் செய்வது அருளுக!' என வேண்டுதல்

உரைசெய்யும் அளவில், அவன் முகம் நோக்கி, உள்ளத்துள் ஒருவராலும்
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகைக் கடல் பெருக, கரங்கள் கூப்பி,
'அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென்; மற்று, இனிச் செய்வது அருளுக!' என்று,
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய, பின் மொழியும் முனிவன், ஆங்கே: 10

வேள்வி காக்க தயரதனிடம் கரிய செம்மலை முனிவன் வேண்டல்

'தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி' என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.11

தயரதன் துயர் உறுதல்

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தாலெனச் செவியில் புகுதலோடும்,
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த, ஆர் உயிர் நின்று ஊசலாட,
'கண் இலான் பெற்று இழந்தான்' என உழந்தான் கடுந் துயரம்-காலவேலான்.12

தயரதன் தானே வந்து வேள்வி காப்பேன் எனல்

தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி,
'படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்! பணி இதுவேல், பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும், நான்முகனும், புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய், யான் காப்பென்; பெரு வேள்விக்கு எழுக!' என்றான். 13

விசுவாமித்திர முனிவனின் கோபம்

என்றனன்; என்றலும், முனிவோடு எழுந்தனன், மண் படைத்த முனி; 'இறுதிக் காலம்
அன்று' என, 'ஆம்' என இமையோர் அயிர்த்தனர்; மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும்
நின்றனவும் திரிந்தன; மேல் நிவந்த கொழுங் கடைப் புருவம் நெற்றி முற்றச்
சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்; இருண்டன, போய்த் திசைகள் எல்லாம்.14

வசிட்டன் உரையால் தயரதன் தெளிதல்

கறுத்த மா முனி கருத்தை உன்னி, 'நீ
பொறுத்தி' என்று அவற் புகன்று, 'நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?' எனா, வசிட்டன் கூறுவான்: 15

'பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்,
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது' என்னவே, 16

தயரதன் இராம இலக்குவரை முனிவனிடம் ஒப்புவித்தல்

குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
'திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று' என,-
'வருக என்றனன்' என்னலோடும், வந்து
அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான். 17

வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, 'நல்
தந்தை நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு;
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!' என்றான். 18

இராம இலக்குவருடன் முனிவன் புறப்படுதல்

கொடுத்த மைந்தரைக் கொண்டு, சிந்தை முந்து
எடுத்த சீற்றம் விட்டு, இனிது வாழ்த்தி, 'மேல்
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம்' எனா,
நடத்தல் மேயினான், நவைக்கண் நீங்கினான். 19

ஆயுதம் தாங்கி இராம இலக்குவர் முனிவன் பின் செல்லுதல்

வென்றி வாள் புடை விசித்து, மெய்ம்மைபோல்
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து, இரு
குன்றம் போன்று உயர் தோளில், கொற்ற வில்
ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான். 20

அன்ன தம்பியும் தானும், ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழிக் கொண்டாலென,
சொன்ன மா தவன் - தொடர்ந்து, சாயைபோல்,
பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான். 21

மூவரும் சரயு நதியை அடுத்த சோலையைச் சேர்தல்

வரங்கள் மாசு அற, தவம் செய்தோர்கள் வாழ்
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கிப் போய்,
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று
இரங்கு வார் புனல் சரயு எய்தினார். 22

கரும்பு கால் பொரக் கழனி வார்ந்த தேன்
வரம்பு மீறிடு மருத வேலிவாய்,
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதிபோல்
சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார். 23

தீய்ந்த சோலையைக் கண்டு இராமன் வினாவுதல்

தாழும் மா மழை தவழும் நெற்றியால்
சூழி யானைபோல் தோன்றும் மால் வரைப்
பாழி மா முகட்டு உச்சி, பச்சை மா
ஏழும் ஏற, போய் ஆறும் ஏறினார். 24

தேவு மாதவன் - தொழுது, தேவர்தம்
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால்
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு,
'யாவது ஈது?' என்றான் - எவர்க்கும் மேல் நின்றான். 25

மிகைப் பாடல்கள்

அப்பெருந் திருவொடும் 'அகில நாதன்' என்று,
எப்பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே,
தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே,
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள். 1-1

அரிஅணை மிசை தனில், அழகு மன்றினில்,
புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள்
அரசர்கள் முடி படி அணைய, அம் பொனின்
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ. 1-2

'"இனைய சோலை மற்று யாவது?" என்று, மா
முனிவ! கூறு' என முதல்வன் கூறலும்,
பனுவல் வேத நூல் பகரும் மா தவன்,
'தனு வலாய்! இதன் தன்மை கேள்' எனா, 24-1

'சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன்
உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள்,
வெம்பி, மற்று அவன் வெற்றி கொண்ட போது,
அம்பரம் இழந்து, அவனி வந்தனன்; 24-2

'அவனி வந்து, மன்னவர் இடம்தொறும்,
தவனன் என்னவே தான் உழன்று, அறிந்து,
"இவனில் வேறு மற்றுஇல்லை எற்கு" எனா,
உவன் விரும்பி வந்து, உந்தை நாடு உறா, 24-3

'இந்த இவ் இடத்து எய்தி, இந்திரன்,
"சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும்
வந்து நிற்க" எனா, மன நினைப்பின்முன்
முந்து வந்து மா முரல நின்றவால். 24-4

'நின்ற சோலைவாய், நியமம் நித்தமும்
குன்றல் இன்றியே செய்து கொண்டு, அவன்
நன்றியால் இருந்து, அரசை நண்ணியே,
துன்று சோலையின் தொழில் உணர்த்தினான். 24-5

'உருவம் மாறி, வேறு உருவமாகியே,
நிருப! நின் குடை நிழலின் நிற்றலும்,
பரிவின் நோக்கி, "நீ பகர்தியால்" எனத்
தருவின் நாயகந்தான் விளம்பினான்: 24-6

'"சதமகன் தனைச் சம்பரன் எனும்
மதமகன் துரந்து அரசு வவ்வினான்;
கதம் அகன்றிடாக் கனக வெற்பு அவன்
விதம் அகன்று வந்து, உன்னை மேவினேன்." 24-7

'என்றபோது தன் இரதம் ஏறியே
சென்று, மற்று அவன் சேனையோடு உகக்
கொன்று, வாசவன் அரசு கொள்ளவே
அன்று அளித்து, மீண்டு அயோத்தி மேவினான். 24-8

'அன்னது ஆதலின் அவனி வந்த கா
இன்ன நாமம், இச் சோலை' என்றலும்,
மன்னர்மன்னவன் மதலை, 'நன்று' எனா,
பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார். 24-9