உள்ளடக்கத்துக்குச் செல்

இடலாக்குடி ராசா

விக்கிமூலம் இலிருந்து

இடலாக்குடி ராசா’ என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால் ‘புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு முறை இடம் பெயர்கையிலும் முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கித் தத்தித் தாண்டும் பெட்டைக் கழுதையைக் கண்ட பரிதாபம்.

ராசாவின் தோற்றம் வாட்டசாட்டமாக, தாள் தொடு தடக்கையொடு ராஜா போல்தான் இருக்கும். ஐந்தே முக்காலடி உயரம். காலில் செருப்பு இல்லாமல் கருமருதுப் பலகை போல் விரிந்த மார்பும் முதுகும். ‘இன்று போல் இருத்தி’ என்று எந்தச் சீதை வாழ்த்தினாளோ? என்றைக்குப் பார்த்தாலும் நாற்பது சொல்லும் உடல். ஆனால் கண்கள்? வெண்டிலேஷனுக்குப் போடும் நிறமில்லாத ஒளி ஊடுருவாத கண்ணாடி போல் ஒரு மங்கல். அல்லது வெளிறல். கண்களையே பேசும் மனம். பேச்சில் ஒரு வெடுக்கு.

பெயரில் இடலாக்குடி இருந்தாலும் அங்குதான் தங்குகிறானா? வீடுகளுண்டா? பெண்டு பிள்ளைகள் உற்றார் உறவு உண்டா? யாரும் கண்டுபிடிக்க முனைந்ததில்லை.

எப்போதாவது திடீரென அவன் பிரசன்னமாவான். அரையில் கிழிசல் இல்லாத பட்டைக் கரை ஒற்றை வேட்டி. தோளில் சுட்டிப்போட்ட ஈரிழை துவர்த்து. இடது கையில் நரைத்துப்போன காசிக்கயிறு. குளித்து கோயிலுக்குப் போன அடையாளமாக காதில் பொன்னரளி அல்லது செவ்வரளி. அல்லது திருநீற்றுப் பட்டை அல்லது மஞ்சள் காப்புக் கீற்று. எப்போது பார்த்தாலும் களைந்து போன ஒரு சாமானை எடுக்கப் போவதுபோல் “விறீர்” என்று ஒரு நடை.

முற்பகல் பதினோரு மணிக்கு, பிற்பகல் மூன்று மணிக்கு, இரவு எட்டுமணிக்கு என்று அட்டவணைப்படியும் இல்லாமல் கிழமையில் இரண்டு மூன்று முறை அந்த ஊருக்கு வருவான். மனதில் தோன்றிய – அப்படி ஏதாவது தோன்றுமோ என்னவோ – யாரு வீட்டுத் தெருப்படிப் புரையிலாவது ஏறி வட்டச்சம்மணம் போட்டு உட்காருவான். துண்டால் முகத்தை ஒரு முறை துடைத்துக் கொள்வான். ஒரு வளையத்தின் நெளிவு இல்லாமல், நேர்க்கோட்டுக் கோணங்களில் வெடுக்வெடுக்கென்று காக்கையைப்போல் தலையைத் திருப்பிச் சுற்றும் முற்றும் பார்ப்பான்.

யார் கவனத்திலாவது பட்டால் சரி. படாவிட்டால் “எக்கா… ஏ எக்கா… ராசா வந்திருக்கேன்” என்று இரண்டு விளி. அல்லது “பெரீம்மா. பெரீம்மோவ்… என்னா அனக்கத்தைக் காணேம். ஏ பெரீம்மா…” என்றொரு கூப்பாடு. இன்னாருக்கு இன்ன முறைதான் என்று ஒரு வரைமுறை கிடையாது. எல்லோரும் தன்னைவிட வயதில் பெரியவர்கள் என்ற அனுமான முறைகள். ஆனால் எந்த வீட்டிலும் ஆண்களைக் கூப்பிடுவது இல்லை.

சத்தம் கேட்டு வீட்டினுள்ளிருந்து ‘அக்காவோ’ ‘பெரியம்மா’வோ எட்டிப் பார்ப்பார்கள். “என்னா ராசா? இந்த வேனா வெயில்லே எங்கயாக்கும் போய்ட்டு வாறே?”

“யாரு? ராசாவையே கேக்கே? காலம்பற நாவக்காடு… நம்ம அத்தானுக்க எளைய குட்டியைக் கெட்டிக் குடுத்திருக்கில்லா.. ஆவுடையம்மை. எட்டிப்பார்த்து ரெம்ப நாளாச்சு… பிள்ளை என்ன நெனைச்சுக்கிடும்? நம்மளைத் தேடாதா? ஒரு நடை…. இன்னா இரி காப்பி குடிச்சுக்கிட்டுப் போலாம்ணா…. ராசாக்கு கொறைச்சலுல்லா… கொண்டாங் கொடுத்தான் வீட்லயா காப்பிக்குடி… கொள்ளாமே! அவ அடுக்களைக்குப் போனா. வண்டியை விட்டுட்டேன். அக்காளைப் பாத்து நாளாச்சுல்லா….”

“ஆகாங்…”

“என்ன ஆகாங்… பேசிக்கிட்டே நிக்கே? விடிஞ்சாப்பிலே இருந்து ஒண்ணும் குடிக்காம அலைஞ்சு வந்திருக்கேன்…. பசிக்காதா!”

”அட காலறுவான்…. இன்னா இரி… எல்லாம் ஒன் அதியாரந்தான்….”

மஞ்சளாகப் பழுத்த ஒரு வாழையிலைத் துண்டு. அதன் சுருளை நீக்கி ராசா விரித்துப் பிடிக்க, அந்த ’அக்கா’ கற்சட்டியில் பிழிந்து கொண்டு வந்திருந்த பழைய சோற்றைக் கையால் அள்ளியள்ளி வைப்பாள். ஒரு முழு வேலைக்காரன் திருப்தியாகச் சாப்பிடும் அளவுக்கு. அதன்மேல் கொடியடுப்பில், மண்பானையில், எப்போதும் அனந்து நுரைத்துக் கொண்டிருக்கும் பழங்கறியில் இரண்டு மூன்று சிரட்டை அகப்பை. ‘பழஞ்சித் தண்ணி’யும் கொண்டு வைப்பாள்.

எதையோ நினைத்துக்கொண்டு “எக்கா…. ஏ எக்கா….?’

“என்னா? ஏன் போட்டு தொண்டையைத் தீட்டுகே?”

“ரெண்டு உப்புப் பரல் தரப்பிடாதா? வீட்டிலே எளவு உப்புக்கும் பஞ்சமா?”

“கரி முடிஞ்சு போவான்…. மறந்து போச்சுப்பா… மொளகா வேணுமா?”

“கொண்டா.”

விரல்களை விரித்து, முழு உருண்டையாக உருட்டி ராசா பழையது சாப்பிடுவதைப் பார்த்தால் இரண்டு கவளம் நமக்கும் தரமாட்டானா என்று இருக்கும். ‘நறுக்நறுக்’கென்று பச்சை மிளகாயைக் கடிக்கையில் நாவூறும். வள்ளிசாக ஒரு பருக்கை மீதமில்லாமல் சாப்பிட்டு முடிப்பான்.

“என்னா போருமா?”

“போரும்.. ராசாவுக்கு வயறு நெறஞ்சாச்சு…” தண்ணீர் விட்டுக் கையைக் கழுவுவான். சாப்பிட்ட இடத்தைத் துடைப்பான். “அப்பம் ராசா வரட்டா?”

“என்னா அதுக்குள்ளே பொறப்பிட்டாச்சா?”

“அப்பம் ராசா வண்டியை விட்டிரட்டா. எக்கா, ராசா வண்டியை விட்டிருக்கேன்…. பிள்ளைகளையெல்லாம் பாத்துக்கோ என்னா? வண்டியை விட்டிருகேன்….” விறீர் என்று நடை தொடரும். எங்கே வந்தான்? எங்கே போகிறான்? யாருக்குத் தெரியும்?

அந்த ஊரில் தெருப்படிப்புரை உள்ள எல்லா வீடுகளிலும் இந்த அதிகாரம்தான். அந்த வீட்டில் பழையது இல்லாவிட்டால் அடுத்த வீட்டுக்காரியோ எதிர்த்த வீட்டுக்காரியோ அவன் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு கொண்டுவந்து அமுது படைப்பாள்.

பெரும்பாலும் ராசா சாப்பிடவரும் நேரங்களில் ஆண்கள் வீட்டில் இருப்பதில்லை. இருந்தாலும் அவன் அதிகாரங்களைக் கண்டுகொள்வதில்லை. ஒரு அலட்சியம் அல்லது இளப்பம். குறுஞ்சிரிப்போடு விட்டு விடுவார்கள். சிலருக்கும் மட்டும் அவனுடன் விளையாடத் தோன்றும். “என்ன ராசா! அதியாரம் தூள் பறக்கு? இஞ்ச என்னா அறுத்தடிச்சுக் கொண்டு போட்டிருக்கையா?”

“யாரு சித்தப்பாவா? ராசாக்கு பசிக்கில்லா?”

“பசிச்சா…? அது கொள்ளாண்டே…!”

”அப்பம் ராசாக்கு சாப்பாடு இல்லையா? ராசா வண்டியை விட்டிரட்டா… வண்டியை விட்டிருகேன்….” வேறு நிறங்கள் ஏதும் இல்லாத அந்தக் குரலில் ஒலிக்கும் ஒரு ஏமாற்றம் குடலைச் சுண்டி இழுக்கும். தொண்டையில் ஏதோ அடைக்கும்.

“அட இருப்பா…. சொணையிலே கூடுனவன்தான், ஏவுள்ளா.. ராசாவுக்கு என்னமாங் குடு….”

“ஆமா உங்களுக்கு அவன்கிட்ட என்ன பரியாசம். சவம் இப்படி ஒரு பொறவி.. கடவுளு படைச்சு விட்டுட்டான்…” சொல்லும்போதே அந்த ‘சித்தி’க்குக் கண்ணீர் முட்டும்.

ராசாவின் வரத்தும் போக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நிகழும். தொடர்ந்தாற்போல் சில வாரம் கண் மறைவாகப் போய் விடுவான். “ராசாவை எங்க கொஞ்ச நாளாக் காணவே இல்லை” என்று சில தாய் வயிறுகள் முனகும். நாள் கிழமைகளில் அவன் நினைவு வரும். “மூதி வரச்சிலே எல்லாம் புளிச்ச பழையது குடிச்சிட்டு போகு… ஒரு விசேச நாளுண்ணு வரப்பிடாது? சவன் எங்கின சுத்தீட்டுத் திரியோ?” என்று அங்கலாய்க்கும். இதெல்லாம் அவனுக்கு எட்டுமோ எட்டாதோ? இரண்டு மூன்று நாட்களில் திடீரென காட்சி கிடைக்கும்.

ராசா ஒரு கிறுக்கன் அல்ல. எந்த வயதில் அவன் மன வளர்ச்சி நின்று போனதோ தெரியாது. யாருக்கும் எந்த விதத்திலும் இம்சை செய்ததாகத் தகவல் கிடையாது. எதையும் யாரையும் கவனிக்காத ஒரு நிமிர்ந்த நடை. எதுவும் குறுக்கிட முடியாத வேகம். குறுக்கிட்டாலும் அவன் பொருட்படுத்துவதில்லை. சில சமயங்களில் அவன் சாப்பிடும்போது சிறு குழந்தைகள் தள்ளிநின்று வேடிக்கை பார்க்கும். ஒன்றை மற்றது அவன் முன்னால் தள்ளிவிடும். மற்றது “கே” என்று கத்தும். அவன் நடக்கையில் பின்னாலிருந்து “ஏ இடலாக்குடி ராசா” என்று கூச்சலிட்டுப் பின் தொடரும். யாராவது வயதானவர்கள் அதட்டினால்தான் உண்டு. ராசாவின் கண்கள் இதனைக் காணவே செய்யும். ஆனால் உதடுகள் பிரிவதில்லை.

வடக்குத் தெரு, மூலைவீட்டு வன்னியப்பெருமாள் வீட்டில் அன்று திருமணம். மூத்த மகளுக்கு. மாப்பிள்ளை செண்பகராமன்புதூர். திருமணம் முடிந்து பந்தி நடந்துகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமையாதலின் அவ்வூர் இளம் பிராயப் பிள்ளைகள் அனைவரும் நின்று விளம்பிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பகல் பன்னிரண்டு மணி சாய்ந்தது. காலை எட்டரை மணி முகூர்த்தம். முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டாயிற்று. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள், கல்யாணத்துக்கு வந்திருந்த பெண் வீட்டு வெளியூர்க்காரர்கள், உள்ளூர் ஆண்கள், பெண்கள், அடியந்தரக்காரர்கள் அனைவரும் சாப்பிட்டாயிற்று. கடைசியாக விளம்பிக் கொடுத்துவிட்டு நின்ற பையன்களுக்கான தனிப்பந்தி. ஏற்கனவே சாப்பிட்டு விட்டிருந்த ஐந்து பையன்கள் மட்டும் விளம்புவதற்காக நின்றனர்.

எப்போதுமே இந்தப் பந்தி ஏகக் கூச்சலும் கும்மாளியுமாக இருக்கும். உடல் வருத்தம் பாராமல் முன்தின இரவுதொட்டு வேலை செய்தவர்கள், சீமான் வீட்டுச் சீராளன் முதல் கூரை வீட்டுக் குமரன் வரை. படித்துக் கொண்டிருக்கும் அல்லது படிப்பை நிறுத்திய பையன்கள். வேறுபாடுகளற்றுப் புரண்டு மறியும் வயது. எனவே இந்தப் பந்தியில் என்ன நடந்தாலும் கல்யாண அடியந்திரக்காரர்கள் கண்டு முகம் சுளிப்பதில்லை. மாறாக ஒரு மன நிறைவுடன் பார்த்துச் சிரித்துவிட்டுப் போவார்கள்.

இடலாக்குடி ராசா எங்கோ போய்விட்டு ‘விறீர்’ என்று சப்பாத்துக்கலுங்கைத் தாண்டி வடக்குத் தெரு மூலையில் ஏறினான். இனிமேல் யாராவது சாப்பிட பாக்கி இருக்கிறார்களா என்று பார்க்க பந்தலைவிட்டு தெருவுக்கு வந்த பெண்ணின் தம்பி பார்வையில் பட்டான்.

கையோடு கொண்டுபோய், ஆக்குப் புரையில் நிறுத்தினான். கை கழுவி சாப்பிட உட்காரப்போகும் இளைஞர் கூட்டம் ராசாவை உற்சாகமாக வரவேற்றது.

பந்திப்பாய் விரித்து, எதிர் எதிராக இரண்டு வரிசையில் உட்கார்ந்தனர். தென் வடலான அந்தப் பந்தலில், கிழக்கு வரிசையில், தென்னை ஓலை நிரை ஒட்டிய வரிசையின் நடுவில் இடலாக்குடி ராசா. அவன் முகத்தில் பரவசக் கொந்தளம்.

நீள நீளமான தலைவாழை இலைகள். ஏந்திய கைகளில் எவர் சில்வர் மூக்கனில் இருந்து தண்ணீர். தண்ணீர் தெளித்து, இலையைத் துடைத்து – விளம்ப நின்ற பையன்களின் முகத்தில் குறும்பின் தெறிப்பு. உப்புப் பரல் வந்தது. துவட்டல் வந்தது. தயிர்க் கிச்சடி வந்தது. அவியல் வந்தது. எரிசேரி வந்தது. வந்தவன் எல்லாம் ராசாவின் இலையை மட்டும் விட்டுவிட்டு விளம்பிச் சென்றான். பரப்பிரம்மாக ராசா இடமும் வலமும் பார்த்தான்.

நடப்பதைக் கவனித்த யாவரின் முகத்திலும் பிதுங்கி நின்ற சிரிப்பு எப்போது வெடிக்குமோ என்ற தெறிப்பு. கறி வகைகள் வைத்து முடித்து பப்படம் போட்டு, ஏத்தங்காய் உப்பேரி வைத்து…

காது வைத்த செம்பு நிலவாயில் சாதம் எடுத்து, பித்தளைக் கோருவையால் பறித்து, இலையிலையாக வைத்துக்கொண்டு போனான் ஒருவன். தன் இலை தாண்டிப் போனதும் இடலாக்குடி ராசா விளித்தான். “எண்ணேன்… ஏ எண்ணேன்… ராசாக்குப் போடாமப் போறியே…”

சிரிப்பை அடக்கிக்கொண்டு பருப்பு ஊற்றுபவன் வந்தான்.

“எண்ணேன்… ராசாக்கு வயிறு பசிக்கில்லா…”

பருப்புக்கு பின்னால் நெய் வந்தது.

ராசாவின் முகத்தில் ஒரு பதைப்பு அடர்ந்தது. “எண்ணேன்… எனக்கில்லையா? அப்பம் நான் வண்டியை விட்டிரட்டா….”

இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல – ‘சோ’வென்று ஒரு சிரிப்பு. ஒரே சமயத்தில் பொட்டித் தெறித்த அலைகள். பந்தலின் கூரையைக் கிளப்பும் எக்காள ஓசை.

ராசாவின் கண்களில்….

அவன் இலைக்கு ஒருவன் சாதநிலவாயை எடுத்து வரு முன்னால்-

“அப்பம் நான் வண்டியை விட்டிருகேன்…” சொற்கள் நனைந்து வந்தன.

திடீரென்று சிரிப்பு நின்றது..

‘விறீர்’ என்று எழுந்து நடந்தான் ராசா.

யாருக்குமே சாப்பிடப் பிடிக்கவில்லை.

(தீபம், ஏப்ரல் – 1978)

"https://ta.wikisource.org/w/index.php?title=இடலாக்குடி_ராசா&oldid=9291" இலிருந்து மீள்விக்கப்பட்டது