பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202 ♦ நான் கண்ட பெரியவர்கள்


மறக்கமுடியவில்லை. காரணம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சொற்கள் அவை, “பொடியா! வழக்கம்போல் மாலையில் பிரசங்கம் செய்துவிட்டு இங்கே வா” என்று கூறிய சொற்கள் ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்தன. அப்படியானால் நான் பேசமுடியும் என்பதைச் சுவாமிகள் குறிப்பாக உணர்த்திவிட்டார்கள் என்று உணரத் தொடங்கினேன். எழுந்து விழுந்து வணங்கிவிட்டு “உத்தரவுப்படியே செய்கிறேன்” என்றேன். அந்த இரண்டு வார்த்தைகள்தான் அப்பொழுது புதிதாகப் பிறந்த என் வாயிலிருந்து வந்த முதலிரண்டு சொற்கள் ஆகும். அந்தச் சித்தபுருஷன் எதிரே என்னை மறந்து நான் நிற்கும்போது திடீரென்று சுவாமிகள் பின்வருமாறு கூறினார்கள். “பொடியா, சேக்கிழாரையும் கம்பனையும் நாங்கள்தானே வெட்டிப் புதைக்கனும், கவலையில்லாமல் போய்வா” என்றார்கள். இதன் பொருள் என்ன என்பதைப் பின்னர் விளக்குகிறேன். வெளியில் வந்து காரை ஒட்டிக்கொண்டு சுவாமிகளிடம் என்னைப் போகுமாறு பணித்த அந்த மருத்துவப் பெருந்தகையைக் காணச் சென்றேன். தெருவிலிருந்தபடியே “டாக்டர்....” என்று பெருங் குரலெடுத்துக் கூவினேன். அந்த முதியவர் வீட்டினிலிருந்து வெளியே வந்து நடுத்தெருவில் சாஷ்டாங்கமாக விழுந்து என்னை வணங்கினார். சற்றும் எதிர்பாராத இதனைக் கண்ட நான், பெரிதும் அதிர்ச்சி அடைந்து ‘இவ்வளவு முதியவராகிய தாங்கள் என்னைக் கும்பிடலாமா? இது முறையன்று’ என்று கூறினேன். என்னுடைய இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்ட அவர், உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தார். அதே நேரம் அவர் பணியாளர் ஒருவர் இரண்டு விமான டிக்கட்டுகளைக் கொண்டு வந்து அவரிடம் தந்தார். ஏதோ அவருக்கு அந்த டிக்கட்டு என்று நினைத்தேன். அப்பெருமகனார் டிக்கட்டை என்னிடம்