உள்ளடக்கத்துக்குச் செல்

தியாக பூமி/இளவேனில்/நெடுங்கரைப் பிரயாணம்

விக்கிமூலம் இலிருந்து

நெடுங்கரைப் பிரயாணம்

பதினாறு மாடு பூட்டிய ரதத்தில் சம்பு சாஸ்திரி கழுத்தில் பூமாலைகளுடனும், பக்கத்தில் ஒரு குழந்தையுடனும் ஊர்வலம் வருவதைக் கண்டதும் தீக்ஷிதருக்கு ஒரே பிரமிப்பாய் போய்விட்டது. "எப்படியும் தஞ்சாவூர் ஜில்லாக்காரனுடைய மூளையே மூளை! எப்படி ஊரை ஏமாத்திண்டிருக்கான் பார்த்தாயா?" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். "இந்தப் பொண்ணு ஒண்ணை எங்கே போய்ப் பிடிச்சான்?" என்று மனத்துக்குள் கேட்டுக் கொண்டார்.

ஊர்வலம் முடிந்து எல்லாரும் ஊர்ச் சாவடியை அடைந்தார்கள். அங்கே பொதுக் கூட்டம் நடக்க ஏற்பாடாகியிருந்தது. மரத்தடியில் பெரிய மேடை கட்டி, பாரத மாதா படத்தை வைத்து அலங்கரித்திருந்தார்கள். சம்பு சாஸ்திரியும் சாருவும் இன்னும் சிலரும் மேடையின் மீது அமர்ந்திருந்தார்கள்.

அந்த சமயத்தில் தீக்ஷிதர் கூட்டத்தில் புகுந்து இடித்துப் பிடித்துக் கொண்டு போய் மேடையருகில் வந்து சேர்ந்தார். சம்பு சாஸ்திரியைப் பார்த்து, "சாஸ்திரிகளே! சௌக்கியமா?" என்று கேட்டார்.

"அடடா! தீக்ஷிதர்வாளா? இங்கே எங்கே வந்தது? எதிர்பாராத விஜயமாயிருக்கிறதே?" என்றார் சம்பு சாஸ்திரி.

தீக்ஷிதரைப் பார்த்ததில் சம்பு சாஸ்திரிக்கு வெறுப்பும் சந்தோஷமும் கலந்தாற்போல் உண்டாயின. 'இந்த மனுஷர் இங்கே எங்கு வந்து சேர்ந்தார்?' என்று ஓர் எண்ணம்; 'இவரிடம் நெடுங்கரையைப் பற்றித் தகவல் தெரிந்து கொள்ளலாமே' என்று ஓர் ஆசை.

"ஆமாங்கணும்! உலகமெல்லாம் இப்ப உம்ம பேச்சாத்தானே இருக்கு? தமிழ்நாட்டு மகாத்மா காந்தின்னு கூட உம்மைப் பத்திச் சொல்றாளே? அப்பேர்ப்பட்டவர் நம்மூர்க்காரராச்சே. அவரைப் பார்க்கணும்னுதான் வந்தேன். உம்மகிட்டத் தனியா ஒரு விஷயமும் பேச வேண்டியிருக்கு."

"அதுக்கென்ன! கூட்டம் முடிந்ததும் பேசலாம்" என்றார் சம்பு சாஸ்திரி.

கூட்டத்தில் வழக்கம் போல் வரவேற்புப் பேச்சுக்கள் முடிந்ததும், சாரு எழுந்திருந்து காந்தி பாட்டு ஒன்று பாடினாள். கூட்டத்திலிருந்தவர்கள் குழந்தையின் பாட்டை ரொம்பவும் ரஸித்து ஆனந்தித்தார்கள்.

பின்னர், சம்பு சாஸ்திரி எழுந்திருந்து பேசினார். பழைய நாட்களில் பாரத தேசம், எவ்வளவு பெருமையுடன் இருந்தது என்பதை எடுத்துச் சொன்னார். தேசம் தற்சமயம் க்ஷீணமடைந்திருப்பதை எடுத்துக் காட்டினார். இந்தத் தேசத்தைப் புனருத்தாரணம் செய்வதற்கு மகாத்மா காந்தி அவதாரம் செய்திருக்கிறார் என்று சொன்னார். ராமாயணம், கீதை முதலிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, நம்முடைய பெரியவர்கள் சொல்லியிருப்பதைத்தான் காந்தி மகானும் சொல்கிறார் என்று எடுத்துக் காட்டினார். பிறகு வர்ணாசிரம தர்மம் என்பதை நம் பெரியோர்கள் என்ன நோக்கத்துடன் ஏற்படுத்தினார்கள் என்பதை விவரித்தார். சாதிகளில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று கிடையாதென்றும், ஒரு வகுப்பாரைத் தீண்டாதவர்கள் என்று ஒதுக்கி வைக்க சாஸ்திரத்தில் இடமில்லையென்றும் ருசுப்படுத்தினார். கடைசியில் மதுபானத்தின் தீங்கை எடுத்துச் சொல்லிப் பேச்சை முடித்தார். உள்ளூர்க்காரர்கள் வந்தனோபசாரம் சொன்ன பிறகு பிரமாதமான உற்சாகத்துடனும் ஜய கோஷங்களுடனும் கூட்டம் கலைந்தது.

பிறகு சம்பு சாஸ்திரி, தீக்ஷிதரைத் தனியாக அழைத்துச் சென்று, "என்ன சமாசாரம் தீக்ஷிதர்வாள்! தனியாய்ப் பேசவேணும் என்றீர்களே?" என்று கேட்டார்.

"ஓய் சம்பு சாஸ்திரி! உம்ம குட்டை எல்லார் மத்தியிலும் உடைச்சுவிடலாம்னு பார்த்தேன். போனால் போறது, நம்ம ஊர்க்காரனாச்சேன்னு விட்டேன்; தெரியுமாங்கணும்?" என்றார் தீக்ஷிதர்.

"குட்டை உடைக்கிறதா? என்ன சொல்றேள், தீக்ஷிதர்வாள்? எனக்கு ஒன்றுமே புரியலையே?"

"உமக்கு ஏங்காணும் புரியும்? பெரிய அழுத்தக்காரராச்சே நீர்? ஆமாம், எவ்வளவு ரூபாய்ங்காணும் சேர்த்திருக்கிறீர் இதுவரையிலே? ரொக்கமாய்ப் பத்தாயிரமாவது இருக்குமா?"

"ரொக்கமாவது, பத்தாயிரமாவது? நான் பணஞ்சேர்க்கறதுக்காக இப்படிக் கிளம்பினேன்னு நினைச்சுண்டயளோ?"

"அப்பாடா! இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமான்னு பேசமாட்டீரா நீர்? சொல்லாத போனால் போம்... பொண் ஒண்ணை அழைச்சுண்டு வந்திருக்கிறீரே? அதை எங்கே புடிச்சீர்? அதையாவது சொல்வீரோ, மாட்டீரோ?"

"குழந்தையா? பராசக்தி கொடுத்தாள், தீக்ஷிதரே!" என்று சாஸ்திரி சொல்லிவிட்டுப் புன்னகை புரிந்தார். அந்தப் புன்னகையில், இதை இந்த மனுஷர் எங்கே நம்பப் போகிறார் என்ற பாவம் தோன்றிற்று. "பராசக்தி கொடுத்தாளா...?" என்று தீக்ஷிதர் ஒரு நீட்டு நீட்டினார். "அப்படி அடியுங்கணும் ஓர் அடி! ஓய் சம்பு சாஸ்திரி! பலே கெட்டிக்காரர் ஆயிட்டீருங்காணும் நீர்!" என்றார்.

"தீக்ஷிதர்வாள்! ஏதோ சமாசாரம் சொல்லணும்னேளே? அதைச் சொல்லுங்களேன்? எல்லாரும் எனக்காகக் காத்திண்டிருக்காளே?" என்று சம்பு சாஸ்திரி கேட்டார்.

"சொல்றேங்காணும், சொல்றேன்! உம்ம ஆம்படையாள் இருக்காளே மங்களம், அவள் அங்கே சாகக் கிடக்காள். நீரானா, இங்கே மீடிங்கு பேசறீர், மீடிங்!"

சம்பு சாஸ்திரிக்குப் பகீர் என்றது. சாவடிக் குப்பத்தில் இருக்கும்போதே, மங்களம் என்ன செய்கிறாளோ என்னவோ என்று சில சமயம் சம்பு சாஸ்திரி எண்ணுவதுண்டு. அவள் விஷயத்தில் நம்முடைய கடமையில் தவறி விட்டோ மோ என்ற எண்ணம் அவர் மனத்தில் அடிக்கடி தோன்றி வருத்துவதுண்டு. இப்போது, "மங்களம் சாகக் கிடக்கிறாள்" என்றதும், அவர் இருதயம் படீர் என்று வெடிக்கிறாப் போல் இருந்தது.

"நிஜமாகவா, தீக்ஷிதர்வாள்! விளையாடறேளா?" என்று கேட்டார்.

"உம்மோடே வந்து விளையாட வர்றேன்! நீரும் பச்சைக் குழந்தை; நானும் பால்யம். இரண்டு பேரும் விளையாட வேண்டியதுதான்! நீர் தான் விளையாடறதுக்குன்னு ஒரு குட்டியைப் பிடிச்சு இழுத்துண்டு வந்திருக்கீர்! எனக்கென்னங்காணும் விளையாட்டு?"

சம்பு சாஸ்திரி தீக்ஷிதரின் இந்த அசந்தர்ப்பப் பேச்சைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், "இல்லை, தீக்ஷிதர்வாள்! மங்களம் அவள் பிறந்தாத்துக்குப் போயிருந்தாளேன்னு கேட்டேன்" என்றார்.

"நீர் வாழ்ந்தாப்பலேயிருக்கு. பிறந்தாத்துக்குப் போனவள் அங்கேயே உட்கார்ந்திருப்பாள் என்று நினைச்சுண்டீரோ? அம்மாவும் பொண்ணும் அப்பவே திரும்பி வந்துட்டாளே? நீர் கடுதாசி, கிடுதாசி ஒண்ணும் போடலேன்னு, உம்ம மாமியார் மண்ணை வாரி இறைச்சிருக்காள், பாரும்! அக்கிரகாரத்துத் தெருவிலே ஒரு பிடி மண் பாக்கி கிடையாது."

சம்பு சாஸ்திரி மேலே தீக்ஷிதரிடம் பேச விரும்பவில்லை. உடனே நெடுங்கரைக்குப் புறப்பட்டுப் போக வேணுமென்று சாஸ்திரியின் மனத்தில் தீர்மானமாகிவிட்டது. எனவே, அவர், "சரி, நீங்க போய்ட்டு வாங்கோ. தீக்ஷிதர்வாள்! நானும் சீக்கிரத்திலே நெடுங்கரைக்கு வந்து சேரறேன்" என்றார்.

"போறேங்காணும், போறேன்! பின்னே, உம்மகிட்ட வந்து நின்னுண்டிருக்கப் போறேனா? ஒரு பத்து ரூபாய் பணம் இருந்தாக் கொடும். அப்புறம் கொடுத்துடறேன்."

"பணமா? பணம் என்கிறதை நான் தொட்டு ரொம்ப நாளாச்சே!"

"நல்ல ஆஷாடபூதிங்காணும் நீர்! ஒரு சிமிட்டா பொடியாவது கொடுப்பீரோ, அதைக்கூடத் தொட்டு இருபது வருஷம் ஆச்சு என்பீரோ?"

"தயவுசெய்து மன்னிக்கணும். நான் என்ன பண்றது? பொடி போடற வழக்கத்தைக்கூட நிறுத்தி விட்டேனே!"

"போங்காணும் போம்! சம்பு சாஸ்திரி சம்பு சாஸ்திரின்னு ஊரெல்லாம் பிரமாதப் பேரு; ஒரு சிமிட்டா பொடிக்குக் கூட வழியில்லை! எப்படியாவது நாசமாய்ப் போம்!" என்று சொல்லிவிட்டு, தீக்ஷிதர் மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்.

அவர் போனவுடனேயே சாரு வந்து, "தாத்தா! அந்த மாமா யாரு தாத்தா? அவர் மூஞ்சியைப் பார்த்தா எனக்குப் பிடிக்கவே இல்லை" என்றாள்.

"எனக்கும்தான் அவரைப் பிடிக்கிறதில்லை, சாரு! ஆனால் அவர் ஒரு முக்கியமான சமாசாரம் சொன்னார். நெடுங்கரையிலே, உனக்கு ஒரு பாட்டி இருக்கான்னு சொல்லியிருக்கேனோல்லியோ? அவளுக்கு ரொம்ப உடம்பு சரியில்லையாம். நாம் நெடுங்கரைக்குப் போய் அவளைப் பார்ப்பமா, சாரு?" என்று சாஸ்திரி கேட்டார்.

சாரு, "உடனே போகணும், தாத்தா! நான் தான் முன்னயே பிடிச்சுச் சொல்லிண்டிருக்கேனே? ஊர்கோலம் போய்ப் போய் எனக்கும் அலுத்துப் போச்சு!" என்றாள் சாரு.

மறு நாளே இருவரும் நெடுங்கரைக்குப் பிரயாணமானார்கள்.